சூ. 287 :அவைதாம்
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
என்ன மான என்றவை எனாஅ

ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க

வென்ற வியப்ப என்றவை எனாஅ
எள்ள விழைய விறப்ப நிகர்ப்பக்
கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅக்
காய்ப்ப மதிப்பத் தகைய மருள
மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅப்
புல்லப் பொருவ பொற்பப் போல
வெல்ல வீழ ஆங்கவை எனாஅ
நாட நளிய நடுங்க நந்த
ஓடப் புரைய என்றவை எனாஅ
ஆறா றவையும் அன்னவை பிறவும்
கூறுங் காலைப் பல்குறிப் பினவே
(11)
 

க - து:

உவமத்தையும் பொருளையும்  இணைத்து  உவமத்  தன்மையை
உணரவரும் உவமச்   சொற்களின்   நிலையும்   ஒரு  கூற்றுத்
தொகையும்  உணர்த்துகின்றது.
 

பொருள் :சுட்டிக் கூறப்பெறும் உவமச் சொற்கள்தாம் அன்ன என்பது
முதலாகப்  புரைய   என்ப   தீறாகச்    சொல்லப்பட்ட    முப்பத்தாறும்
அவைபோல்வன  பிறவுமாம்.  அவற்றைக்  கூறுமிடத்து  அவை  பல்வேறு
குறிப்பினவாகும்.
 

உவமச்  சொற்கள் (உவமஉருபுகள்)  தொழில் முதனிலைச் சொல்லாயும்
பெயரெச்சச் சொல்லாயும்   வினையெச்சச்   சொல்லாயும்   வினைமுற்றுச்
சொல்லாயும்  அமைந்து   பொருள்   விளக்கஞ்   செய்தலின்  "பல்குறிப்
பினவே" என்றார்.
 

அவைதாம்  என்றது  "சுட்டிக்  கூறா உவம மாயின்" என்புழிச்  சுட்டிக்
கூறப்படுதலும்   பெறப்பட்டமையான்   அங்ஙனம்   சுட்டிக்   கூறப்படும்
சொற்களை  உணர்த்தி   நின்றது.    உவமம்    என்பது    உவமஉருபுச்
சொற்களைக்கருதி நின்றது.
 

என்றவை,   என்பன   இறந்தகாலம்  பற்றி  நின்ற வினையாலணையும்
பெயர்கள்.   ஆங்கவை   என்பதனுள்    ஆங்கு   என்பது   இசைநிறை
இடைச்சொல்லாகவும்  அவை   என்பது சுட்டுப்   பெயராகவும்   கொள்க.
எனாஅ என்பவை   எண்ணிடைச்  சொற்கள்.  அவை   செய்யுளிசைகருதி
அளபெடுத்து   நின்றன.   ஆறாறவையும்  என்பதனை அவை  ஆறாறும்
எனத்துணித்துக் கூட்டிப்பொருள் கொள்க.
 

அன்ன பிறவாவன : நேர நோக்க (இவை வகைச் சூத்திரத்துள் வருவன)
என்பனவும்; அமர, அனைய,  ஏர்ப்ப,  அற்று,  செத்து,  கெழுவ,  மலைய
(இவை   பேராசிரியர்   காட்டியன)   என்பனவும்;  ஏந்து,   சீர்,  (இவை
இளம்பூரணர் காட்டியன என்பனவும்;) ஏச, தேர், நவில், நாறு, மயங்க, ஆர்,
ஈன்ற,   முரணிய,    வாய்த்த,   உறைக்கும்,    வௌவும்  (இவை சங்கச் செய்யுட்களுள்   காணப்படுவன)   என்பனவும்;      இன்ன    என்பதன்
கடைக்குறையாய ‘இன்’ என்பதும், இவ்வாறு ஒப்புணர்த்தி வரும் பிறவுமாம்.
 

இன்   என்பது   ஐந்தாம்  வேற்றுமைப்பொருள்  பற்றி  வருமென்பார்
பேராசிரியர்.  ‘இன்  என்னும் வேற்றுமை   உருபு   ஒப்புணர்த்தி  வரும்
என்பது   உரையாசிரியன்மார்  பலர்  கருத்தாகும். இடைக்கால  இலக்கண
நூலார் கருத்தும்    அதுவே. அது   பொருந்தாதென்பது   சொல்லதிகார உரையுள் விளங்கக் கூறினாம்.
 

மற்றும் பேராசிரியர் "எனவென்னும் எச்சம் பற்றி வருவனவும்" என்பார்.
அதனை  இன்ன என்பதன் திரிபாகிய என்ன என்பதன் இடைக்குறைவாகக்
கோடலே உரிச்சொல் மரபிற்கொத்த தென்க.
 

இனி, இவ்வுவமச் சொற்களை வினை, பயன், மெய், உரு என்னும் நால்
வகைக்கும்  பிரித்து  உரிமை  செய்து கூறுவார். அவற்றுள் கூறப்பெறாமல்
ஈண்டுக்  கூறப்பெற்றவை  ஒன்ற, என்ற,  மாற்ற,  பொற்ப,  நாட,  நடுங்க
என்னும் ஆறுமாம். ஈண்டுக் கூறாமல் வகைச் சூத்திரத்துக் கூறப்பெற்றவை
நேர, நோக்க  என்னும்  இரண்டுமாம். வகைச்  சூத்திரத்துக்  கூறப்பெறாத
ஆறும் பொதுவானவை என்பார் பேராசிரியர்.
 

வகைச்   சூத்திரத்துக்  கூறப்பெறாத ஆறற்கும் அன்னபிற என்பதனாற்
கொள்ளப்பட்டவற்றிற்கும் ஈண்டு  எடுத்துக்காட்டுத் தருதும். ஏனைவற்றிற்கு
அவ்வச் சூத்திரவுரையுள் காட்டுதும்.
 

எ - டு:

1.வேலொன்று கண்ணார்மேல்
வேட்கைநோய் தீராமோ
(பேராசிரியர்
மேற்கோள்)

2.வாயென்ற பவளம்(")

3.மணிநிற மாற்றிய மாமேனி(")
4.அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத்
தோன்றி
(அக-11)

5.  வேயொடு நாடிய தோள்  (பேரா-மேற்)
6. படங்கெழு நாகம் நடுங்குமல்குல் (")
7.மானமர் நோக்கங் கலங்கிக் கையற்று(குறிஞ்சி-25)
8.  மலைமாறு மலைக்குங் களிற்றினர் (புறம்-197)
9. 
 
நெருஞ்சியனைய வென்பெரும்
பணைத்தோளே
(குறுந்-315)
10.முத்தேர் முறுவலாய் (ஏர்)(கலி-93)
11.கொடிச்சி யின்குரல் கிளிசெத்து
அடுக்கத்துப் பைங்குரல் ஏனல்
படர்தருங்கிளி
(ஐங்-289)
12.துறந்தார் பெருமை துணைக்கூறின்
வையத்து இறந்தாரை எண்ணி
கொண்டற்று
(குறள்-22)
13.யாழ்கெழு மணிமிடற் றந்தணன்(அகம்-கடவுள்)
14.துணை மலரெழில் நீலத் தேந்தெழில்
மலருண்கண்
(கலி-14)
15.எச்சிற் கமையாது பார்த்திருக்கு மச்சீர்(நாலடி-345)
16.மாசற மண்ணுற்ற மணி ஏசு
மிருங்கூந்தல்
(கலி-77)

      

17.இளிதேர் தீங்குரல் இசைக்கு மத்தம்(அகம்-33)

 

18.நூல்நெறி நுணுங்கிய கால் நவில் புரவி(அகம்-314)
19.பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு(நற்-250)

 

20.வௌவல் காரிருள் மயங்கு மேனியன்(பரி-15)

 

21.ஒருதிறம் பண்ணார் தும்பி பரந்திசை யூத(பரி-17-12)

22.மின்னீன்ற விளங்கிணர்(பரி-8-14)

23.பொருகயல் முரணிய உண்கண் (குறு-250)

 

24.முகை வாய்த்த முலைபாயக்
குழைந்த நின்தார்
(கலி-68)

25.தண்டளிர் வௌவும் மேனி(ஐங்-38)

26.இலங்குமுத் துறைக்கும் எயிறு
கெழுதுவர்வாய்
("-185)

 

27.கார்கருதி வார் முரசமார்க்குங்(பு.வெ.மா-103)
 

இங்ஙனம்   இவை   தொழில்   முதனிலைச்சொல்  முதலிய பல்வேறு
குறிப்பினவாய்   அமைந்து  பொருளொடு   உவமத்தைத்   தொடர்புறுத்தி
விளக்கி ஒப்பில் வழியாற் பொருள் செய்து வருமென்க.
 

ஆசிரியர்    இவ்வுவமச்   சொற்களை  (உருபுகளை) ஒப்பில் வழியாற்
பொருள்   செய்குந  எனச் சொல்லதிகாரத்துள்   இடைச்சொற்களின்  ஒரு
கூறாக ஓதினார். அவற்றையே ஈண்டு உவமம் என்னும் குறியீட்டாற் சுட்டிக்
கூறினாரென அறிக.
 

இவற்றை   உவமஉருபு  என  இடைக்கால நூலார் வழங்குவர். உவமம் எனினும்  உவமஉருபு  எனினும்  உவமச்சொல்  எனினும்  உவமவாய்பாடு எனினும் ஒக்கும்.  ஆயினும்   இவற்றை  வேற்றுமை உருபுகளைப் போலக்
கருதற்க. வேற்றுமை  உருபுகள்  திணை, பால்,  இடங்கட்குப் பொதுவாய்ப்
பெயரின் பின்னர்ப் பெயரொடு இணைந்து வரும். தனித்து வாரா. தனித்துப்
பொருள் பயவா.  உவம  உருபுகள்  பல்வேறு  குறிப்பினவாய்  அமைந்து
தத்தங்  குறிப்பிற்  பொருள் செய்வனவாக   வரும். அதனான்  இவற்றைத்
தத்தங் குறிப்பிற் பொருள்   செவ்வனவாக வரும்  இடைச்சொற்களின் பின்
வைத்து ஆண்டு ஓதினார். தத்தங் குறிப்பிற் பொருள்  செய்யும் மற்று, பிற,
தஞ்சம் முதலிய  இடைச்சொற்கள்  பெயர்த்தன்மையுற்றுப் பொருளுணர்த்தி
நிற்குமாறு     போல    உவம       உருபுகளாகிய    இடைச்சொற்கள்
வினைத்தன்மையுற்றுப் பொருளுணர்த்தி வருமென அறிக.
 

உவமச் சொற்கள் தனித்துப் பொருளுணர்த்தும் எனக்கூறின் "தமக்கியல் பிலவே"   (இடை-1)   என்பதனொடு  மாறுகொள்ளுமெனின்? கொள்ளாது;
என்னை? உவமத்தையும் பொருளையும்  இணைப்பதற்கு அவை எச்சமாயும்
முற்றாயும் முதனிலைச்   சொல்லாயும்    வினைத்தன்மையுற்று  வருங்கால்
பெயரையும், வினையையும்  சார்ந்தல்லது தனித்து  வாராமையான்   என்க.
அதனானன்றே ஆசிரியர் "பெயரொடும் வினையொடும் நடை பெற் றியலும்"
என்றார் என்க.
 

இனி, உவம உருபுகளுள்  சில  பெயராயும் நிற்குமெனப் பிறழக் கருதிக்
கூறினாருமுளர்.  அவர் "மழையேர் ஐம்பால்"  என்பதன்கண்  ஏர் என்பது
பெயராக நின்றதென்பார். அது   மழைநேர் ஐம்பால்   என்னும் பாடத்தின்
பிழைவடிவமென்க. மற்று, ஏர் என்பது "முத்தேர்  முறுவலாய்" (கலி-)  என
உவமச்சொல்லாயும் வரும். அஃது ஏர, ஏர்ப்ப எனவும் வரும். ஆண்டு ஏர்
என்பது   எழுச்சி,    இலங்குதல்    என்னும்  பொருள்படும் உரிச்சொல்
வினைத்தன்மையுற்று முதனிலைத் தொழிற்சொல்லாய் நின்றதென்க.
 

இனி,   உவமச்சொற்களை   அவற்றின்  உரியடிகளை (வேர் நிலையை)
ஓர்ந்து அவை வினை பயன் மெய் உரு என்னும் நான்கற்கும் வகைப்பட்டுச்
சிறந்துரிமை பெற்று வருமாறு முறையே கூறுவார்.