செவிலி ஐயுற்றுத் தேடமுற்பட்டவழி விரைந்து மனைக்கண் சேர்தல் வேண்டுதலின் மனையோர் கிளவி கேட்கும் வழியது எனப்பட்டது. அதனான் இல்லகம் என்பது பார்வைக்கு உட்பட்ட இடம் என்பது உய்த்துணரப்படும். |
மனையோர் கிளவி கேட்கும் வழியது என்ற இடம் மதிலின் புறத்ததெனக் கொள்ளாவிடின் இரவுக்குறிவந்த தலைவன் குறியீடு செய்தற்கும், தலைவி அல்ல குறிப்பிடுதற்கும் வாய்ப்பின்மையறிக. இதனை ஓராதார் இரவுக்குறி மனையின் அகத்தும் புறத்துமே நிகழும் என மயங்குவர். |
எ - டு : | ‘உளைமான் துப்பின்’ என்னும் அகப்பாட்டினுள் | (102) |
| "காவ லறிதல் ஓம்பிப் பையென |
| வீழாக் கதவம் அசையினள் புகுந்து |
| உயங்குபட ரகலம் முயங்கித் தோள்மணந்து |
| இன்சொல் அளைஇப் பெயர்ந்தனள் தோழி" |
எனவரும். இஃது இல்லகத்து நிகழ்ந்த இரவுக்குறி. |
| ‘கூறுவங்கொல்லோ’ என்னும் அகப்பாட்டினுள் | (198) |
| "இளமயில் சூழ்ந்த மடமயில் போல |
| வண்டுவழிப் படர தண்மலர் வேய்ந்து |
| வில்வனப் புற்ற நல்வாங்கு குடைச்சூல் |
| அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து |
| துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் |
| ஆன்ற கற்பின் சான்ற பெரியோள்" எனவரும். |
இது மதிற்புறத்து நிகழ்ந்த இரவுக் குறி. பிறவும் இவ்வாறே கண்டுகொள்க. |