சூ. 109 : | இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும் |
| காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் |
| தானகம் புகாஅன் பெயர்த லின்மையின் |
| காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி |
| வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் |
| புகாஅக் காலை புக்கெதிர் பட்டுழிப் |
| பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் |
| வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் |
| தாளாண் எதிரும் பிரிவி னானும் |
| நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் |
| வரைதல் வேண்டித் தோழி செப்பிய |
| புரைதீர் கிளவி புல்லிய எதிரும் |
| வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்துப் |
| புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் |
| கிழவோள் மேன என்மனார் புலவர் |
(17) |
க - து : | மேல் 11, 12 ஆகிய சூத்திரங்களான் அதிகரித்து நின்ற பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைமகள் கூற்று நிகழ்த்துமிடமும் அவள் நிகழ்த்துமாறும் பற்றிய கிளவிகள் இவை என்கின்றது. |
மற்றுக் களவின்கண் தலைவிமாட்டு முறையாக நிகழும் கூற்றுக்கள் பின்வரும் "மறைந்தவற் காண்டல்" என்னும் சூத்திரத்தாற் கூறுப. |
பொருள்:1) இருவகைக்குறி பிழைப்பாகிய விடத்தும் என்பது; பகற்குறியும் இரவுக்குறியும் தலைவனை எய்துதற்காகாமல் பிழையுற்ற காலையும் என்றவாறு. குறி பிழைத்தலாவது, அல்ல குறிப்படுதல். அஃதாவது குறியிடத்துத் தன் வருகையைத் தலைவன் தலைவிக்குத் தெரிவித்தற்கு நிகழ்த்தும் செயற் குறிப்புக்கள் பிறவகையான் முன்னர் நிகழ்ந்து விடுதலும், தலைவன் வருதற்கு இயலாமல் இடையூறுபடுதலும் பிறவுமாம். |
செயற்குறிப்புக்களாவன : புள்ளெழுப்புதலும், நீர்நிலைகளிற் கல்லெறிந்து ஒலியெழுப்புதலும் சீழ்க்கை ஒலி எழுப்புதலும் பிறவுமாம். இவை பிறவாற்றான் நிகழ்ந்த வழி ஆண்டுத் தலைவி வந்து பார்த்துத் தலைவனைக் காணாது வருந்தி மீளுதல். தலைவன் செய்யாத குறியினைத் தலைவன் செய்ததாக எண்ணியது குறிபிழைத்தலாயிற்று. |
எ - டு : | இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் |
| கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் |
| எம்மினும் உயவுதி செந்தலை அன்றில் |
| கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ |
| நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே |
(நச்-மேற்) |
எனவரும். |
2) காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் என்பது; தலைவன் குறியிடத்திற்கு வர இடையூறு நேர்ந்த வழி இற்றை ஞான்று தலைவனைக் காணல் அரிதென வருந்தும் மிக்க பொழுது நீண்டு கழியுமிடத்தும் என்றவாறு. |
தலைவன் வருதற்கிடையூறாவன : நாய்குரைத்தலும், ஊர்துஞ்சாமையும், காவலர்கடுகலும், நிலவு வெளிப்படலும், கூகை குழறலும், கோழிகுரல் காட்டலும் பிறவுமாம். |
எ - டு : | இரும்பிழி மகாஅர்இவ் அழுங்கல் மூதூர் |
| விழவின் றாயினும் துஞ்சா தாகும் |
| மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் |
| வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் |
| பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் |
| துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் |
| இலங்குவே லிளையர் துஞ்சின் வைஎயிற்று |
| வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் |
| அரவவாய் ஞமலி குரையாது மடியின் |
| பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின் |
| அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே |
| திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின் |
| இல்லெலி வல்வசி வளைவாய்க் கூகை |
| கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும் |
| வளைக்கண் சேவல் வாளாது மடியின் |
| மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும் |
| எல்லாம் மடிந்த காலை ஒருநாள் |
| நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனான் |
| அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து |
| ஆதி போகிய பாய்பரி நன்மா |
| நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் |
| கன்முதிர் புறங்காட் டன்ன |
| பல்முட்டின்றால் தோழி நங்களவே |
(அகம்-122) |
எனவரும். |
3) தானகம் புகாஅன் பெயர்த லின்மையின் காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் என்பது : அல்ல குறிப்பட்டு மீண்ட தலைவி தலைவன் பெருவேட்கையனாதலின் குறியிடத்திற்கு வந்தன்றி மீளான் என எண்ணி, அவன் வந்து இழைத்துச் சென்ற அடையாளங்களையேனும் காணற்கு அவாவிக் குறியிடத்திற்குச் சென்று அவற்றைக் கண்டு வேட்கையான் மயங்கிச் செயலறு பொழுதினும் என்றவாறு. |
தலைவன் இழைத்துச் செல்லும் அடையாளங்களாவன; தான் புனைந்த கண்ணி, மாலை முதலியவற்றை ஆண்டொரு கொம்பிற்கு அணிவித்துச் செல்லுதலும் விரற்செறியினைப் பூட்டிச்செல்லுதலும் பிறவுமாம். |
எ - டு : | இக்காந்தள் மென்முகைமேல் வண்டன்றஃதிம் முகையின் |
| கைக்காந்தள் மெல்விரலாய் காணிதோ - புக்குச் |
| செறிந்ததுபோற் றோன்றும் தொடுபொறி யாம்பண் |
| டறிந்ததொன் றன்ன துடைத்து |
(நச் - மேற்) |
எனவரும். |
4) புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் என்பது : மனையகத்தார் உணவு கொள்ளும் வேளையில் தலைவன் விருந்தினனாய் எதிர்ப்பட்டவழித் தவிர்க்க இயலாமல் இல்லத்தார் அவனை விருந்தாக ஏற்ற பகுதிக் கண்ணும் என்றவாறு. பிற பொழுதாயின் ஓம்புதல் ஒருதலையின்மையின் புகாஅக் காலை என்றார். |
எ - டு : | அன்னை வாழ்க பலவே தெண்ணீர் |
| இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத் |
| தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர் |
| எல்லமை விருந்தினென் என்ற |
| மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே |
(நச்-மேற்) |
எனவரும். |
5) வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் என்பது : தலைவி தான் இரவுக்குறி நேர்வாளாய்ச், செல்லும் வழியிடை உறும் ஏதங்களைக் கூறித் தங்கிச் சேறல் நலமாம் எனத் தலைவனை விருந்தாக ஏற்கும் விருப்பினைக் குறிப்பினாற் புலப்படுத்துமிடத்தும் என்றவாறு. |
எ - டு : | நாள்வலை முகந்த கோள்வல் பரதவர் |
| நுணங்குமண லாங்கண் உணங்கப் பெய்ம்மார் |
| பறிகொள் கொள்ளையர் மறுக உக்க |
| மீனார் குருகின் கானலம் பெருந்துறை |
| எல்லை தண்பொழில் சென்றென செலீஇயர் |
| தேர்பூட் டயர ஏஎய் வார்கோல் |
| செறிதொடி திருத்தி பாறுமயிர் நீவி |
| செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் |
| சொல்லிய அளவைத் தான்பெரிது கலுழ்ந்து |
| தீங்கா யினள்இவ ளாயின் தாங்காது |
| நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப் |
| பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனால் |
| சேணின் வருநர் போலப் பேணா |
| இருங்கலி யாணர் எம்சிறுகுடித் தோன்றின் |
| வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் |
| துறையும் மான்றன்று பொழுதே சுறவும் |
| ஓதம் மல்கலின் மாறா யினவே |
| எல்லின்று தோன்றல் செல்லா தீமென |
| எமர்குறை கூறத் தங்கி ஏமுற |
| இளையரும் புரவியும் இன்புற நீயும் |
| இல்லுறை நல்விருந் தயர்தல் |
| ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே |
(அகம்-300) |
எனவரும். |
விருந்தினானும் எனப்பாடங் கொண்டு அதற்கேற்ப உரைப்பார் நச்சினார்க்கினியர். |
6) தாளாண் எதிரும் பிரிவி னானும் என்பது : தாளாண்மை புரியும் பொருட்டுத் தலைவற்குப் பிரிவு நேர்ந்தவிடத்தும் என்றவாறு. |
‘’வெளிப்படைத் தானே கற்பினொ டொப்பினும் |
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக |
வரையாது பிரிதல் கிழவோற் கில்லை’’ (சூ-51) என்றதனான் |
தலைவன் வரைந்தல்லது பகைவயிற் பிரிதல் மரபன்மையான் இது பகைவர் மண்ண சையுற்றும் மைந்து பொருளாகவும் வலிந்து போரொடு வந்தவிடத்து அவரை அடர்த்தொடுக்குதலைக் கருதிப் பிரியும் பிரிவெனக் கொள்க. இப்பிரிவு அந்தணர் ஒழிந்த மூவர்க்கும் ஏற்கும். |
இப்பிரிவு முடியுடை வேந்தர் ஏவலிற் பிரியும் அரசர்க்குரித்தென்பார் நச்சினார்க்கினியர். அது தலைவனது தலைமைக்கிழுக்காமாதலின் பொருந்தாமையறிக. எ. டு. வந்துழிக் கண்டு கொள்க. |
7) நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது : பெண்மைக் குணமாகிய நாணுடைமை தனது நெஞ்சினை அலைத்தலான் அதனைக் கைவிடுதலைக் கருதிய விடத்தும் என்றவாறு. |
அது தோழியின் மாட்டு அறத்தொடு நிற்றற் கண்ணும், உடன்போக்கு நேரும் வழியும் வரைவுகடாதற் பகுதியிடத்தும் நாணுத் துறந்து உரைத்தலாம். |
எ - டு : | அளிதோ தானே நாணே நம்மொடு |
| நனிநீ டுழந்தன்று மன்னே இனியே |
| வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை |
| தீம்புனல் நெறிதர வீந்துக் காங்கு |
| தாங்கும் அளவைத் தாங்கிக் |
| காமம் நெரிதரக் கைந்நில் லாவே |
(குறு-149) |
இஃது உடன்போக்கு நேர்ந்த தலைவி தோழிக்குரைத்தது. பிறவும் சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க. |
8) வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் என்பது : தலைவன் வரைந்து கோடலை விரும்பி வரைவு கடாதற் பொருட்டுத் தோழி தலைவனை இயற்பழித்துச் செப்பிய புல்லியவாகிய கிளவியை எதிர்மறுத்து இயற்பட மொழியுமிடத்தும் என்றவாறு. புல்லிய புரைதீர்கிளவி எனக் கூட்டுக. |
புரைதீர்கிளவி = தலைவனது உயர்வினைக் குறைபடுக்கும் பழிப்புரை. இதனை இயற்பழித்தல் என்ப. எதிரும் என்பது எதிர்த்துக் கூறலும் என்றவாறு. அஃதாவது தோழி இயற்பழித்ததனை ஒக்குமெனக் கொள்ளாமல் மறுத்துரைத்தல். இதனை இயற்பட மொழிதல் என்ப. |
எ - டு : | குறிஞ்சிக்கலி (42) வள்ளைப்பாட்டினில் தோழி, |
| நாணிலி எனக்கூறி, |
| "வரைமிசை மேல் தொடுத்த நெய்க்கண் இறாஅல் |
| மழைநுழை திங்கள் போல் தோன்றும் இழைநெகிழ |
| எவ்வம் உறீஇயினான் குன்று |
என இயற்பழித்தவழித் தலைவி |
| எஞ்சாது, எல்லா, கொடுமை நுவலாதி |
| அஞ்சுவது அஞ்சா அறனிலி யல்லன்என் |
| நெஞ்சம் பிணிக்கொண்டவன்" |
என மறுத்து இயற்பட மொழிந்தவாறு கண்டுகொள்க. |
| அருவி வேட்கைப் பெருமலை நாடற்கு |
| யான்எவன் செய்கோ என்றி யானது |
| நகையென உணரே னாயின் |
| என்னா குவைகொல் நன்னுதல் நீயே |
(குறு-96) |
என்பதுமது. |
9) வரைவுடம் படுதலும் என்பது : தலைவற்குத் தமர் வரைவு நேர்ந்தவிடத்தும் என்றவாறு. இது தன்னானும் தோழியானும் அறிந்தவழி நிகழும். |
எ - டு : | ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர் |
| தமியர் உறங்கும் கௌவை யின்றாய் |
| இனியது கேட்டின் புறுகவிவ் வூரே |
| முனாஅது யானையங் குருகின் கானலம் பெருந்தோடு |
| அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் |
| குட்டுவன் மாந்தை யன்னவெம் |
| குழைவிளங்கு ஆய்நுதற் கிழவனு மவனே. |
(குறு-34) |
10) ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோள் மேன என்மனார் புலவர் = ஆங்குத் தமர் வரைவு நேர்தல் தலைவற்குப் புறத்ததாய வழித் தனது கற்பும் இற்பிறப்புமாகிய உயர்வு விளங்குமாறு தோன்றி, வந்த பிறர் வரைவினை மறுத்துக் கூறுதலாகிய கிளவியொடு கூடி நிகழும் கிளவிகள் எல்லாம் களவொழுக்கத்தின்கண் தலைவியிடத்தனவாம் எனக் கூறுவர் புலவர். |
‘ஆங்கதன் புறத்து’ என்றது நொதுமலர் வரைவு கருதி வருதலை. புரை = உயர்வு. அஃது ஈண்டுத் தலைவியின் கடைப்பிடியைச் சுட்டி நின்றது. |
எ - டு : | பலவிற் சேர்ந்த பழமார் இனக்கலை |
| சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் |
| செருவுறு குதிரையின் பொங்கிச் சாரல் |
| இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் |
| பெருவரை அதடுக்கத்துக் கிழவோன் என்றும் |
| அன்றை யன்ன நட்பினன் |
| புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. |
(குறு-385) |
எனவரும். |