சூ. 230 : | இறைச்சி தானே உரிப்புறத் ததுவே |
(34) |
க - து : | அகத்திணை மாந்தர் கூற்றினுள் உள்ளுறைப்பொருள் பயப்பனவாகப் பின்னர் ஓதப்பெறும் ஐந்தனுள் ‘உடனுறை’ எனப்படும் இறைச்சியினது இலக்கணங் கூறுகின்றது. |
பொருள் :நிலத்துவழி மருங்கிற் றோன்றும் (பெய - 42) அஃறிணைப் பொருள்களைப் பற்றிவரும் இறைச்சி என்னும் உள்ளுறையாவது மக்கள் நுதலிய அகனைந்திணை ஒழுகலாறாகிய உரிப்பொருளின் புறத்ததாகும். |
என்றது : இறைச்சியாவது மக்களும் தெய்வமுமல்லாத ஏனைய கருப்பொருள்களின் செயலும் பண்புமாகிய நடக்கை பற்றி வரும் என்றவாறு. |
பெயரியலுள் இயற்பெயர் பற்றிய இலக்கணமரபுகளைக் கூறுமிடத்து இயைபும் விளக்கமும் கருதி ஆசிரியர், |
‘’இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும் |
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா |
நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான’’ |
(பெய-42) |
|
எனக் கூறிய சூத்திரத்தான் முல்லை முதலாய நிலத்துவழி மருங்கிற்றோன்றி இயற்பெயர்க்குரியனவாக அமைந்த கருப்பொருள்களின் செயலும் பண்புமே ‘இறைச்சியாக’ வரும் எனப் புலப்படுத்தியமையான், எஞ்சிய அதன் இலக்கணத்தை ஈண்டுப் புலப்படுத்துவாராய் அது மக்கட்குரிய ஒழுகலாறாகிய உரிப்பொருளின் புறத்ததாக வரும் என்றார். |
நாடக வழக்கத்தானும் உலகியல் வழக்கத்தானும் ஓதப்பெறும் ஒழுகலாறுகள் எல்லாம் உயர்திணையாகிய மக்கட்கே உரிய பொருளாகும் என்பது நன்கு விளங்க ‘உரி’ (உரியபொருள்) என நூலோர் குறியீடு செய்து கொண்டாற்போல அஃறிணைப் பொருள் (கருப்பொருள்) களின்பால் நிகழும் பண்பும் செயலுமாகிய நடக்கைகளை ‘இறைச்சி’ எனக் குறியீடு செய்தனராவர். [இறை = தங்குதல். சி = விகுதிப் பொருள் விகுதி. இறு + ஐ = இறை, இறை + சி = இறைச்சி] |
பறவை விலங்கு முதலாயவற்றின் செயல்கள் ஒழுக்கம் எனப்படாமையான் உயர்திணை மாந்தர்க்குரிய ஒழுக்கமாகிய ‘உரி’ என்னும் குறியீட்டினைச் சுட்டி அதற்கு மறுதலையாயது என்பது விளங்க அஃறிணைப் பொருள்களின் செயலும் பண்புமாகிய நடக்கையை ‘உரிப்புறத்தது’ என்றனர் நூலோர். |
இறைச்சி என்பது கருப்பொருள்களின் நடக்கைகளைப் பற்றிய குறியீடு. அதனான் "இறை" என்னாது அதன் உடனுறைவு தோன்ற இறைச்சி என்றனர். இறைச்சியிடத்ததாகத் தோன்றும் உள்ளுறையை உடனுறை என்று குறியீடு செய்தனர் என அறிக. |
உள்ளுறை உவமம் குறிப்பாற்றோன்றும் சொல்லிலக்கண வகையைச் சார்ந்ததாயினும் அஃது அகப்பொருளுக்கே சிறந்துரிமையுடையதென்பது தோன்ற அதனைச் சொல்லதிகாரத்துள் வைத்து ஓதாமல் அகத்திணையியலுள் வைத்து, |
"உள்ளுறை யுவமம் ஏனையு வமமெனத் |
தள்ளா தாகும் திணையுணர் வகையே" |
எனவும் |
"உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் |
கொள்ளும் என்ப குறியறிந் தோரே" |
எனவும் தோற்றுவாய் செய்து அதன் இயல்பினை, |
"உள்ளுறுத் திதனொடு ஒத்துப்பொருள் முடிகென |
உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம்" |
எனக் கூறினார். ஏனை உவமப்போலியை உவமவியலுடன் கூறினார். அந்நெறியே பற்றி உள்ளுறை வகை ஐந்தும் இசை திரிந்திசைப்பனவாகலின் அவற்றை இவ்வியலுட் சுட்டி ஓதுவாராயினார் என அறிக. |
இனி "உரிப்புறத்ததுவே" என்பதற்குக் கருப்பொருள் எனப் பொருள் கொண்டால் என்னை எனின்? இறைச்சி என்னும் தொழிற்பெயர் அங்ஙனம் உரைகோடற் கியையாதாகலின் கூடாதென்க. |
இறைச்சி என்பது கருப்பொருள்களின் பண்பும், செயல்களும் ஆகிய நடக்கைகளே என்பதனை, |
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் |
(கற்-29) |
எனவும் |
புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து |
இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி |
(நற்-7) |
அன்புறு தகுந இறைச்சியும் சுட்டலும் |
(பொரு-36) |
எனவும் |
ஆசிரியர் ஓதுதலான் அறிக. "ஆற்றிடைக் கண்ட பொருள் " என்றது கருப்பொருள்களை. "இறைச்சி" என்றது அவற்றின் நடக்கைகளை. ‘இடைச்சுரத்து இறைச்சி" என்றது கருப்பொருள்களின் நடக்கைகளை. ‘வினை’ என்றது தலைவன் செய்த தண்ணணி முதலியவற்றை என்பது அச்சூத்திர உரைகளுள் கண்டுகொள்க. மேலும் |
வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோல் |
ஏழுந்தன் பயன்கெட இடைநின்ற நரம்பறூஉம் |
யாழினும் நிலையில்லாப் பொருளையும் நச்சுபவோ |
(கலி-7) |
இன்புற்றார்க் கிறைச்சியாய் இயைவதே செய்தாய்மன் |
அன்புற்றார் அழநீத்த அல்லலுட் கலங்கிய |
துன்புற்றார்த் துயர்செய்தல் தக்கதோ நினக்கு |
(கலி-184.31) |
எனவரும் நல்லிசைப் புலவோர் செய்யுட்கண் இச்சொல் கருப்பொருளின் செயற்பாடு குறித்தே நிற்றலைத் தேர்ந்து கொள்க. |
இச் சூத்திரத்தான் இறைச்சியின் இலக்கணங் கூறினார். இறைச்சியுள் ஒரோவழி உள்ளுறைப்பொருள் பிறக்குமாற்றை வரும் சூத்திரத்தாற் கூறுப. |