சூ. 314 :

அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே

நிரல்நிறுத் தமைத்தல் நிரல்நிறை சுண்ணம்

வரல்முறை வந்த மூன்றலங் கடையே

(38)
 

க - து :

உவமம்   அடுக்கி  வருமாறும் அஃது அடுக்கும் முறைமையும்
பற்றிக் கூறுகின்றது.
 

பொருள் :ஒரு பொருளுக்கு ஒத்த உவமங்களை நிரல்பட அமைத்துக்
கூறுதலும், உவமத்தையும்  பொருளையும்  வேறுவேறாக  நிறுத்திக் கூட்டிக்
கொள்ளுமாறு   கூறுதலும் உவமத்தையும்  பொருளையும்  ஒருங்கு உடன்
இணைத்துக் கூறாமல்  துணித்து  இடையே வேறு   சொற்களை  அடுக்கிக்
கூறுதலுமாகி  வரலாற்று முறைமையான்  வந்த  அம்மூன்று  இயல்பினவாக
வருதலல்லாதவிடத்து   அடுக்கிக்  கூறும் உவமத்தோற்றத்தினை  நீக்குதல்
இலக்கண முறைமையாம்.
 

என்றது; கவர்பொருள்  படாதவாறு  உவமங்களை  நிரல்பட  அடுக்கிக்
கூறலும் பொருளையும்  உவமத்தையும் நிரல்நிறையாக அமைத்து அடுக்கிக்
கூறலும் உவமத்தையும் ஒருசேரப் பொருளையும் ஒருங்கிணைத்துக் கூறாமல்
சுண்ணப்பொருள்   கோளமைய   இடையே சொற்களை அடுக்கிக் கூறலும்
நல்லிசைப்   புலவோர்  செய்யுள் மரபாகலான் அங்ஙனம் அடுக்கிக் கூறும்
உவமத்தோற்றம் தொல்லோர் இலக்கண நெறியாகும். அம்மூவகையானன்றிப்
பிறவாறு    அடுக்கிக் கூறுதல்  இலக்கண  நெறியன்று என நீக்கி விடுதல்
முறைமையாம் என்றவாறு.
 

1) நிரல்நிறுத்தமைத்தல் என்பது : ஒரு  பொருளுக்கே அதன் பல்வேறு
நிலைகளைச் சுட்டியுணர்த்தல் வேண்டியவழிப் பல உவமங்களை  நிரல்பட
அடுக்கி நிறுத்துதலாகும்.
 

எ - டு :

ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத்

தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம் எனவும்

கார்மலர் பூவை கடலிருள் மணியவை

ஐந்தும் உறழும் அணிகிளர் மேனியை

(பரி-13)
 
எனவும்
 

நிலம்நீர் வளிவிசும் பென்ற நான்கின்

அளப்பரியையே

(பதிற்-14)
 
எனவும் வரும். 
 

பூவொத் தலமருந்தகைய ஏவொத்து

எல்லாரும் அறிய நோய் செய்தனவே

குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே

(குறு-73)
 

என்றாற்போல வருவன அதன்பாற்படும்.
 

2)  நிரல்நிறை   என்பது   :   நிரல்நிறைப்    பொருள்கோளுக்குரிய
இயல்பிற்றாய் அடுக்கி நிறுத்துதலாகும்.
 

எ - டு :

பொன்னும் மணியும் போலும் யாழநின்

நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்

(குறு-166)
 

தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு

நோயும் இன்பமும் ஆகின்று மாதோ

(நற்-294)
  

போதும் பணையும் போலும் யாழநின்

மாத ருண்கணும் வனப்பின் றோளும்

(நற்-166)
 

எனவரும்.   "வரன்முறை’’    என்றதனான்   நிரல்பட     அமைதல்
முறையாகவன்றிச் சிறுபான்மை பிறழ்ந்துவரினும் ஆகுமெனக் கொள்க.
 

எ - டு :

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்

(குறள்-410)
 
எனவரும்.   இந்நிரல்   நிறையாகிய   அடுக்கினை இடைக்காலத் தெழுந்த
அணிநூல் ஓரணியாக நாட்டிப் பல வகைப்படுத்துக் கூறும்.
 

3) சுண்ணம்  என்பது : பட்டாங்கமைந்த  ஈரடி  எண்சீருள்  அமைந்த
பொருளையும் உவமத்தையும்  துணித்துக் கூட்டிக் கொள்ளுமாறு அடுக்கிக்
கூறுதலாம்.
 

எ - டு :

மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன

அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி

(பொரு-20)
 
எனவரும்.   இவ் ஈரடி   எண்சீருள்   மண்ணியன்ன  அமைவரு  காட்சி
என்பவற்றைத்  துணித்து ஓட்ட   உவமமும்    பொருளும்    இணைந்து
விளங்குமாறும் அணங்கு   மெய்ந்நிறுத்த  எனப்பிற  சொற்கள் இடைப்பிற
வரலாக நிற்குமாறுங் கண்டுகொள்க.
 

சாற யர்ந்தன்ன மிடாச் சொன்றி

வருநர்க் குவரையா வளநகர் பொற்ப

(குறு-202)
 
என்பதுமது. சாறயர்ந்தன்ன வளநகர் பொற்ப என இயையும்.
 

மயிர்குறை கருவி மாண்கடை யன்ன

பூங்குழை யூசற் பொறைசால் காதின்

(பொரு-30)
 
என்பதுமது. இது கருவியன்ன காது என இயையும்.
 

இனி,   ஒரு   பொருளை   உவமத்தாற்  கூறி முடித்துப் பின்னுமோர்
உவமத்தை  அதற்கே   அடுக்கிக் கூறலும்  உவமத்திற்குப்  பிறிதொன்றை
உவமாகக்  கூறலும்   பிறவும்   கவர்பொருள்பட     அடுக்கி     வந்து வழுவாவனவாம். அஃதாவது,
 

"வாள்போலும்  கணையொக்கும்   செங்கண்"  "முல்லைநிரைத்தன்ன
முத்துப்போல்     வெண்ணகையார்"       என்றாற்       போல்வன
கவர்பொருள்படுவனவாம்.  "மதியத்தன்ன வாண்முகம்  போலும் தாமரை"
என வருவது உவமத்திற்குப்பிறிதொன்றை
 

உவமமாக  அடுக்கிக்  கூறியதாம்.மதியத்தன்ன  என்பது தாமரையொடு
இயையாமையின்  வழுவாம். "வெண்டிங்கள்   போலுளது   வெண்சங்கம்
வெண்சங்கின்வண்டிலங்கு தாழை வளர்கோடு" என்பதுமது.
 

   

இனிப் "பண்பே" என்றதனான்

ஈர்ந்து நிலந்தோயும் இரும்பிடித் தடக்கையின்

சேர்ந்துடன் செறிந்த குறங்கின், குறங்கென

மால்வரை ஓங்கிய வாழை வாழைம்

பூவெனப் பொலிந்த ஓதி ஓதி

நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி

(சிறுபாண்)
 
என்றாற்போல ஒன்றற்குப் பொருளாக நின்றது பிறிதொன்றற்கு  உவமமாக
அமைந்து    அடுக்கி    வருதலை   நிரல்நிறுத்தமைத்தல் என்பதன்பாற்
படுத்துக்கொள்க.
 

பிறவும் இடைக்காலத் தெழுந்த  அணிநூல்கள்   விரித்தோதும்  உவம
வேறுபாடுகளை      யெல்லாம்     எடுத்தோத்தானும்      விதப்பானும்
இவ்வாசிரியர் கூறிய இலக்கணத்துள் அடங்கு மாறறிந்து அடக்கிக் கொள்க.
 

இனி,  ‘நிரல்  நிறுத்தமைத்தல்’       என்பதனை     ஒருவகையாகக்
கொள்ளாமல்  நிரல்நிறை   என்பதற்கு  அடைமொழியாகக்    கொள்ளின்
மூன்றலங்கடையே என்ற தொகை வழூஉப்படு மென்க.
 

இனிப்    பேராசிரியர், "அடுக்கிய   தோற்றம்   விடுத்தல்   பண்பே"
என்பதனைப் பிரித்து   ஒரு  சூத்திரமாகக்  கூறுவார். மேலும் அவர் நிரல்
நிறுத்தமைத்த நிரல்நிறை எனப்  பாடமோதி   அதனை   ஒரு  தொடராக
வைத்துச்   சுண்ணம்   வரைநிலை   வைத்த மூன்றலங்கடையே    எனப்
பாடங்கொள்வார். மூன்றலங்கடை என்பதற்குப் பொருள்கோள்  நான்கனுள்
சுண்ணமும்    அடிமறியும்    மொழிமாற்றும்   ஆகிய    மூன்றுமல்லாத
விடத்துஉவமத்தையும்,  பொருளையும் நிரலே  நிறுத்து  ஒப்புமை   கூறின்
அது  நிரல் நிறை  உவமம் எனப்படும்  என நலிந்தும் வலிந்தும் பொருள்
கூறுவார்.
 

அங்ஙனம்   கொள்ளின்   ‘மூன்றலங்  கடையே’ என்பது வெற்றெனத்
தொடுத்தலாய் முடிதலானும் அடுக்கிய தோற்றம்  என்பது  இனிது பொருள்
கொள்ளாமையானும்,  சுண்ணப்பொருள்கோள் அமைய  உவமங் கூறுதலை
விலக்கின் அது  குன்றக்கூறலாய்  முடிதலானும்   இளம்பூரணர்   பாடமே
ஆசிரியர் கருத்தாதல் விளங்கும்.