சூ. 172 :

ஆற்றது பண்பும் கருமத்து விளைவும்

ஏவல் முடிபும் வினாவும் செப்பும்

ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்

தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும்

இளையோர்க் குரிய கிளவி என்ப

(29)
 

க - து :

இஃது இளையோர்க்குரிய கிளவி யாமாறு கூறுகின்றது.
 

பொருள் :தலைவன் வினைமேற் செல்லுங்காலையும்  மீளுங்காலையும்
இயங்குதற்குரிய நெடுவழி பற்றிய தன்மைகளை அறிந்து கூறலும், தலைவன்
மேற்கொண்ட      வினைகளான்     விளையும்     இன்பத்துன்பங்களை
ஓர்ந்துரைத்தலும்,  தலைவன்  ஏவிய  வினையைப்  புரிந்து  வந்து அதன்
முடிபினைத்  தெரிவித்தலும்,  தான்  ஆற்றவேண்டிய   பணிகளை  அறிய
வினாதலும்,   வினாய  தலைவற்கு  விடையிறுத்தலும், தலைவன்  செல்லும்
சுரநெறிக்கண்       கண்ட     பொருள்களையும்    கருப்பொருள்களின்
நிகழ்ச்சிகளையும்  உள்ளுறை  தோன்றக்  கூறலும்   [சிறுபான்மை  மீண்டு
வந்தபின் தலைவிக்குக்  கூறலும்]  கொள்க.  மற்றும் தலைவன்  விளங்கிக்
கொள்ளுவதற்கு  அமைந்த  அவை  போல்வன  பிறகூறலும்  இளையோர்
நிகழ்த்தற்குரிய கிளவிகளாம்.
 

பிற    என்றது    வினை  முற்றி   மீண்டு   வருங்கால்  தலைவியது
நிலைமைபற்றித் தலைவற்குக் கூறுதல் முதலியவாம்.
 

இளையராவார்  தலைமக்களின் நலம்  பேணி  மெய்ப்புகு  கருவியன்ன
அவரைக் காத்து  அவர் ஏவல் வழி  வினை புரிவோர். பெரும்பான்மையும்
இவர் தலைமக்களின்  தந்தைக்குக் காமக்கிழத்தியர் வழி வந்த மக்களாவார்.
சிறுபான்மை  பிறருமாவார் என்பது  மேல்வரும்  சூத்திரத்தான் புலனாகும்.
[மெய்புகு கருவி = கவசம்] இவர் கூற்றாக வரும்  செய்யுட்கள் வந்த வழிக்
கண்டு கொள்க.