|
சூ. 261 : | ஆங்கவை ஒருபா லாக ஒருபால் | | உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல் | | தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாக் | | கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் | | நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவெனா | | முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை | | கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் | | கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை | | வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ | | அவையும் உளவே அவையலங் கடையே | (12) | க - து : | அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வரும். மேற்கூறிய முப்பத்திரண்டு பொருள்களேயன்றி அவையல்லாதவிடத்து எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக இவையுமுள என்கின்றது. |
இவை முப்பத்திரண்டும் எள்ளல் முதலியவற்றைப் போல வரையறைப்பட்டு அடங்காமல் எண்வகை மெய்ப்பாட்டினுள் விரவி வருதலானும் புறத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று நிற்றலானும் வேறாகத் தொகுத்து ஓதப்பெற்றன. | மற்று ஈண்டுக் கூறப்பெற்றுள்ள வியர்த்தல், தன்மை, விரைவு, வாழ்த்தல், நாணுதல், உயிர்ப்பு, கையாறு, முனிதல், ஆராய்ச்சி, ஐயம் முதலியவாக வருவனவற்றொடு பின்னர் அகத்திணைக்குரியவாக ஓதப் பெற்றவனவற்றுள் வரும், பொறிநுதல் வியர்த்தல் இல்வலியுறுத்தல், பாராட்டெடுத்தல், அலர் நாணல், புலம்பித்தோன்றல், கையறவுரைத்தல், இன்பத்தை வெறுத்தல், ஏதமாய்தல், ஐயஞ் செய்தல் முதலியவை ஒத்தனவாக உள்ளமையின் இங்ஙனம் ஈரிடத்துங்கூறியது என்னை யெனின்? அவ்வாறு வருவன ஒருபுடை ஒக்குமேனும் அகத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் உடைமை, இன்புறல் முதலிய பொருள்பற்றிக் கூறாமல் புகுமுகம்புரிதல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டுமென்பதும் புறத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் புகுமுகம் புரிதல் முதலாய அகத்திணைக்கே உரியபொருள் பற்றிக்கூறாமல் உடைமை, இன்புறல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் இளமை முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டும் என்பதும் அறிவித்தற்கென்க. | அது பெறுமாறியாங்ஙனமெனின்? ஈண்டு வியர்த்தல், நாணல் எனவும் ஆண்டுப் பொறிநுதல் வியர்த்தல், ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல் எனவும் வேறுபடுத்துக் கூறுதலான் பெறுது மென்க. | இனி, இளம்பூரணரும் பேராசிரியரும் இக்கூறிய முப்பத்திரண்டினையும் நகை முதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குரிய பொருளெனக் கருதாமல் இவற்றையே மெய்ப்பாடு என்று கருதி உரை விளக்கம் செய்து போந்தனர். நாவலர் சோமசுந்தர பாரதியார் இவை முப்பத்திரண்டும் மெய்ப்பாடு போன்று செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகள் என்றும் களவிற்குரிய இயற்கைப்புணர்ச்சி முதலிய நான்கற்கும் முறையே எட்டெட்டாக உரிமை பெற்றுவரும் என்றும் வலிந்தும் நலிந்தும் பொருள்கூறிச் சென்றனர். அவர் கருத்து நூல்நெறிக்கு ஒவ்வாமையை விளக்கப்புகின் விரியுமாகலின் பின்வரும் உரைக்குறிப்புகளை நோக்கி உணர்ந்துகொள்க. |
பொருள் :எண்வகை மெய்ப்பாடுகட்கும் அடிப்படையாக எள்ளல் முதலிய முப்பத்திரண்டு பொருளும் ஒரு பகுப்பாகி அமைய அவையல்லாதவிடத்துப் பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும். | இவை, உடைமையின்புறல், நடுவுநிலையருளல் என்றாற் போல ஒருங்கு எண்ணுதற்கு ஏற்ப நிற்றலான் இவற்றை முப்பத்திரண்டாக எண்ணிக் கோடல் வேண்டுமென உணர்ந்த ஆங்கவை ஒருபாலாக (ஈங்கிவை) ஒருபால் எனக்கூறினார் ஆசிரியர் என்க. | அவையும் என்னும் எச்சவும்மை அவற்றின் சிறப்பின்மை தோன்ற நின்றது. உயிர்ப்பெனாஅ, நடுக்கெனாஅ என்பவை செய்யுளிசை நிறைக்க வந்த அளபெடை. எனா என்பவை எண்ணின்கண் வந்தன. | 1. உடைமையாவது : மேற்கூறிய துய்க்கப்படும் செல்வத்தின் வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம். | எ - டு : | நெடுநல் யானையும் தேரும் மாவும் | | படையமை மறவரும் உடையம்யாம் | (புற-72) | எனவரும். | | மயக்ககுறு மக்களை இல்லோர்க்குப் | | பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே | (புற-188) | என்பதுமது. இவற்றைச் செல்வமாகக் கருதிய வழி உவகைக்குரிய பொருளாக அமையும். | இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும். ஈண்டு இம்முப்பத்திரண்டு பொருள்கட்கும் மெய்ப்பாட்டுரிமை கூறுதல் பெரும்பான்மை பற்றி என உணர்க. சிறுபான்மை வேறுபடவரினும் ஆராய்ந்து கொள்க. | 2. இன்புறலாவது :தமது உடைமைகளையும் செயல்களையும் பற்றித் தாமே எண்ணி மகிழ்தல். | எ - டு : | குழலினிது யாழினிது என்பதம் மக்கள் | | மழலைச்சொற் கேளா தவர் | (குறள்-66) | | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை | | வைத்திழக்கும் வன்கண் ணவர் | (குறள்-228) | எனவரும். | இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும். | 3. நடுவுநிலையாவது :தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு. |
எ - டு : | சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் | | கோடாமை சான்றோர்க் கணி | (குறள்-118) | எனவரும். | | பெரியோரை வியத்தலு மிலமே | | சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே | (புறம்-192) | என்பதுமது. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். | இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம் என்னும் சுவையாகக் கருதி விளக்குவர் உரையாசிரியன்மார். சாந்தம் வேறு ; நடுவுநிலைவேறு என அறிக. | 4. அருளலாவது :எல்லா உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய கனிவுள்ளத்தாற் புரியும் செயல். | எ - டு : | உடாஅ போராஅ ஆகுத லறிந்தும் | | படாஅம் மஞ்ஞைக் கீத்த வெங்கோ | | கடாஅ யானைக் கலிமான் பேகன் | (புற-141) | எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். | வடநூலார் கூறும் கருணையை ஒருபுடைஒக்கும். இரக்கம் வேறு ; இவ் அருளல் வேறு என அறிக. | 5. தன்மையாவது :குணவியல்பும் குலவியல்பும் தோன்ற ஒழுகும் இயற்கைப் பண்பு. | எ - டு : | "வேழம் வீழ்த்த" என்னும் புறப்பாட்டினுள் | | கோஎனப் பெயரிய காலை ஆங்கது | | தன்பெய ராகலின் நாணி ............. | | ............ பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மென | | சுரத்திடை நல்கியோனே | (புறம்-152) | எனவரும். | இதன்கண் வல்வில் ஓரியின் தலைமைத் தன்மையும் வள்ளற்றன்மையும் புலப்பாடாதல் காண்க. | ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக அமைந்தது. | | "திரை பொரு முந்நீர்" என்னும் புறப்பாட்டினுள் | | ஈயென இரத்தலோ அரிதே நீயது | | நல்கினும் நல்கா யாயினும் .... | | ...... ....... ........ ......... ........ ........ ....... ...... | | கொண்பெருங் கானம் பாடலெமக் கெளிதே | (புறம்-154) | இதன்கண் மோசிகீரனாரின் புலமைத்தன்மை புலப்பாடாதல் காண்க. ஈண்டு இஃது பெருமிதத்திற்குப் பொருளாக அமைந்தது. |
| பெருமுலை யலைக்கும் காதின் பிணர்மோட்டு | | உருகெழு செலவின் அஞ்சுவருபேய் மகள் | (முருகு-50-51) | என்புழிப் பேய்மகளின் தன்மை புலப்பட்டவாறு காண்க. | ஈண்டிஃது அச்சத்திற்குப் பொருளாக அமைந்தது. | | சீரை தைஇய உடுக்கையர் சீரொடு .............. | | துனியில் காட்சி முனிவர் | (முருகு-126, 137) | இதன்கண் முனிவர் தம் தன்மை புலப்படுமாறும் அது மருட்கைக்கும், பெருமிதத்திற்கும் பொருளாக அமையநிற்குமாறும் கண்டு கொள்க. தன்மை எண்வகை மெய்ப்பாட்டிற்கும் பொருளாதற் குரியதாகும். | 6. அடக்கமாவது :செல்வமும் ஒளியும் மிகினும், இகலும் இகழ்ச்சியும் நேரினும் பொங்காது நிற்கும் பொறையும் உயர்ந்தோர் மாட்டுப் பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம். | எ - டு : | ‘கேட்டல் மாத்திரை யல்லது’ என்னும் புறப்பாட்டினுள் | | தன்பெயர் கிளக்குங் காலைத் தன்பெயர் | | பேதைச் சோழன் என்னும் | (புறம்-216) | இதன்கண் கோப்பெருஞ்சோழன் அடக்கம் புலப்படுமாறு காண்க. | | ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் | | சான்றோர் பலர்யான் வாழு மூரே | (புறம்-191) | என்பதுமது. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். | 7. வரைதலாவது :இன்னது செய்வல் இன்னது தவிர்வல் என நியமித்துக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம். | எ - டு : | பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே | | பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ | | நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
| எனவரும். | 8. அன்பாவது :தொடர்புடையார் மாட்டும், நட்டார் மாட்டும் தம் விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம். | எ - டு : | சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது | | ஆதல் நின்னகத் தடக்கிச் | | சாதல் நீங்க எமக்கீத் தனையே | (புறம்-91) | இதன்கண் கைம்மாறு கருதாத அதியமான் அன்பு புலப்பாடாதல் காண்க. | | இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் | | உழவன் யாத்த குழவியின் அகாலாது | | பாஅல் பைம்பயிர் ஆரும் | (குறுந்-181) | எனவும் வரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். |
9. கைம்மிகலாவது : குறையாயினும் நிறையாயினும் அளவில் மிகுதல். | எ - டு : | பாலில் குழவி அலறவும் மகளிர் | | பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் | | வினைபுனை நல்லில் இனைகூக் கேட்பவும் | | இன்னாதம்ம ஈங்கினி திருத்தல் | (புறம்-44) | இதன்கண் நெடுங்கிள்ளி பன்னாள் அரணடைத் திருந்தமையான் மக்கள்துயர் கையிகந்தமையைக் கோவூர்கிழார் புலப்படுத்தியமை காண்க. | | கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் | | அடுமுரண் தேய்க்கும் அரம் | (குறள்-567) | என்பதுமது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | | இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் | | மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து | (குறள்-539) | இது மகிழ்ச்சி கையிகந்தமை கூறிற்று. | 10. நலிதலாவது :இடுக்கணுறுதலும் உறுத்தலுமாம். இஃது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல். | எ - டு : | குன்றத் திருந்த குரீஇயினம் போல | | அம்பு சென்றிருந்த அரும்புண் யானைத் | | தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து | | நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள | (புறம்-19) | இது பிறரால் தான் நலிவுற்றது. | | மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர் தெறித்த | | குடப்பால் சில்லுறை போலப் | | படைக்கு நோயெல்லாந் தானா யினனே | (புற-276) | இது தன்னான் பிறர் நலிவுற்றது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 11. சூழ்ச்சியாவது : புறநிகழ்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுதல். சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் (குறள்-671) என்பதனான் இதன் பொருளுணர்க. | எ - டு : | பல்சான் றீரே பல்சான் றீரே | | செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் | | பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே | (புற-246) | | பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் | | எழுபது கோடி யுறும் | (குறள்-639) | என்பதும் அது. | இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும். |
12. வாழ்த்தலாவது :உலகநலங் கருதி இறையையும் தெய்வ முதலாயவற்றையும் போற்றுதல். | எ - டு : | வாழி யாதன் வாழி யவினி | | நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க | (ஐங்-1) | | திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் | | கொங்கலர் தார்ச்சென்னிக் குளிர்வெண் குடைபோன்றிவ் | | அங்கண் உலகளித் தலான் | (சிலம்பு-கடவுள் வாழ்த்து) | என வரும். "நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க" என்பதுமது. இஃது உவகைக்குப் பொருளாக அமையும். | 13. நாணலாவது :சான்றோர் பழிப்பனவற்றை ஏலாமையும் புரியாமையுமாம். தன்புகழ் கேட்டவழி எய்தும் மென்மையும் இதன்கண் அடங்கும். | எ - டு : | தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த | | புறப்புண் நாணி மறத்தகை மன்னன் | | வாள்வடக் கிருந்தனன் | (புறம்-65) | எனவும் | | வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி | | யானது பெயர்த்தனெ னாகத் தானது | | சிறிதுஎன உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் | | பெருங்களிறு நல்கி யோனே | (புறம்-394) | எனவும் | | ............... மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக்கூறி | | நின்யான் பிழைத்தது நோவாய், என்னினும் | | நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே | (புறம்-43) | எனவும் | தம்புகழ் கேட்டார் போல்தலை சாய்த்து மரந்துஞ்ச (கலி-119) எனவும் வரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். | 14. துஞ்சலாவது : செயலூக்கமின்றிப் புலனொடுங்கிக் கிடத்தல். உறக்கமெனினும் ஒக்கும். | எ - டு : | சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை | | அந்தி அந்தணர் அருங்கட னிறுக்கும் | | முத்தீ விளக்கிற் றுஞ்சும் | (புறம்-2) | எனவும் | | நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்துயின்று | | முன்றிற் போகா முதிர்வினள் யாயும் | (புறம் 159) | எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 15. அரற்றாவது : அறிவொடுபடாது வெருவுதலும் உறக்கத்தின்கண் வாய் சோர்தலுமாம். |
எ - டு : | கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தீத் | | திண்டேர் அண்ணல் நிற்பா ராட்டிக் | | காற்ந் பெருமையிற் கனவின் அரற்றும்என் | | காமர் நெஞ்சம் | (புறம்-198) | எனவரும். இது மருட்கைக்கும் உவகைக்கும் பொருளாக அமையும். | 16. கனவாவது :உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. | எ - டு : | கடற்சிறு காக்கை காமர் பெடையொடு | | கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் | | வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து | (அக-170) | எனவரும். இது பெரும்பான்மை உவகைக்கும் சிறுபான்மை மருட்கைக்கும் ஏனையவற்றிற்கும் பொருளாக அமையும். | | கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு | | நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை | | நனவிற்றான் செய்தது மனத்த தாகலின் | | கனவிற் கண்டு கதுமென வெரீஇப் | | புதுவ தாக மலர்ந்த வேங்கையை | | அதுவென உணர்ந்ததன் அணிநலம் முருக்கிப் | | பேணாமுன் பின்தன் சினந்தணிந்து அம்மரம் | | காணும் பொழுது நோக்கல் செல்லாது | | நாணி இறைஞ்சும் | (கலி-49) | இதன்கண் வெகுளிக்கும் நாணி இறைஞ்சும் என்பதனால் நகைக்கும் பொருளாயினமை கண்டு கொள்க. | 17. முனிதலாவது : உளம் கொள்ளாவழியும் மாறுபட்ட வழியும் எய்தும் வெறுப்பு. | எ - டு : | ................ தாங்கருங்காவலன் | | காணா தீத்த இப்பொருட் கியானோர் | | வாணிகப் பரிசிலன் அல்லேன் | (புற-208) | எனவும் | | கந்துமுனிந் துயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து | | காலியற் புரவி ஆலும்ஆங்கண் | (புற-178) | எனவும் வரும். இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும். | 18. நினைத்தலாவது :ஒன்றனது பயனை விரும்பி அதனை இடைவிடாது எண்ணுதல். கழிந்ததனை மீள எண்ணுதலுமாம். | எ - டு : | எந்தை வாழி ஆத னுங்கஎன் | | நெஞ்சந் திறப் போர் நிற்காண்குவரே | (புற-175) | எனவும் | | நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென் | | மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ | | நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண | (புற-164) |
எனவும் வரும். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக அமையும். | 19. வெரூஉதலாவது :விரும்பத்தகாதன கண்டுழியும் நிகழ்வழியும் எய்தும் விதிர்ப்பு. | எ - டு : | காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின் | | அதர்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு | | மதர்புலி வெரீஇய மையல் வேழத்து | | இனந்தலை மயங்கிய நனந்தலைப் | (அக-39) | எனவரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். | 20. மடிமையாவது : செய்தற்குரியவற்றைச் செய்யாது சோர்ந்திருத்தல். அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல். | எ - டு : | அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த | | கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும் | | வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில் | (அக-173) | எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 21. கருதலாவது :ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல். | எ - டு : | ஆஅங்கு, எனைப்பகையும் அறியு நன்ஆய் | | எனக்கருதிப் பெயரேத்தி | | வாயார நின் இசை நம்பி | | சுடர்ச் சுட்ட சுரத்தேகி | | இவண்வந்த பெருநசையேம் | (புற-236) | எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். | 22. ஆராய்ச்சியாவது :ஒன்றனது நலந்தீங்குகளை நடுவு நின்று நோக்கியறிதல். | எ - டு : | கோடு துவையா கோள்வாய் நாயொடு | | காடுதேர்ந் தசைஇய வயமான் வேட்டு | | வயவர் ..... ...... ....... ...... | (நற் - 276) | எனவரும். தேர்தல் ஆராய்ச்சியின் பயனாகலின் இச் செய்யுளுள் தேர்ந்தசைஇய என்றதனான் அது பெறப்படும். | | தத்தங் கலங்களுள் கையுறை என்றிவற்கு | | ஒத்தவை ஆராய்ந்தணிந்தார் | (கலி-84) | என்பதுமது. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். | 23. விரைவாவது :காலத்தையும் இடத்தையும் சுருக்கி மேற்செல்லக் கடிதுவிழையும் உள்ள எழுச்சி. |
எ - டு : | கன்றமர் கறவை மான | | முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே | (புற-275) | | போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ | (புற-82) | எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். | 24. உயிர்ப்பாவது : ஆற்றாமை காரணமாக எழும் நெடுமூச்சு. | எ - டு : | திருந்தரை நோன்காழ் வருந்த ஒற்றி | | நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து | | அலமரல் யானை உருமென முழங்கவும் | (புற-44) | பருந்துயிர்த்து, இடைமதில் சேக்கும் புரிசை (புற-343) எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 25. கையாறாவது : விருப்பிற்குரிய பொருளைப்பிரிதலும் இழத்தலும் பற்றி வரும் செயலறவு. | எ - டு : | புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது | | கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் | | வாடிய பசியரா கிப்பிறர் | | நாடுபடு செலவின ராயின ரினியே | (புற-240) | எனவரும். இஃது அழுகைக்குப் பொருளாக அமையும். | 26. இடுக்கணாவது :இடையூறு காரணமாக வரும் துன்பம். | எ - டு : | அறனில் கூற்றம் திறனின்று துணிய | | பிறனா யினன்கொல் இறீஇயர் என்உயிரென | | துயல்வுறு சிறுமையன் பலபுலந் துறையும் | | இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை | | விடுத்தேன் .... | (புற-210) | எனவரும். இஃது அழுகைக்குப் பொருளாக அமையும். | 27. பொச்சாப்பாவது :மறத்தல் கூடாதவற்றை மறந்திருத்தல். | எ - டு : | நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் | | மாலை மருதம் பண்ணிக் காலை | | கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி | | வரவெமர் மறந்தனர் | (புற-149) | எனவரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
28. பொறாமையாவது :செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. | எ - டு : | வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் | | போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது | | இடம்சிறிதென்னும் ஊக்கந் துரப்ப | (புற-8) | எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக வரும். | அழுக்காறு என்னும் பொறாமை வேறு ; இதுவேறு என உணர்க. அழுக்காறு அறனில் குணமாகலின் அதனை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகக் கூறுதல் ஒவ்வாதென அறிக. | 29. வியர்த்தலாவது :இகல் காரணமாக வரும் உள்ளப் புழுக்கம், மெய்ப்புழுக்கம் சிறுபான்மைவரினும் கொள்க. | எ - டு : | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து | | உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் | (குறள்-487) | இது வெகுளிக்குப் பொருளாக வரும். | "பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்" என்பது மெய்ப்புழுக்கம். இஃது இளிவரல் பற்றி வரும். | 30. ஐயமாவது :ஒரு பொருளை இன்னது என வரைந்துணர்தற் காகாத மனத்தடுமாற்றம். | எ - டு : | செருப்பிடைச் சிறுபரலன்னன் | | ...... ....... ....... ....... ........ ........ ....... ......... ......
| | யார்கொலோ அளியன் தானே, தேரின் | | ஊர்பெரி திகந்தன்று மிலனே, அரண்எனக் | | காடுகைக் கொண்டன்று மிலனே | (புற-257) | எனவரும். | | நாடனென்கோ ஊரனென்கோ | | பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்ப னென்கோ | | யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை | (புற-49) | என்பதுமது. ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக நின்றது. இது பிற மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகவும் வரும். | 31. மிகையாவது :பழிவழிச் செல்லும் செருக்கு - குற்றம். | எ - டு : | மன்னிய சென்ற ஒண்ணுத லரிவை | | புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு | | ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள்நிறை |
| பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் | | பெண்கொலை புரிந்த நன்னன் | (குறு-292) | எனவரும். இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும். | 32. நடுக்கமாவது :துயர் நேருங்கொல் என்னும் உளக் கலக்கத்தான் உடம்பு அதிர்தல். | எ - டு : | வெம்மை தண்டா எரியுகு பறந்தலை | | கொம்மை வாடிய இயவுள் யானை | | நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி | | அறுநீ ரம்பியின் நெறிமுதல் உணங்கும் | | உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்க ருங்கடன் | (அக-29) | எனவரும். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும். | இவை முப்பத்திரண்டும் இடத்திற்கேற்பப் பிற மெய்ப்பாடுகளுக்கும் பொருளாக வருமென அறிக. உரையாசிரியன்மார் இவற்றிற்கு அகப்பொருள் பற்றிய செய்யுட்களையும் உதாரணமாகக் காட்டியுள்ளனர். ஆசிரியர் அகத்திணைக்குரிய பொருள்களை வகுத்து விதந்து பின்னர் ஓதுதலான் அங்ஙனங் காட்டுதல் மயங்கவைத்தலாம் என்க. |
|