சூ. 207 :

அறத்தொடு நிற்குங் காலத் தன்றி

அறத்தியல் மரபிலள் தோழி என்ப

(11)
 

க - து :  களவியலுள்    “பிறன்வரை   வாயினும்,  அவன்  வரைவு மறுப்பினும்,  முன்னிலை   அறனெனப்  படுதல்என்று இருவகைப் புரைதீர்
கிளவி தாயிடைப்   புகுப்பினும்"  எனத்  தோழிக்குரிய அறத்தொடு நிற்றல்
தலைவியது உடன்பாடின்றி நிகழாது என்கின்றது.
 

பொருள் :  மனைப்பட்டுக்   கலங்கிச்    சிதைந்தவழித்   தோழிக்கு
நினைத்தல்   சான்ற அருமறை  யுயிர்த்தலும்  (கள-21) எனவும், வெறியாட்
டிடத்து  வெருவின்  கண்ணும் எனவும் (கள-21)  உரையெனத்   தோழிக்கு
உரைத்தற்  கண்ணும் (கள-22) எனவும் கூறியவாற்றான் களவொழுக்கத்தைத்
தலைவி   தமர்க்கு   அறிவித்தல் வேண்டும்    என்னும்   கருத்தினளாய
காலத்தன்றித் தோழி  தானே அறத்தொடு  நிற்கும்  முறைமையிலள் எனக்
கூறுவர் நூலோர்.
 

அறத்தொடு  நிற்றலாவது : களவொழுக்கத்தைப்  பொருந்திய  தலைவி
பின்னர்  வரைந்து  கொண்டு  இல்லறமாகிய  மனை  யறத்தை   மேவுதல்
குறிக்கோளாதலின்   அதற்கு    இடையூறாக  வெறியாட்டெடுத்தல், பிறன்
வரைவு   ஆய்தல்  முதலியவை   நிகழுமாயின்   தனது  கற்பிற்கு  ஊறு
நேருங்கொல்  என  அஞ்சித்  தான்   களவின் மணந்த   தலைவனையே
வரைந்தெய்துதற்  பொருட்டுத்  தோழி  வாயிலாகத்  தன்  மனநிலையைத்
தமர்க்குக் குறிப்பான் அறிவிக்கச் செய்தலாகும். அது கற்பொழுக்கமாகிய
 

மனையறத்தொடு   படுதலை   விரும்பி  நிற்கும்  நிலையாம். இதற்குக்
கருத்துப்   பொருள்   களவொழுக்கத்தை   முறையாக   வெளிப்படுத்தல்
என்பதாகும்.  இதனைச்   சொற்பொருளாகக்   கருதி  விளக்கங்  கூறுவர்
உரையாசிரியன்மார்.   அங்ஙனம்    தலைவியது   கருத்தினை  யுணர்ந்த
தோழி   செவிலிக்குக்   குறிப்பான்   உணர்த்தலும்,  செவிலி  நற்றாய்க்கு
வெளிப்படையாக   உணர்த்தலும்   நற்றாய்  தன்  தமர்க்கு  உரைத்தலும்
அறத்தொடு நிலையாயின. (அறம் = இல்லறம்)
 

எ - டு :

மேல் வரும் சூத்திர உரையுள் கண்டு கொள்க.