சூ. 254 : | இளிவே இழவே அசைவே வறுமை என |
| விளிவில் கொள்கை அழுகை நான்கே |
(4) |
க - து : | இளிவு முதலாய நான்கு பொருள்பற்றி அழுகை தோன்றுமென்கிறது. |
பொருள் : இளிவு இல்லாத கோட்பாட்டினையுடைய அழுகையென்னும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாகிய பொருள் இழிவும் இழவும் அசைவும் வறுமையும் என நான்குமாம் எனக்கூறுவர் புலவர். |
இழிவென்பது எதுகை நோக்கி இளிவென நின்றது. அன்றி இளிவென்பதும் ஒரு சொல்விழுக்காடு எனினும் அமையும். நான்கே என்னும் ஏகாரம் ஈற்றசை. ஏனைய எண்ணுப் பொருளின. என்ப என்பது அதிகாரத்தான் வந்தது. இவை நான்கும் இருபாலும் பற்றிவரும். |
1. இழிவாவது : இகழ்தற்குரிய பண்பும் செயலும் நிலைமையும் பற்றிவரும் இழிதகவு. |
எ - டு :"கடல் கண்டன்ன" என்னும் அகப்பாடனுள் நீ மாணிழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தமையான் தன்னை இழிதகவு செய்ததாகக் கருதிய பரத்தை, |
"தன்முகத்து எழுதெழில் சிதைய அழுதனள்" (அக-176) |
என்றது தண்கண் அமைந்த இழிவுபற்றிப் பிறந்த அழுகை. |
"கயமலருண்கண்ணாய்" என்னும் கலியுள் "தானுற்ற நோயுரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்" எனத் தலைவன் இழிவந்தொழுகுதல் காரணமாகச் "சேயேன்மன் யானுந் துயருழத்தேன்" (கலி-37) எனத் தோழி கூறியது பிறரிழிவு காரணமாகப் பிறந்த அழுகையாம். |
2. இழவாவது :தாய், தந்தை, கணவன் முதலிய சுற்றத்தைப் பிரிதலும் பெறற்கரிய பொருளை இழத்தலுமாம். |
எ - டு : | "மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே" |
(புறம்-249) |
என்பது தன்கண் தோன்றிய இழவு பற்றிப் பிறந்த அழுகை. |
| "நின்னோய்த் தலையை யுமல்லை தெறுவர |
| என்னா குவள்கொல் அளியள் தானென |
| என்னழி பிரங்கும் நின்னொடு யானும்" |
(அகம்-73) |
எனத் தலைவன் பிரிவிற்குத் தோழி இரங்கினாள் என்றமையின் இது பிறர்கண் அமைந்த இழவுபற்றி வந்த அவலமாம். |
3. அசைவாவது : நிலையிற்றிரிதல். அஃதாவது பண்டைய உயர்வு முதலிய கெட்டுத் தாழ்வுற்ற நிலைமை, தாழ்வின் நீங்கி உயர்தலும் திரிபே எனினும் ஈண்டு அழுகைக்குப் பொருளாகக் கூறலின் நிலையின் இழிதலாகிய திரிபே கொள்ளப்படுமென்க. |
எ - டு : | வையம், புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும் |
| இன்னா இடும்பை செய்தாள் |
(கலி-141) |
என்பது தன்கண் தோன்றிய அசைவுபற்றிப் பிறந்த அவலமாம். |
| இல்வழங்கு மடமயில் பிணிக்கும் |
| சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே |
(புறம்-164) |
என்பது பிறர்கண் உற்ற அசைவுபற்றிப் பிறந்த அவலம். |
4. வறுமையாவது : இலம்பாடு. அஃதாவது தான் நுகர்தற்கு அவாவும் பொருளைப் பெறுதற்கியலா நிலைமை. |
எ - டு : | இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை |
| சுவைத்தொ றழூஉந்தன் மகத்து முகநோக்கி |
| நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென் |
| மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ |
| நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண |
(புற-164) |
இதனுள் "சுவைத்தொ றழூஉந்தன் மகவு" என்றது தனக்கு உற்ற வறுமைபற்றி வந்த அழுகை. |
| "மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் |
| மழைக்கண் என்மனையோள்" |
என்றது பிறர்க்குற்ற வறுமைபற்றிப் பிறந்த அழுகை. |
| "விளிவில் கொள்கை அழுகை" என்றதனான் |
| இன்ன விறலும் உளகொல் நமக்கென |
| மூதிற் பெண்டிர் கசிந்தழல் நாணிக் |
| கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை |
(புறம்-19) |
எனப் பெருமிதத்தான் வரும் உவகைக்கலுழ்ச்சி போல்வனவும் அழுகை என்னும் மெய்ப்பாட்டினுள் அடக்கிக் கொள்ளப்பெறும் என்பார் பேராசிரியர்; சுவை என்னும் நோக்கிற்கு இது பொருந்தும். மெய்ப்பாடு பெருமிதம் எனலே நேரிது. |