சூ. 219 :

அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின்

வழக்கென வழங்கலும் பழித்தன்று என்ப

(23)
 

க - து :

உலகவழக்கிற்கு ஒவ்வாதனவும் நாடகவழக்குப் பற்றிவரின்
வழுவாகா என்கின்றது.
 

பொருள் :பிறப்பும்  குடிமையும்  பற்றிய அறநெறிகட்கு ஒவ்வாதவை
என  உலகவழக்கின்கண்  நீக்கப்  பெறுபவை  அகப்பொருட்  காட்சிக்குப்
பயன்படவருமாயின் அவை  நாடக  வழக்குப்பற்றியனவாம்  எனக்கொண்டு
புலனெறி வழக்கஞ் செய்தலும் வழுவுடையதன்று எனக்கூறுவர் புலவர்.
 

அறக்கழிவுடையன என்றதனான் அவை இன்பத்திற் கழிவுடையன அல்ல
என்பதும்   பொருட்பயம்  படவரின்  என்றதனான்  அவை  நாடகவழக்கு
என்பதும் புலப்படும். அவையாவன :
 

"கயமலர் உண்கண்ணாய்" என்னும் குறிஞ்சிக்கலியுள்

(37)

"இனக்கிளி யாம்கடிந் தோம்பும் புனத்தயல்

ஊசலூர்ந் தாட ஒருஞான்று வந்தானை

ஐய சிறிதென்னை ஊக்கி எனக்கூறத்

தையால் நன்றென்று அவன்ஊக்கக் கைநெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பின் வாயாச்செத்து

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்"
 

என்றாற்போலத் தோழி கூற்றாக வருவனவும்,
 

புலர்குரல் ஏனற் புழையுடை யொருசிறை

மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்

பலர்தில் வாழி தோழி அவருள்

ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி

ஓர்யான் ஆகுதல் எவன்கொல்

நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே (அக-88)

என்றாற் போலத் தோழி கூற்றாக வருவனவும்

மள்ளர் குழீஇய விழவி னானும்

மகளிர் தழீஇய துணங்கை யானும்

யாண்டுங் காணேன் மாண்டக் கோனை

(குறு-31)
 

என்றாற்    போலத்   தலைவி   கூற்றாக   வருவனவும்  தோழி  நடுங்க
நாட்டமாகவும், பல்வேறு கவர்பொருள் கூறி நாடுவனவும் பிறவுமாம்.