சூ. 232 : | அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் |
| வன்புறை யாகும் வருந்திய பொழுதே |
(36) |
க - து : | கிழவோன் செய்வினைக்கு அச்சமாகத் தலைவி அன்புறு தகுந இறைச்சியுட் கிளத்தல் கற்பியலுள் (கற்-7) ஓதப்பெற்றமையான் இது தோழி அன்புறுதகுந இறைச்சியுட் கிளத்தலும் அதன் பயனும் பற்றிக் கூறுகின்றது. |
பொருள் :தலைவனது பிரிவாற்றாமையான் தலைவி வருந்திய பொழுது தோழி கருப்பொருள்களின் செயல்களுள் அன்புறுதற்குக் காரணமானவற்றைச் சுட்டிக் கூறுதலும் தலைவியை ஆற்றியிருத்தல் வேண்டுமென வற்புறுத்துங் குறிப்பினவாகும். |
‘வருந்திய பொழுது’ எனவும் ‘வன்புறை யாகும்’ எனவும் கூறியதனான் இது தோழி கூற்றிற்கமைந்த இலக்கணமாதல் தெளியப்படும். உம்மை தலைவனின் பண்பு நலங்களைக் கூறி வெளிப்படையாக வற்புறுத்துதலேயன்றி இறைச்சியுட் சுட்டலும் வன்புறையாகும் எனப் பொருள் தருதலின் எச்ச உம்மையாம். |
எ - டு : | நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர் |
| பிடிபசி களைஇய பெருங்கை வேழம் |
| மென்சினை யாஅம் பொளிக்கும் |
| அன்பின தோழியவர் சென்ற ஆறே |
(குறு-37) |
எனவரும். இதன்கண் பிடியின்பசியைக் களைதற்கு வேழம் யாமரத்தினைப் பொளிக்கும் என்றதனான் அஃது அன்புறு தகுநவாகிய இறைச்சியாயவாறும், யாமரத்தினைப் பொளித்து வேழம் அளிக்கும் வரை பிடி தன்பசியைப் பொறுத்தாற்றியிருக்கும் என்பதும் அதுபோலத் தலைவன் பொருள் முற்றி மீளுந்துணையும் நீயும் பொறுத்தாற்றி இருத்தல் வேண்டுமெனவும் தோழி குறிப்பான் உணர்த்தி வற்புறுத்தியவாறு கண்டு கொள்க. |
நசை பெரிதுடையர் நல்கலும் நல்குவர் எனத் தலைவனது காதலை வெளிப்படையாகக் கூறியிருத்தலின் அஃது உள்ளுறை உவமமாகாமையும் வன்புறைக்கு வண்ணனை மாத்திரையாய் நிற்றலையும் கண்டுகொள்க. |