பொருளதிகாரம்
 

ஐந்தாவது பொருளியல்
 

பாயிரஉரை :   இதுகாறும்   தமிழ்   கூறும்   நல்லுலகத்து வழக்கும்
செய்யுளும் ஆராய்ந்த நல்லிசைப் புலமை  சான்ற நூலோர்  வகுத்தோதிய
தொல்லிலக்கண   வழக்கினை   ஆராய்ந்து  அகத்திணையியல்  முதலாய
நான்கியலுள்ளும் ஓதப்பெற்ற   இலக்கணங்கள்   யாவும்   மக்களின்  அக
ஒழுக்கமாகிய இன்பமும் (காதல்) புற ஒழுக்கமாகிய  ஆளுமையும் (வீரமும்)
பற்றிப்  புலவோர்  செய்யுள்  செய்யுமிடத்து   உலகியல்  வழக்கும் நாடக
வழக்கும் பொருந்தச் செய்தல் புலனெறி வழக்கிற்குரியதாகும் என வரைந்து
அவற்றுள் உலகியல் வழக்கு உலக நடையானும் துய்ப்புணர்வானும் அறிந்து
கோடற்கியல்வ  தொன்றாகலின் அதனை விரித்துரையாமல் நாடக வழக்குப்
பற்றிய   நெறிகளை  நூல்நெறி   மரபான்   விதந்து கைக்கிளை முதலாக
அமைந்த அகத்திணை  ஏழும், அவற்றின் புறமாக நிகழும் வெட்சித்திணை
முதலாய  ஏழும்,  முதற்பொருள்  கருப்பொருள்   உரிப்பொருள்  ஆகிய
மூன்றினையும்  அடிப்படையாகக்  கொண்டு கருப்பொருளின் ஒரு கூறாகிய
மாந்தர்பால் நிகழும் ஒழுகலாறாகும் என உணர்த்தினார்.
 

மேலும்  செய்யுள் (இலக்கியம்)   படைத்தற்குரிய நெறியாக  இந்நூலுட்
கூறப்பெறும்  இலக்கணங்கள்   யாவும்  மக்களது  ஒழுகலாறு  பற்றி அம்
மக்கட்கே அறிவித்தலைப்  பொருளாகக்  கொண்டவை  யாதலின் பண்பும்
தொழிலும் காரணமாகப் பல்வேறு நிலைகளில் நின்றொழுகும் அம்மாந்தரை
அவரவர்    செய்தொழிலும்  மெய்யுணர்வும்  காரணமாக   வகைப்படுத்தி
அவரவர்  நிலைமைக்கும்  தன்மைக்கும்  ஏற்பச்   செய்யுள் செய்தற்குரிய
மரபுகளையும் புலப்படுத்தினார்.
 

மேலும்  இன்பப்பொருளாகிய  காதல்   பற்றி  நிகழும்  அகப்பொருள்
ஒழுகலாறுகளைக்   கூறுமிடத்துச்   சுட்டி   ஒருவர்    பெயர்   கூறாமல்
நானிலத்தில்  உள்ள  ஆடூஉ  மகடூஉ  யாவர்க்கும் ஒப்ப   எக்காலத்தும்
பொருந்துமாறு  கூறல் முறைமை என்பது உணர அவரைக் கிழவன் கிழத்தி
என  அமைத்து  அவர்தம்  ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராகப் பாங்கன்,
தோழி,  செவிலி, பரத்தை  முதலானோரையும்  பார்ப்பார் அறிவர் பாணர்
கூத்தர்  பாடினி இளையோர்  முதலானோரையும்  வகுத்து அவரவர்க்குரிய
இலக்கணங்களையும் விரித்தோதினார்.
 

அவ்வாற்றான்  களவு    கற்பென்னும்   கைகோள்கட்கு   உரியராகிய
தலைவன்  தலைவி  முதலானோரும் புறத்திணைக் குரியாராக  ஓதப்பெற்ற
அந்தணர்   முதலிய   நாற்பாலாரும்   குறுநில மன்னரும் படைத்தலைவர்
முதலானோரும்   பல்வேறு   வினைகளைப் புரியும்  வினை   வல்லாரும்
குற்றேவல்   மாந்தரும்   பிறரும்    மேற்கொள்ளும்   ஒழுகலாறு பற்றிய
நிகழ்ச்சிகளைத்      தொன்னூலோர்     மரபினை       மேற்கொண்டு,
அவ்வத்திணைக்குரிய    மாந்தர்  கூற்றாகவும்  தம்கூற்றாகவும்  அமைந்த
இலக்கணங்களையும்  இயற்சொல்,  திரிசொல்,   திசைச்சொல்,   வடசொல்
என்னும் நால்வகைச் சொற்களைக்  கொண்டு  அமைக்கப்பெறும்  செய்யுள்
பற்றிச் செய்யுளியலுள்    கூறப்படும்   முறைமையான்  அச்செய்யுட்களின்
பொருளை   மாணாக்கர்   திரிபுபடாமல் உணர்தல் வேண்டுதலின்  அவை
பற்றிய இலக்கணங்களைத் தொகுத்து ஓதுவாராய்த் தெரிபு வேறுநிலையலும்
குறிப்பிற்றோன்றலுமாக நிகழுமெனப்பெற்ற இயற்சொல் முதலாய நால்வகைச்
சொற்களும், மாத்திரை  முதலாய உறுப்புக்களான்  அமையும்   அறுவகைச்
செய்யுட்கண்      குறிப்பிற்றோன்றலமைந்து    வருமென்றும்,     அவை
சொல்லதிகாரத்து  ஓதிய  இலக்கணத்தின் வேறுபட்டு அகமும் புறமுமாகிய
பொருள்களை  உணரநிற்கும்  என்றும்   கூறலின் இவ்வியல்  பொருளியல்
எனப்பெயர் பெறுவதாயிற்று.
 

அஃதாவது     இருதிணை    ஐம்பாற்    பொருள்களின்    பண்பும்
செயலுமாகியவற்றை    உணர்த்தற்குச்    சொல்லதிகாரத்துள்  ஓதப்பெற்ற
விதிகளான்  ஆக்கமுற்றமைந்த   சொற்கள், பொருளதிகாரத்துள் தலைவன்
தலைவி   முதலானோர்   கூற்றுக்களுள்   அமைந்து  வருங்கால்  அவை
சொல்லிலக்கண   நெறி   பற்றியமைந்த  பொருளினின்றும்   வேறுபட்டுத்
தலைவன்  தலைவி   முதலானோர்   கருதிய    பொருளைப்     பயந்து
நிற்குமென்றும்   அங்ஙனம்    பொருள்   பயத்தற்கும்    அச்சொற்களே
கருவியாக உள்ளமையான்  அப்பொருளும்    அவற்றிற்குரிய   பொருளே
என்றும்,  பொருளதிகாரத்துள் சொற்பொருளையறியும்  முறைமை  கூறலின்
பொருளியல் எனப்பட்டது என்றவாறு.
 

இலக்கியம்    என்பது   இருதிணைப்   பொருள்களிடத்தும்   சிறிதும்
பெரிதுமாக நிகழும்  நிகழ்ச்சிகளுள்   யாதானும்  ஒன்றைச்  செய்யுளாக்கிச்
சொல்லுமிடத்துப் பட்டாங்கு கூறாமல் உயர்வு நவிற்சியாகவும் உவம வாயிற்
படுத்தும்  சுவை  (மெய்ப்பாடு)  உணர்வு   தோன்றப்  புனைந்துரைக்கப்
பெறுவதொன்று ஆதலின் புலவோர் தாம் எடுத்துக்  கொண்ட  பொருளை
அங்ஙனம் புனைந்துரை வகையாற் கூறுமாறு போல அதனைக் கூறுதற்குக்
குரிய  கருவியாகிய  சொற்களைப்  புனையுங்காலும்  குறிப்பாற்  பொருள்
பயக்குஞ் சொற்களைப் பெருக அமைத்தலும் வெளிப்படைச் சொற்களுக்குக்
குறிப்புப் பொருளை ஏற்றி அமைத்தலும் செம்மை சான்ற இலக்கியங்களைச்
செய்யும் மரபாகும். அங்ஙனம்   வெளிப்படைச்   சொற்களும்    குறிப்புப்
பொருளை உள்ளடக்கி நிற்கும் முறைமையைத் தெரிந்து அதனைப் படைத்த
ஆசிரியன்   கருதிய   பொருளை   உணர்ந்து  கொள்ளும்   பாங்கினை
அறிவித்தலே இவ்வியலின் கோட்பாடாகும்.
 

செய்யுட்கண்   பொருளையும்,    சொல்லையும்    புனைந்து   கூறும்
முறைமையாவது :  பருப்பொருளுக்கு  நுண்பொருளின்   தன்மையையும்,
நுண்பொருளுக்குப்  பருப்பொருளின்  இயல்பையும், உயிரில்  பொருளுக்கு
உயிர்ப்பொருளின் இயல்பையும், உயிர்ப்பொருளுக்கு  உயிரில்  பொருளின்
தன்மையையும்,   அஃறிணைப்   பொருளுக்கு   உயர்திணைப் பொருளின்
ஒழுக்கத்தையும்,  உயர்திணைப்  பொருட்டு   அஃறிணைப்    பொருளின்
செயல்களையும் ஏற்றிக்  கூறுதலும், இல்பொருளை  உள்பொருள் போலவும்
உள்பொருளை இல்பொருள் போலவும் புனைந்து கூறலும் அவை போல்வன
பிறவுமாம்.
 

செய்யுளைப்படைக்கும்  ஆசிரியன்   அங்ஙனம்   புனைந்துரைத்தற்குக்
காரணம்  சுவை (மெய்ப்பாடு) உணர்வும் ஒரு பொருளை ஒரு பொருளொடு
ஒப்புநோக்கிக் காணும் நுண்ணறிவும் பிறவுமாகும்.
 

இத்    தொன்னெறி   மரபினை   இக்கால   அறிஞர்   பெருமக்கள்
படைப்பிலக்கிய  நெறிமுறை   எனவும்,  இலக்கியக்  கோட்பாடு  எனவும்,
இலக்கிய உத்தி எனவும் கூறுவர்.
  

உரையாசிரியன்மார் இவ்வியலை  ஒழிபியல் என்றும் வழுவமைதி கூறும்
இயல்  என்றும்    கூறுவர். அவர்   கருத்து   ஒவ்வாமையை மேல்வரும்
சூத்திரங்களானும் உரை விளக்கங்களானும் ஓர்ந்தறிக.
 

சூ. 197 :

இசைதிரிந் திசைப்பினும் இயையும் மன்பொருளே

அசைதிரிந் திசையா என்மனார் புலவர்

(1)
 

க - து :

"தெரிபுவேறு  நிலையிலும்   குறிப்பிற்   றோன்றலும்  இருபாற்
றென்ப   பொருண்மை    நிலையே"    (சொல்-158)    எனச்
சொல்லதிகாரத்து  ஓதியவாறன்றி   அகப்பொருள்  மாந்தர்தம்
உரையாடற்கண்  பிறிதோராற்றான்  வேறுபட்டு  வரும்  எனச்
சொற்பொருள் அமைதி பற்றியதொரு பொதுமரபு கூறுகின்றது.
 

பொருள் :அகப்பொருள் மாந்தர்தம் கூற்றாக வருமிடத்து நால்வகைச்
சொற்களும்  சொற்றொடர்களும் சொல்லதிகாரத்து   ஓதப்பட்டவாறன்றிப்
பொருள்    திரிந்திசைக்குமாயினும்     அங்ஙனம்    வேறுபட்டிசைக்கும்
அப்பொருளும் அவற்றிற்குப்  பொருளாகற்குப்  பொருந்தும். அவ்வழி அப்
பொருள்திரிபிற்கேற்ப  அச்சொற்களின் உறுப்புக்கள் திரிந்திசைக்க மாட்டா
எனக் கூறுவர் புலவர்.
 

இப்   பொருள்நிலை  அகப்பொருள்   மாந்தர்தம்   கூற்றுப்   பற்றிய
மரபாகலின்  சொல்லதிகாரத்துள்  ஓதப்பெற்ற  குறிப்புமொழி  வகைகளுள்
அடங்காமையின்   வேறாக  ஓதப்பட்டதென்பது   விளங்க "இயையும் மன் பொருளே"   என்றார்.    அங்ஙனம்   வேறுபட்டு   வரினும்  அவையும்
அச்சொற்களுக்குப்   பொருளாக அமைந்து  திகழும்   என்றதனான் "மன்"
ஆக்கத்தின் கண்வந்தது.
 

எ - டு : கொல்வினைப் பொலிந்த

(அக-9)
 

என்னும் அகப்பாட்டினுள்
 

"குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து

ஞாயிறு படினும் ஊர்சேய்த் தெனாது

துணைபரி துரக்குந் துஞ்சாச் செலவின்

எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண்

ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலைஇப்

பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்

கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக்

கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்

பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்

தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ

நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்

அந்தீங் கிளவிக் குறுமகள்

மென்றோள் பெறனசைஇச் சென்றஎன் நெஞ்சே"
 

எனத் தன் நெஞ்சினை உயர்திணைப்  பாற்படுத்துத் தனக்குரிய  பண்பு
செயல்களைக்   கற்பித்துக்   கூறும்  தலைவன்  நெஞ்சிற்கு  உயர்திணை
வினை கொடுத்துத்  தோய்ந்தனன்  கொல்லோ  எனச் சொல்லுறுப்பினைத்
திரிக்காமல் தோய்ந்தன்று  கொல்லோ என அஃறிணைக்குரிய  முடிபையே
கூறினமை கண்டு கொள்க.
 

குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ

வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக்

கண்களி பெறூஉம் கவின்பெறு காலை

எல்வளை நெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇயர்

சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாது

ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ

அருளா னாகலின் அழிந்தி வண்வந்து

தொன்னலன் இழந்தவென் பொன்னிறம் நோக்கி

ஏதி லாட்டி இவளெனப்

போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே

(நற்-56)
 

எனத் தலைவி தன்னெஞ்சிற்கு உயர்திணை முடிபு தாராமல் அஃறிணை
முடிபே தந்தவாறு கண்டு கொள்க.
 

பிறவாறு வருவன  பற்றி எல்லாம் இனிவரும் நூற்பாக்களான் ஆசிரியர்
கூறுமாற்றான் அறிந்து கொள்க.
 

இதற்கு இளம்பூரணர்  கூறும் உரையும் விளக்கமும் சொல்லிலக்கணமாக
அமைதலன்றி,   ஈண்டைக்கு   ஒவ்வாமையறிக.   நச்சினார்க்கினியர்  தம்
வல்லுரைக்கேற்ப ‘அசைதிரிந்தியலா’ எனப் பாடங் கொள்வார்.