அகப்பொருள் ஒழுக்கத்தின்கண் அடையடாது வரும் ‘தாய்’ என்னும் முறைப் பெயர் பற்றியதொரு மரபுணர்த்துகின்றது.
பொருள் :ஆய்ந்தறிந்து உணர்த்தத் தகும் சிறப்பினையுடைய அரிய மறைப்பொருள்களை யெல்லாம் குறிப்பானேயன்றிக் கூற்றானே கிளந்து கூறுதலின் தாய் எனச் சிறப்பித்துக் கூறப் பெறுபவள் செவிலியாவாள்.
நற்றாய், செவிலித்தாய், கைத்தாய், ஊட்டுத்தாய், தொல்தாய், சிற்றாய் எனத் தாய்எனற் குரியார் பலராகலின், நல், முதலிய அடையின்றியும் பிற சார்பின்றியும் வாளா ‘தாய்’ என வருமிடத்துக் கவர்பொருள்படுதலை நீக்கலும், செவிலியின் சிறப்பினை வற்புறுத்தலும் இதன் பயன் என்க.
இது முதலாய மூன்று சூத்திரங்களும் பொருளியலுள் கூறற்குரியவை. எனினும் செவிலியும் தோழியும் களவிற்கு இன்றியமையாச் சிறப்புடையராய் அறத்தொடு நின்று களவினை வெளிப்படுத்தித் தலைமக்களைக் கற்பின்கண் செலுத்தும் கிழமையுடையராகத் திகழும் இயைபு நோக்கி ஈண்டுக் கூறப்பெற்றன.