சூ. 244 : | அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் |
| தன்வயின் வருதலும் வகுத்த பண்பே |
(48) |
க - து : | மேற்கூறிய உள்ளுறை இலக்கணம் பற்றியதொரு ஐயம் அகற்றுகின்றது. அஃதாவது ஐவகைப்பட்டு வரும் என்ற உள்ளுறைக் கூற்றுக்கள் "தெரிபுவேறு நிலையிலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற்றென்ப பொருண்மை நிலையே" (சொல்-152) எனவகுத்துக் கூறிய இருவகையுள் குறிப்பிற்றோன்றல் என்னும் வகையின ஆதலான் அவற்றைச் சொல்லதிகாரத்துள் கூறாமல் ஈண்டுக் கூறியது நூலோர் கொண்ட முறைமை என்பதாம். என்னை? அகப்பொருட் செய்யுட்கண் உள்ளுறையாகிய குறிப்புப்பொருள் பற்றிவரும் தொடர்கள் முதற்கண் தமக்குரிய வெளிப்படைப் பொருள்களை உணர்த்திப் பின்னர்க் குறிப்புப் பொருளையும் தருவனவாகும். அகப்பொருள் ஒழுகலாறல்லாத பிறபொருள் பற்றிவரும் செய்யுட் கண்ணும் உரையின் கண்ணும் வரும் தொடர்கன் வெளிப்படைப் பொருள் உணர்த்தின் குறிப்புப்பொருள் தரமாட்டா. குறிப்புப் பொருள் உணர்த்தின் வெளிப்படைப் பொருள் தரமாட்டா. ஆதலின் "இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே என்றார். |
பொருள் :மேற்கூறிய ஐவகை உள்ளுறைக் கூற்றுக்கள் அகப்பொருள் என்னும், முடிவில்லாத ஒழுக்கச் சிறப்பினான் ஆகிய இன்பப் பொருள் பற்றிய செய்யுட்கண் மரபாக வருதலும் நூலோர் அமைத்ததொரு முறைமையாகும். |
‘சிறப்பு’ என்றது களவும் கற்புமாகிய அகஒழுக்கத்தினை. ‘இன்பம்’ என்றது ஊடலும் கூடலுமாகிய பொருளினை. ‘இன்பந்தன் வயின்’ என்றது இன்பத்தின்வயின் என்றவாறு. ‘தன்’ சாரியை. வருதலும் என்ற உம்மை சொல்லிலக்கணமாக வருதலேயன்றி எனப்பொருள் தருதலின் எச்சவும்மை. இச்சூத்திரத்திற்கு இதுவே செம்பொருள் என்பது மேல்வரும் சூத்திரத்தானும் விளங்கும். |