|
சூ. 264 : | அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் | | இல்வழி யுறுத்தல் இருகையு மெடுத்தலொடு | | சொல்லிய நான்கே மூன்றென மொழிப | (15) | க - து : | அல்குல்தைவரல் முதலிய நான்கும் மூன்றாங் கூறு என்கின்றது. | பொருள் :அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல் வலியுறுத்தல், இருகையுமெடுத்தல் என்று சொல்லப்பட்ட நான்கும் மூன்றாங் கூறு என மொழிவர் ஆசிரியர். |
இவை நான்கும் "சிறப்புடை மரபினவை களவு" (கள-9) என்னுமிடத்துக் கூறிய நாணுவரையிறத்தற்கும் "இன்னவை நிகழும்" (கள-10) என்னுமிடத்திற் கூறிய தன்னிலை யுரைத்தற்கும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய கிளவிகளுள் இடம்பெற்றுத்தழாஅல், இடையூறு கிளத்தல் முதலியவற்றிற்கும் உரியவாக நிகழும் மெய்ப்பாட்டுப் பொருள்களாதலின் "சொல்லிய" நான்கு என்றார். ஒடுவும் ஏகாரமும் மேற்கூறியாங்கு நின்றன. | 1. அல்குல்தைவரலாவது : உடைபெயர்த்துடுத்தவழி அவ்வுடை அற்றம் மறைய நன்கு பொருந்தியுளதா என்பதனை அறிய இருப்புறுப்பினைச் சூழ்ந்துள்ள ஆடையைத் தைவருதலாம். தலைமயிரை வாரிமுடிதலைத் தலைவாரி முடித்தல் என்பது வழக்காதலின் அல்குலைச் சூழ்ந்த ஆடையைத் தைவருதலை அல்குல் தைவரல் என்றார் என்க. "அல்குல்" என்னும் இச்சொல் இருத்தல், தங்குதல் என்னும் பொருள்தரும். ‘அல்கல்’ என்னும் தொழிற்பெயரடியாக ஆக்கிக் கொள்ளப்பட்டதொரு திரிசொல்லாகும். ஆதலின் அஃது இருப்புறுப்பினையும் இடக்கர் உறுப்பினையும் இடத்திற்கேற்ப உணர்த்தி நிற்கும். இடைக்கால இலக்கியங்களில் பெரும்பான்மையும் இடக்கர் உறுப்பினையே குறித்து வழங்கி வருதலான் உரையாசிரியன்மார் நூலாசிரியர் கருத்துணராது விளக்கம் கூறிச் செல்வாராயினர். | ச.சோ. பாரதியார் இருப்புறுப்பெனப் பொருள் கொண்டாராயினும் அவ்வுறுப்பினைத் தைவரல் என்றே அவரும் பொருள்கூறிச் சென்றார். அவர் தம் விளக்கம் குலமகளிர் பண்பாட்டிற்கு இழுக்காகு மெனவிடுக்க. | 2. அணிந்தவை திருத்தலாவது :அற்றம் மறைக்கும் உடையினைத் தைவந்தவள் அதனொடு இடையிற் புனைந்த தழையணி, மணிமேகலை முதலிய அணிகலன்களையும் குறங்குசெறி, சிலம்பு முதலிய அணிகலன்களையும் பண்டுபோல அமையத் திருத்துதலாம். இவை செவிலி முதலியோரால் புனையப்பட்டமை தோன்ற ‘அணிந்தவை’ என்றார். எனவே ஊழணி வேறு. இவை வேறென்பது புலனாகும். | இவை இரண்டும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். சான்றோரிலக்கியங்களுள் எடுத்துக்காட்டு வந்துழிக் கொள்க. | 3. இவ்வலியுறுத்தலாவது :தலைவன் தனது மெய்தொட்டுப் பயின்று முன்னிலையாக்கி இடம்பெற்றுத் தழுவமுற்பட்டுழிப், பாலது ஆணையான் உள்ளம் அவன் வழிச்சேறலைத் தனது மடப்பத்தான் தகைத்தற் பொருட்டு, செறாஅச் சிறு சொல்லும் |
செற்றார் போல்நோக்கும் உடையவளாய், ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்கித் தன் இற்பிறப்பின் மாண்பினைத் தலைவி வலியுறுத்தலாம். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக்காண்க. | 4. இருகையுமெடுத்தலாவது :தலைவன் தன்னைத் தழுவும் குறிப்பொடு நெருங்குமிடத்து நாணம் மீதூர்தலான் தன் முகத்தினை மறைத்துக் கொள்ளும் கருத்தொடு கைகளை முகம் நோக்கி எடுத்தல், களவியலுள் ‘இடையூறு கிளத்தல்’ என்னும் கிளவிக்குரியவாய் நிகழும் மெய்ப்பாட்டுப் பொருள் இதுவென்க. இதனை இடைக்காலத்தார் "நாணிக்கண்புதைத்தல்" என்பர். இதற்குப் பேராசிரியர் கூறும் விளக்கம் நாணுடைய மகளிர்க்கு ஒவ்வாமையறிக. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டு கொள்க. | இவை நான்கும் கூடுதலுறுதற்கு நிமித்தமாகலின் இவற்றின் பின் இயற்கைப்புணர்ச்சி நிகழுமென்க. எனவே புகுமுகம் புரிதல் முதல் இருகையுமெடுத்தல் இறுதியாக உள்ள பன்னிரண்டும் புணர்ச்சிக்கு முன் நிகழும் "மன்னிய வினைய நிமித்தமாம்" என்பது புலனாகும். |
|