மேற்கூறிய இருபத்து நான்கும் அவை போல்வன பிறவும் தனித்தனி மெய்ப்பாடு போலும் என மயங்கற்க. அவையாவும் காம ஒழுக்கத்திற்கு நிமித்தமாகிய பொருள்களே என்பது விளங்க "வினைய நிமித்தம் என்ப" என்றார். |
அன்ன பிறவாக வருவன "அகத்திணைக்குரிய பொருளாக வரல் வேண்டுமென்பார்" அவற்றொடு சிவணி என்றார். |
அவை வருமாறு : மறைந்தவற் காண்டல், தற்காட்டுறுதல், நிகழ்ந்தவையுரைத்தல், கையுறை மறுத்தல் முதலியவாம். |
எ - டு : | செல்லும் மன்னோ மெல்லம் புலம்பன் |
| செல்வோன் பெயர்புறத் திரங்கி முன்னின்று |
| தகைஇய சென்றவென் நிறையில் நெஞ்சம் |
| எய்தின்று கொல்லோ ..... |
(அகம்-330) |
என்பது மறைந்தவற் காண்டல். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
| இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த் |
| துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே |
| நன்றுமன் வாழி தோழி ..... |
(குறு-98) |
என்பது தற்காட்டுதல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
| துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதவென் |
| மம்மர் வாண்முகம் நோக்கி, அன்னைநின் |
| அவலம் உரையென் றனளே, கடலென் |
| பைஞ்சாய்ப் பாவை கொண்டு |
| வண்டலஞ் சிறுமனை சிதைத்த தென்றேனே |
(நச்-மேற்கோள்) இது நிகழ்ந்தவையுரைத்தல். இஃது அச்சத்திற்கும் இளிவரலுக்கும் பொருளாக அமையும். |
| நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன |
| வயலையஞ் சிலம்பின் தலையது |
| செயலையம் பகைத்தழை வாடு மன்னாய் |
(ஐங்-211) |
இதன்கண் தழை வாடும் என்றமையான் கையுறை மறுத்தமை புலப்படும். இஃது அச்சத்திற்கும் அழுகைக்கும் பொருளாக அமையும். |
பிறவும் இங்ஙனம் மெய்ப்பாடு தோன்றுதற்கு ஏற்புடைய பொருளாக வருவனவற்றையெல்லாம் ஓர்ந்து இதன்கண் அடக்குக. |