சூ. 136 :

ஆங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே

ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான

(44)
 

க - து :

களவின்கண்    தலைவியது  ஒழுகலாறு பற்றியதொரு புறனடை
கூறுகின்றது.
  

பொருள் : களவின்கண்  தலைவிக்குரியவாக   முன்னர்   ஓதப்பெற்ற
கிளவிகளும்   பிற   மரபுகளுமேயன்றி       அவ்வவ்விடங்களுக்கேற்பத்
தலைவன் மாட்டும் தோழி மாட்டும் செவிலி மாட்டும் ஒழுகும்  ஒழுக்கமும்
தலைவிக்கு  உண்டு.  அங்ஙனம்  ஒழுகுதல்  உயர்ந்த  சிறப்பினையுடைய
களவொழுக்கத்தின் கூறாக அமைதலான்.
 

என்றது,   அன்பொடு   புணர்ந்த  ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம்
பாலதாணையான்  நேர்ந்து    உள்ளப்புணர்ச்சி அளவிலும் நால்வகையாய
மெய்யுறு புணர்ச்சி அளவிலும் நிகழ்தற்குரிய    சிறப்பினையுடையதாகலான் முன்னர் நால்வகைப்  புணர்ச்சிக்கும்   அமைவனவாக எடுத்தோதப் பெற்ற ஒழுகலாறுகளுள்   ஏற்புடையனவேயன்றி  அவ்வச்   சூழ்நிலைகட்கு ஏற்ப அவற்றைச் சார்ந்து நிகழும் ஒழுகலாறுகளும் உண்டு என்றவாறு.
 

தலைவிக்கு என விதந்து கூறாது பொதுப்பட ஓதினமையான் ஆங்காங்கு
ஒழுகும் ஒழுக்கம்   தலைவற்கும்   உண்டு;   தோழிக்கும்   உண்டு எனக்
கொள்க.
 

எ - டு :

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ! ஒல்!எனக் கூறுவு வேன்கொல்

அலமரல் அசைவளி யலைப்பஎன்

உயவுநோய் அறியாது துஞ்சு மூர்க்கே.
 

(குறு-28)
 

இது   தோழி   தன்துயர் உணராதுள்ளாள் எனக்கருதி வருந்திக் கூறிய
தலைவி கூற்று.
 

இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு

அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி

நல்ல ளாகுதல் அறிந்தாங்கு

அரிய ளாகுதல் அறியா தோயே

(குறு-120)
 

இது அல்லகுறி    நேர்ந்தமையறியாது   குறியிடத்து   வந்து தலைவியைப்
பெறாது மீளும் தலைவன் நொந்து கூறியது.
 

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்

நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

குடிமுறை குடிமுறை தேரின்

கெடுநரும் உளரோநம் காத லோரே.

(குறு-130)
 

இது தலைவன் பிரிவாற்றாமல் வருந்தும் தலைவியைத் தேற்றுமுகத்தான்
சொல்லிய தோழிகூற்று. இங்ஙனம்  அவரவர்க்கு   ஓதப்பட்ட கிளவிகளின்
புறத்தவாய் வரும் கூற்றுக்களையெல்லாம் இதன்கண் அடக்கிக் கொள்க.