வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்து |
ஏந்து மருப்பின் இனவண்டு இமிர்பூதும் |
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் |
ஐவன நெல்லை அறையுரலுட் பெய்திருவாம் |
ஐயனை ஏத்துவாம் போல அணிபெற்ற |
மைபடு சென்னிப் பயமலை நாடனை |
தையலாய் பாடுவாம் நாம் |
(குறிஞ்சிக்கலி-7) |
இதன்கண் "வேங்கை தொலைத்த வாரணம்" என்றதனான் தலைவன் வரைந்தெய்தி ஊரார் தூற்றும் அலரைத் தொலைப்பான் என்பதும் "இனவண்டு இமிர்பூதும் சாந்தமரம்" என்றதனான் தலைவன் தமர் மணம் பேசவருவார் என்பதும் தோழி கருதினாளாக இறைச்சியிற் பொருள் பிறந்தவாறு பின்னர்க் கொச்சக உறுப்புக்களுள் அமைந்துள்ள உள்ளுறை உவமங்களான் அறியலாம். இவை உவமப்போலியாக நின்று அக்கருத்துக்களைத் தோற்றுவியாமையான் உள்ளுறை உவமமாகாமல் இறைச்சியிற்பொருளாய் நின்றன என்க. |
[இதன்கண் "மைபடு சென்னிப் பயமலைநாடன்" என்பது சுட்டு என்னும் உள்ளுறையாகும். அவ்வுள்ளுறைப் பொருளாவது தலைவன் தண்ணளியுடையான் என்று உணர்த்துவதாகும்]. |
இவ் இறைச்சிப் பொருள், யானை வேங்கையைத் தொலைத்தல், வண்டு இமிர்பூதல் ஆகிய கருப்பொருள்களின் செயல்களாகிய நடக்கை பற்றிப் பிறந்து நிற்றலைக் கண்டு கொள்க. இனிக், |
கன்றுதன் பயமுலை மாந்த முன்றில் |
தினைபிடி யுண்ணும் பெருங்கல் நாட |
கெட்டிடத்து உவந்த உதவி கட்டில் |
வீறுபெற்று மறந்த மன்னன் போல |
நன்றி மறந்து அமையாயாயின் மென்சீர்க் |
கலிமயிற் கலாவத்தன்ன இவள் |
ஒலிமென் கூந்தலும் உரியவாம் நினக்கே |
(குறு-225)
|
இதன்கண், வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாமல் நன்றியுடையையாயின் இவள் ஒலி மென்கூந்தலும் உரியவாம் என ஏனையுவமத்தான் திணைப் பொருள் விளங்கிக் கிடத்தலான் |
"கன்றுதன் பயமுலை மாந்த முன்றில் |
தினைபிடி யுண்ணும் பெருங்கல் நாட" |
என்னும் கருப்பொருள்களின் செயல்கள். அஃதாவது இறைச்சி வண்ணனைமாத்திரையாய் நாட்டைச் சிறப்பித்து நின்றவாறு கண்டு கொள்க. |