சூ. 216 :

அன்பே அறனே இன்பம் நாணொடு

துறந்த ஒழுக்கம் பழித்தன்று ஆகலின்

ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே

(20)
 

க - து :

காப்புக்    கைம்மிக்கவிடத்துத்   தலைவிக்குரியதோர்   இயல்பு
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவி இற்செறிக்கப்  பெற்றுக் காவலுற்ற நிலைமைக்கண்
அவள்   தமர்பால்  செலுத்தும்  அன்பும்,  குடிப்பிறப்பிற்குரிய   நெறியும்,
ஆயத்தொடு   விளையாடி  மகிழும்  இன்பமும்,  மறை  புலப்படுத்தற்குத்
தடையாகும்  நாணமும், கருதாமல்  அவற்றை  நீங்கியொழுகும்  ஒழுக்கம்
பழியுடையதன்று   ஆதலான்   காப்புக்   கைம்மிக்கவிடத்து   அவற்றுள்
யாதொன்றும் தலைவி கருதுதல் வேண்டாவாம்.
 

வரைதல்  வேட்கையும் காப்பு  மிகுதியான்  எய்திய  துன்பமும்  மிக்க
வழி  அன்பு முதலிய  பண்புகளைக்  கருதுதற்கியலாமையான்  அவற்றைத்
துறந்தொழுகும்   நடக்கையைச்  சான்றோர்  பழியார்  என்பது  விளங்கப்
‘பழித்தன்று  ஆகலின்’ என்றும்  அவை அறத்தொடு   நிற்றற்கும்  உடன்
போக்கிற்கும்   தடை   செய்வன   ஆதலின் "ஒன்றும் வேண்டா" என்றும்
கூறினார்.
 

இதனான்    மேற்கூறிய   பொருளென   மொழிதல்  நாணழிவாகாமை
புலப்படும்.