சூ. 288 :

அன்ன ஆங்க மான விறப்ப

என்ன உறழத் தகைய நோக்கோடு

கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்

(12)
 

க - து : 
 

வினை   உவமத்திற்கு   ஏற்கும்    உவமச்சொற்கள்   இவை
என்கின்றது.
 

பொருள் :தொழிற்றன்மை   கருதிய   அன்ன   முதலாகிய  எட்டும்
வினையுவமத்தின் பாலாக  வரும் உவமச்சொற்களாம். ஒடு  எண்ணின்கண்
வந்தது. கண்ணிய என்பதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.
 

எ-டு:

1.எரியகைந் தன்ன தாமரைப் பழனத்து(அகம்-106)

 

2.கயநாடி யானையின் முகனமர்ந்தாங்கு (அகம்-6)
3.புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப்பிறழும்
(பெரு-269)
4.புலி விறப்ப ஒலி தோற்றலின்(இளம்-மேற்)
5.புலி என்னக் கலி சிறந்தூராஅய் ( " )
      6.செருநர்த் தேய்த்த செல்லுறழ்த் தடக்கை(முருகு-5)

 

7.பொருகளிற் றெருத்தின் புலிதகையப் பாய்ந்து (இளம்-மேற்)

 

8.மான்நோக்கும் நோக்கு மடநடை
ஆயத்தார்
 

எனவரும்.  இவை  எட்டும்   வினையுவமத்திற்குச்  சிறந்து வருதற்குக்
காரணம் ஒருவாறு கூறுதும்.
 

அன்னவென்பது   அன்  (ஆன்)  என்னும்  சுட்டடியாகப் பிறந்து நால்
வகைக்கும்   ஒப்பக் குறிப்பு  வினை  இயல்பிற்றாய்    வருதலின்  ஈண்டு
முதற்கண்     ஓதப்பட்டது.   ஆங்கு   என்பது    அவ்வாறு   என்னும்
பொருட்டாகலின் தொழிற்றன்மையைச் சுட்டுவதற்குச் சிறந்ததாயிற்று. மானும்
என்பது   மன்    (மன்னுதல்)   என்னும்   இடைச்சொல்லடியாகப் பிறந்து
நிலைபேறு   என்பது  பொருளாக   வருதலின் வினைக்குச் சிறந்ததாயிற்று.
விறத்தல்   என்பது   செறிவு   என்னும்   பொருட்டாதலின்  வினைக்குச்
சிறந்ததாயிற்று.    என்ன    என்பது    என்று    சொல்லுதல்  என்னும்
பொருண்மைத்தாகலின்    வினைக்குச்   சிறந்ததாயிற்று.   உறழ்  என்பது
முரணாதல், எதிர்தல் என்னும்  பொருட்டாகலானும் தகைய (தகுதி) என்பது
பொருந்துதல் என்னும் பொருட்டாகலானும் நோக்கு என்பது செயல் பற்றிய
குறிப்பாகலானும்   இவை   வினையுவமத்திற்குச்   சிறந்துரிமையாயின. பிற
இயைபுகள் உளவாயினும் ஓர்ந்து கொள்க.