பொருள் : திரிபு அமையாத அச்சமென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள் அணங்கும் விலங்கும் கள்வரும் தம்மிறையும் என்னும் நான்குமாம் எனக் கூறுவர் புலவர். |
இவை நகை முதலாயவற்றின் பொருள்களைப் போல இருபாலும் பற்றாமல் பிறபொருள் பற்றியே வருமென்பது தோன்றப் பிணங்கல் சாலா அச்சம் என்றார் எனக் கூறுவர் பேராசிரியர். அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் அசுரர் ஈறாகிய பதினென்கணனும் நிரயப்பாலரும், பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிரும் உருமிசைத் தொடக்கத்தனவும் என்பார் அவர். |
1. அணங்காவது : கட்புலனாகாமல் தம் ஆற்றலாற்றீண்டி வருத்தும் சூர்முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம். |
எ - டு : | "வாழி வேண்டன் னைநம் படப்பைச் |
| சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து |
| தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே |
| நனவின் வாயே போலக் |
| கனவாண்டு மருட்டலும் உண்டே" |
(அகம்-158) |
என்பது அணங்கு பற்றித் தோன்றிய அச்சமாம். |
2. விலங்காவது :அரிமாவும் கோண்மாவும் பிறவுமாகிய கொடு விலங்குகளாம். "பிணங்கல் சாலா" என்றதனால் ஆண்டலைப் புள், அரவு முதலியனவும் கொள்க. |
எ - டு : | இரும்பிடிக் கன்றொடு விரைஇய கயவாய் |
| பெருங்கை யானைக் கோள்பிழைத் திரீஇய |
| அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள் |
| தமியை வருதல தனினு மஞ்சுதும் |
(அக-118) |
எனவரும். |
| யானை தாக்கினும் அரவுமேற் செலினும் |
| நீல்நிற விசும்பில் வல்லேறு சிலைப்பினும் |
| சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை |
(பெரும்பாண்-134) |
என்பதனான் அரவு முதலாயவை அஞ்சத்தக்க பொருளாயினவாறு காண்க. |
3. கள்வராவார் :ஆறலைகள்வரும் அறமில் நெஞ்சத்துக் குறுஞ்செயல் புரியும் கொடியோருமாவார். |
எ - டு : | அற்றம்பார்த் தல்கும் கடுங்கண் மறவர்தாம் |
| கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர் |
| துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலின் |
| புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை |
(கலி-4) |
என்பதனாற் கள்வர் அச்சத்திற்குரியராமாறு கண்டு கொள்க. |
4. தம்மிறை :என்பது இரட்டுற மொழிதலாய் (தம் இறை) அரசனையும், வழிபடு தெய்வத்தையும் (தம்மிறை) தாம்புரிந்த தீவினைக்குற்றத்தையும் குறித்து நின்றது. எனவே இவ்இருவகை பற்றியும் அச்சம் பிறக்குமென்பதாயிற்று. |
எ - டு : | எருத்துமேல் நோக்குறின் வாழலே மென்னும் |
| கருத்திற்கை கூப்பிப் பழகி - எருத்திறைஞ்சிக் |
| கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை |
| மேல்வண்ணங் கண்டறியா வேந்து |
(பேரா-மேற்கோள்) |
என்பது அரசன் பொருளாக அச்சம் பிறந்தது. |
| மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் |
| கொடியோர்த் தெறூஉ மென்ப, யாவதும் |
| கொடியோ ரல்லரெம் குன்று கெழுநாடர் |
(குறு-87) |
என்பது தலைவி தலைவன் பொருட்டுத் தெய்வத்தை அஞ்சியதாம். |
பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் (குறள்-142) அச்சமே கீழ்கள தாசாரம் (குறள்-1075) என வருவனவற்றான்தமது குற்றம் அச்சத்திற்கு ஏதுவாதலைக் கண்டு கொள்க. இது தன்கண்ணும் பிறர்கண்ணும் என்னும் இருபாலும் பற்றிவரும். ஏனைய பிற பொருட்டாயே வருமெனக் கொள்க. "பிணங்கல் சாலா" என்றதனான். |
| அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது |
| அஞ்சல் அறிவார் தொழில் |
(குறள்-427) |
என்றதனான் பழியொடுவருவன பற்றி அஞ்சும் அச்சமும் இதன் பாற்படுத்துக் கொள்க. |