சூ. 247 :

அன்னை என்னை என்றலும் உளவே

தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்

தோன்றா மரபின என்மனார் புலவர்

(61)
 

க - து :

இசைதிரிந்திசைக்கும்    ஒருசார்    முறைப்பெயர்    வருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :முறைப்பொருள்    பயவாமல்   மகடூ,   ஆடூ   என்னும்
கருத்தமைய அன்னை எனக் கூறலும் என்னை [என் + ஐ]  எனக்  கூறலும்
உளவாதல்   புலனெறி    வழக்குப்     பற்றிய     முறைமை,    அவை
சொல்லிலக்கணத்தானும்    எழுத்திலக்கணத்தானும்     வரையறைப்பட்டுத்
தோன்றாத மரபினையுடையவை என்று கூறுவர் புலவர்.
 

அன்னை என்பது படர்க்கைச் சொல்லாக  நிற்றலும்  என்னை  என்பது
தன்மைச்  சொல்லாக  நிற்றலும்  அவை   என்னை,   நின்னை,  தன்னை
என்னும் முறைப்பெயர் போல முதனிலையும் இறுதிநிலையுமாகப் பகுத்துணர
நில்லாமையும் பற்றிச் சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்றார்.
 

எ - டு : அன்னாய் இவன்ஓர் இளமா ணாக்கன் (குறு-33) இது தலைவி
தோழியை விளித்தது.  அன்னாய்  வாழி  வேண்டன்னை  (ஐங்-202)  இது
தோழி தலைவியை விளித்தது.
 

எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது (குறு-27) இது  தலைவனைத்
தலைவி  என்னை  என்றது.  பிறவும்  சான்றோர்  செய்யுட்களுள்  கண்டு
கொள்க.
 

இனி நச்சினார்க்கினியர் என்னை மார்பிற் புண்ணும் (புறம்-285) எனவும்
என்னை  முன்நில்லன்மின்  (குறள்-781)   எனவும்    எடுத்துக்   காட்டிப்
புறப்பொருளிலும் வருதல் கொள்கை  என்பார்.  ஈண்டுக்  கூறிய  என்னை
என்ப. காதலன்,  தந்தை,  தமையன்  என்னும்  முறைப்பெயர்ப்  பொருள்
நோக்குடையது. புறப்பாடலில் வரும் என்னை என்பது தலைவன்  என்னும்
பொருள் உடையது. ஆதலின் அவர் கருத்து ஒவ்வாமையறியலாம்.