சூ. 238 : | இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி |
| நிரம்பக் கூறி நிறுத்தல் அன்றியும் |
| வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும் |
| நல்வகை யுடைய நயத்திற் கூறியும் |
| பல்வகை யானும் படைக்கவும் பெறுமே |
(42) |
க - து : | களவுக்க தலத்தே தோழிக்குரிய ஒருசார் கூற்றுப் பற்றிய மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவியை எய்துவிக்குமாறு இரந்து குறையுற்ற தலைவனைத் தோழி பெரிதும் சேய்மைப்படுத்தி நீக்கி நிறுத்துக் கூறுதலன்றியும், நும் களவொழுக்கத்தினை யான் அறிவல் என வாய்மை கூறலும், தலைவியை யானறியேன், குற்றேவல் நிலையினேன் என்பவை முதலாய பொய்ம்மைகளை இட்டுரைத்தலுமாகத், தலைவனது காதற்கேண்மை மிகுதற்குரிய சொற்களை அறத்தாற்றின் நயம்படக் கூறியும் அங்ஙனம் பல்வகையானும் படைத்து மொழியவும் பெறும். |
அகத்திணையியலுள்ளும், களவியலுள்ளும் தோழிக்குரியவாக விதந்து கூறிய கூற்றுக்களேயன்றி அவள் இவ்விவ்வாறெல்லாம் படைத்து மொழியவும் பெறும் என நின்றமையின் உம்மை இறந்ததுதழீஇய எச்ச உம்மையாம். |
எ - டு : | நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறைப் |
| புதுவை யாகலின் கிளத்தல் நாணி |
| நேரிறை வளைத்தோள்நின் தோழி செய்த |
| ஆருயிர் வருத்தங் களையா யோஎன |
| எற்குறை உறுதி யாயின் சொற்குறை |
| எம்பதத்து எளியன் அல்லள் எமக்கோர் |
| கட்காண் கடவுள் அல்லளோ பெரும |
| ஆய்கோல் மிளகின் அமலையங் கொழுங்கொடி |
| துஞ்சுபுலி வரிப்புறம் தைவரும் |
| மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே |
(நச்-மேற்) |
இது தலைவி தன்னால் நெருங்கற்கரியள் எனங் சேய்மைப்படுத்தியது. |
| அறியே மல்லேம் அறிந்தனம் மாதோ |
| பொறிவறிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் |
| சாந்தம் நாறும் நறியோள் |
| கூந்தல் நாறும் நின்மார்பே தெய்யோ |
(ஐங்-240) |
இது வாய்மை கூறியது. பொய் தலைப்பெய்தலாகத் தோழி கூற்று வந்துழிக் கண்டு கொள்க. |
| குன்றக் குறவன் காதல் மடமகள் |
| வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி |
| வளையள் முளைவாய் எயிற்றன் |
| இளையள் ஆயினும் ஆர்அணங் கினளே |
(ஐங்-255) |
எனத் தலைவன், தோழி அவள் இளையள் எனப் பொய்தலைப் பெய்த்தனைக் கொண்டு கூறியமை கண்டுகொள்க. |
| அன்னையு மறிந்தனள் அலருமா யின்று |
| நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும் |
| இன்னா வாடையும் மலையும் |
| நும்மூர்ச் செல்கம் எழுமோ தெய்யோ |
(ஐங்-236) |
இது நல்வகையுடைய நயத்திற் கூறியது. இன்னும் பிறவாறு வருவனவற்றையெல்லாம் இதுவே களனாக அடக்கிக் கொள்க. |