|
சூ. 271 : | இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் | | எதிர்பெய்து பரிதல் ஏத மாய்தல் | | பசியட நிற்றல் பசலை பாய்தல் | | உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் | | பொய்யாக் கோடல் மெய்யே என்றல் | | ஐயஞ் செய்தல் அவன்றம ருவத்தல் | | அறனழித் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல் | | எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் | | ஒப்புவழி யுவத்தல் உறுபெயர் கேட்டல் | | நலத்தக நாடின கலக்கமு மதுவே | (22) |
க - து : | இயற்கைப்புணர்ச்சி முதல் தோழியிற் புணர்வு நால்வகையாக வகுத்த களவொழுக்கத்தின்கண் சிறந்து வரும் இருபத்து நான்கு பொருள்களைக் கூறிக் களவின் பகுதியாய்க் களவிற்கும் வரைவிற்கும் இடைப்பட்ட வரைவு மலிதல், வரைவு கடாதல் பகுதிக்கும் ஒருவழித்தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ஆகிய பிரிவுப் பகுதிக்கும் உரியவாக நிகழும் கிளவிகள் பற்றிவரும் உணர்வும் செயலுமாகிய பொருள்களைத் தொகுத்து அவையும் மன்னிய வினையின் நிமித்தமாய் மெய்ப்பாட்டுப் பொருளாக அமையும் என்கின்றது. | பொருள் :நலமுற ஆராயின் இன்பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் ஈறாகக் கூறப்பட்ட இருபதும் மேற்கூறிய மன்னிய வினையின் நிமித்தமாம். எனவே இவையும் அவையலங்கடை, மெய்ப்பாட்டிற்குரிய பொருளாதற்குள என்பதாம். | ‘நலத்தக நாடின்’ என்றது இலக்கணநெறி பொருந்த ஆராயின் என்றவாறு. அஃதாவது பசியடநிற்றல், ஐயஞ் செய்தல் போல்வன புறப்பொருள் பற்றிய ஒழுகலாற்றிற்கும் ஏற்ப நிற்பினும் ஆண்டுப் பசியடுதல், வறுமை காரணமாக நிற்கும்; ஈண்டுக் காதலுணர்வால் உண்ணுதற்கொவ்வா உளநிலை காரணமாக நிற்கும் என ஓர்ந்து உணர்தல் வேண்டு மென்பதாம். அங்ஙனம் நாடுதல் மேல்வருவனவற்றிற்கும் ஒக்குமாதலின் "நலத்தக நாடின்" என்பதை இடைநிலை விளக்கமாகக் கொள்க. | கலக்கமும் நலத்தக நாடின், என மாறிக் கூட்டிக் கொள்க. கலக்கமும் என்னும் உம்மையை ஏனைச் செவ்வெண்களோடும் கூட்டிக் கொள்க. கலக்கம் நடுவணைந்தினைக்கண் பெருந்திணைப் பகுதியாக வந்து நிகழும் என்பதனை அறிவிக்கப் பிரித்துக் கூட்டப்பட்டதென்க. | இவற்றையெல்லாம் புணர்ச்சி நிமித்தமாக வலிந்துரை கூறி விளக்குவார் பேராசிரியர். அவர் கருத்துச் சொற்பொருளமைதிக்கும் நூல் நெறிக்கும் பொருந்தாமை உணரப்படும். | 1. இன்பத்தை வெறுத்தலாவது :தலைவன் பிரிவு காரணமாக இன்பத்திற்குரிய பொருள்களை வெறுத்தல், இன்பம் - ஆகுபெயர். அவை தென்றல், மாலைப்பொழுது, நிலவு, யாழ், குழல், சாந்து, பூ முதலியவையாம். | எ - டு : | வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும் | | நின்வலித் தமைகுவன் மன்னோ அல்கல் | | புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோற் |
| கல்லாக் கோவலர் ஊதும் | | வல்வாய் சிறுகுழல் வருத்தாக் காலே | (அக-74) | எனவரும். இஃது அவலத்திற்குப் பொருளாக அமையும். | 2. துன்பத்துப் புலம்பலாவது : பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல். | எ - டு : | காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் | | யாமத்தும் யானே உளேன் | (குறள்-1167) | எனவரும். இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும். | 3. எதிர்பெய்து பரிதலாவது :காதலர் தம் காதன் மிகுதியான் தோன்றும் உரு வெளிப்பாடு கண்டு இரங்குதல். | எ - டு : | வாரா தாயினும் வருவது போலச் | | செவிமுத லிசைக்கும் அரவமொடு | | துயின்மறந் தனவால் தோழியெங் கண்ணே | என்பது தலைவன் உரு வெளிப்பாடு கண்டு தலைவி இரங்கியது. | | வானம் பாடி வறங்களைந் தானாது | | அழிதுளி தலைஇய புறவிற் காணவர | | வானர மகளோ நீயே | | மாண்முலை யடைய முயங்கி யோயே | (ஐங்-418) | என்பது தலைவி உரு வெளிப்பாடு கண்டு தலைவன் இரங்கியது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 4. ஏதமாய்தலாவது : கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணி இனைதல். | அவை குறித்த பருவத்து வாராது மறந்துறைவர் கொல், ஆற்றிடைத் தலைவற்கு ஊறு நேருங்கொல், ஏதிலர் வரைவு தமர் நேர்வர்கொல் என்பன முதலியனவாம். | எ - டு : | . . . . . . . . மறத்தனர் | | கொல்லோ தாமே களிறுதன் அன்னோர், | | உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது | | ...... ...... ...... ...... ...... ....... ....... ...... ........ ....... ...... .......
| | அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் | | அத்த நீளிடை அழப்பிரிந் தோரே | (குறு-307) | என்பது, தலைவன் பிரிந்த வழி, மறப்பன் கொல்லோ எனவும் ஆற்றினது ஊறு எண்ணியும் தலைவி வருந்தியது. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
5. பசியட நிற்றலாவது : பசிவருத்தவும் அதனைக் களைய முற்படாமல் உணவை வெறுத்திருத்தல். | எ - டு : | இனியான், உண்ணலும் உண்ணேன் | | வாழலும் வாழேன் ........... | (கலி-23) | எனவரும். | | அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகன் | | பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு | | நனிபசந் தனள்என வினவுதி ........... | (அகம்-48) | என்பதுமது. இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 6. பசலை பாய்தலாவது :பிரிவாற்றாமையான் மாமைக்கவின் மாறி மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்) | எ - டு : | யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப | | இரும்பல் கூந்தல் திருந்திழை யரிவை | | திதலை மாமை தேயப் | | பசலை பாயப் பிரிவே தெய்யோ | (ஐங்-231) | எனவரும். இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 7. உண்டியிற் குறைதலாவது :தாயர் பரிந்து உணவு ஊட்டிய வழி நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணுதல். | எ - டு : | தீம்பா லூட்டினும் வேம்பினும் கைக்கும் | | வாராய் எனினும் ஆர்வமொடு நோக்கும் | | நின்னிற் சிறந்ததொன் றிலளே | | என்னினும் படாஅள் என்னிதற் படலே | (பேரா-மேற்) | இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 8. உடம்புநனி சுருங்கலாவது ;பசியட நிற்றலானும் உண்டியிற் குறைதலானும் மேனி மெலிவுறுதல். | எ - டு : | யாமெங் காதலர்க் காணே மாயின் | | செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் | | கல்பொரு சிறுநுரை போல | | மெல்ல மெல்ல இல்லா குதுமே | (குறு-290) | எனவரும். இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 9. கண்துயில் மறுத்தலாவது : உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம் உறங்க ஒருப்படாமையின் கண் துஞ்சாதிருத்தல். | எ - டு : | நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து | | இனிதடங் கினரே மாக்கள் முனிவின்றி |
| நனந்தலை யுலகமும் துஞ்சும் | | ஓர்யான் மன்ற துஞ்சா தேனே | (குறு-6) | எனவரும். இஃது அவலத்திற்குப் பொருளாக அமையும். | 10. கனவொடு மயங்கலானது : தன்னுணர்வின்றி ஒருகால் துயிலெய்திய வழி நேர்ந்த கனவிடத்துக் காதலனைக் கண்டு களித்து, விழித்த விழிக் காணாமையின் கலங்குதல். | எ - டு : | கோதை கோலா, இறைஞ்சி நின்ற | | ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் | | யாதென் பிழைப்பென நடுங்கி ஆங்கே | | பேதையைப் பெரிதெனத் தெளிப்பான் போலவும் | | கனவினாற் கண்டேன் தோழி காண்தக | (கலி-128) | எனவரும். இது மருட்கைக்கும் அவலத்திற்கும் பொருளாக அமையும். இச்செய்யுள் கற்பிற்குரியது. கனவு என்ற முறையில் ஈண்டுத் தரப்பட்டது. | 11. பொய்யாக் கோடலாவது :தலைவன் தண்ணளி செய்யவும் பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல். | எ - டு : | கனவினான் எய்திய செல்வத் தனையதே | | ஐய எமக்குநின் மார்பு | (கலி-68) | எனவும் | | வானின் இலங்கு மருவித்தே தானுற்ற | | சூள்பேணான் பொய்த்தான் மலை | (கலி-41) | எனவும் வரும். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். | 12. மெய்யே என்றலாவது :தலைவன் மாட்டுப் பொய்ம்மை நிகழினும் தன் காதன் மிகுதியான் அதனை மெய்ம்மையாகக் கருதிக் கொள்ளுதல். | எ - டு : | கானங் காரெனக் கூறினும் | | யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே | (குறு-21) | எனவரும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். | 13. ஐயஞ் செய்தலாவது :தலைவன் சொல்லையும் செயலையும் ஐயுற்றுக் கருதுதல். | எ - டு : | ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர் | | எண்ணுவ தெவன்கொல் அறியேன் என்னும் | (கலி-4) | இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும். |
14. அவன்தமர் உவத்தலாவது : தலைவனைச் சார்ந்தாரைக் கண்டுழியும் அவர் சொற்கேட்டுழியும் உளம் மகிழ்தல். எ - டு : வந்துழிக்கண்டு கொள்க. | அவன் தமரேயன்றி அவன்நாட்டுப்பொருள் முதலியவற்றை உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க. | எ - டு : | ........................ அவர் நாட்டு | | மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு | | காலை வந்த காந்தள் முழுமுதல் | | மெல்லிழை குழைய முயங்கலும் | | இல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே | (குறு-361) | எனவரும். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். | 15. அறனழித் துரைத்தலாவது :பிரிவுத் துன்பத்தான் உளம் நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப் பேசுதல். | எ - டு : | ஓஒ கடலே, | | தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமைஎடுத்துப் | | பற்றுவேன் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென் | | நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய் | | செய்யும் அறனில்லவன் ....... | (கலி-144) | என்பது தலைவன் அறனில்லான் என்றது. | | ஊஉர் அலரெழச் சேரி கல்லென | | ஆனா தலைக்கும் அறனில் லன்னை | | தானே இருக்க தன்மனை | (குறு-262) | என்பது அன்னை அறனில்லாள் என்றது. | | தன்னுயிர் போலத் தரீஇ உலகத்து | | மன்னுயிர் காக்குமிம் மன்னனும் என்கொலே | | இன்னுயிர் அன்னானைக் காட்டி எனைத்தொன்றும் | | என்னுயிர் காவா தது | (கலி-143) | என்பது அரசன் அறனில்லான் என்றது. இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும். அறனளித்துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந் தருவார் பேராசிரியர். அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதனான் அறியலாம். | 16. ஆங்கு நெஞ்சழிதலாவது : அறனழித்துரைத்தாங்குத் தன் நெஞ்சழிவு தோன்றப் பேசுதல். ஆங்கு உவமச்சொல். |
எ - டு : | பொங்கிரு முந்நீ ரகமெல்லாம் நோக்கினை | | திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயால் | | எங்கேள் இதனகத் துள்வழிக் காட்டீமோ | | காட்டீயா யாயின் கதநாய் கொளுவுவேன் | | வேட்டுவர் உள்வழிச் செப்புவேன், ஆட்டி | | மதியொடு பாம்பு மடுப்பேன் - மதி திரிந்த | | என்னல்லல் தீராயெனின் | (கலி-144) | எனவரும். | பிறர்தாம் அறனழிய நின்றார் தான் அறவழி நிற்பதாகத் தலைவி கருதுவதனான் தன்னெஞ்சழிய நின்று கூறினான் என்க. இதனைப், | | பேணான், துறந்தானை நாடும் இடம்விடாயாயின் | | பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப் | | புறங்காலிற் போக இறைப்பேன் முயலின | | அறம்புணை யாகலு முண்டு | (கலி-114) | என்பதனான் அறிக. இஃது அவலத்திற்குப் பொருளாக அமையும். | 17. எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலாவது : பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில்தான் காணும் பொருள் எல்லாம் தன்னைப் போலத் துன்புறுவதாகக் கருதிக்கோடல். மெய் என்றது பொருளை. உருவப்பொருளும் அருவப் பொருளும் அடங்க "எம்மெய்யாயினும்" என்றார். | எ - டு : | மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்! | | நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய | | என்றுயர் அறிந்தனை நரல்தியோ எம்போல | | இன்றுணைப் பிரிந்தாரை உடையை யோநீ | (கலி-129) | எனவரும். | இது தலைவி ஒப்புமை கொண்டு கூறியது. இனி மெய் என்பதற்கு உடலுறுப்பெனக் கொண்டு தலைவன் பிற பொருளைத் தலைவியொடு ஒப்புமை கொண்டு கூறலையும் இதன்கண் அடக்கிக்கொள்க. | எ - டு : | நுதலும் முகனும் தோளும் கண்ணும் | | இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ | | ஐதேய்ந் தன்று பிறையு மன்று | | மைதீர்ந் தன்று மதியு மன்று | | வேயமன் றன்று மலையு மன்று | | பூவமன் றன்று சுனையு மன்று |
| மெல்ல இயலும் மயிலு மன்று | | சொல்லத் தளரும் கிளியு மன்று | | என ஆங்கு | | அனையன பல பாராட்டி ....... ....... | (கலி-55) | எனவரும். | இதன்கண் தலைவன், தலைவி உறுப்பொடு ஒப்புமை கொண்டு கூறியமை கண்டு கொள்க. | | மதியும் மடந்தை முகனும் அறியாப் | | பதியிற் கலங்கிய மீன் | (குறள்-1116) | என்பதுமது. | இது தலைவி கூற்றின்கண் இளிவரலுக்கும், தலைவன் கூற்றின்கண் உவகைக்கும் பொருளாக அமையும். | 18. ஒப்புவழி உவத்தலாவது :தம் நிலைமைக்கேற்ப ஒப்பநிற்கும் பொருள்கண்டவழி உவப்புறுதல். | எ - டு : | எழுதரு மதியங் கடற்கண் டாஅங்கு | | ஒழுகுவெள் ளருவி ஓங்கு மலைநாடன் | | ஞாயிற னையன் தோழி | | நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே | (குறு-315) | இதன்கண் ஞாயிறு தலைவனுக்கும் நெருஞ்சி தலைவிக்கும் ஒப்பநின்று தலைவிக்கு உவப்பளித்தவாறு கண்டு கொள்க. | | கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப் | | பல்லா புகுதரும் புல்லென் மாலை | | முல்லை வாழியோ முல்லைநீநின் | | சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை | | நகுவை போலக் காட்டல | | தகுமோ மாற்றிது தமியோர் மாட்டே | (குறு-162) | இதன்கண் முல்லை தலைவியின் முறுவலொடு ஒப்ப நின்று தலைவற்கு உவகை செய்தவாறு கண்டு கொள்க. இதற்கு உரையாசிரியன்மார் "பால்கொளல் இன்றிப் பகல்போன் முறைக் கொல்காக் கோல் செம்மை ஒத்தி ...... (கலி-86) என்னும் கலிச் செய்யுளை எடுத்துக் காட்டுவர். அஃது ஊடல் நெஞ்சினளாய்த் தலைவி கூற்றாய்க் கற்பிற்குரித்தாவதல்லது ஈண்டைக்கு ஏலாமை அறிந்து கொள்க. இன்பத்தை வெறுத்தல் முதலிய இப்பொருள்கள் களவிற்கே உரியவை என்பது மேல் விளக்கப்பட்டது. | 19. உறுபெயர் கேட்டலாவது : தலைவனது பெருமை பற்றிய புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல். |
எ - டு : | பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ | | அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ | | குன்றகல் நல்நாடன் வாய்மையிற் பொய்தோன்றின் | | திங்களுள் தீத்தோன் றியற்று | (கலி-41) | எனத் தோழி தலைவன் பெருமைகூறிப் பின்னர்க், | | கூடி அவர்திறம் பாடஎன் தோழிக்கு | | வாடிய மென்றோளும் வீங்கின | | ஆடமை வெற்பன் அளித்தக்கால் போன்றே | (கலி-43) | எனத் தலைவியின் உவப்பினைத் தோழி விளக்கியவாறு கண்டு கொள்க. இவை இரண்டும் உவகைக்குப் பொருளாக அமையும். | 20. கலக்கமாவது :ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம். | எ - டு : | மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் | | நலிதரும் காமமும் கௌவையும் என்றிவ் | | வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை | | நலியும் விழும மிரண்டு | (கலி-142) | எனவும் | | கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று | | நாடுவேன் கண்டனென் சிற்றிலுள கண்டாங்கே | | ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய | | காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று | | மாண்மலர்க் கொன்றை யவன் | (கலி-142) | எனவும் வரும். இஃது அழுகைக்கும் இளிவரலுக்கும் பொருளாக அமையும். இவ் இருபது பொருளும் பெரும்பான்மையும் தலைவிக்குரியவாக நிகழும். சிறுபான்மை தலைவற்கும் ஏற்கும். ஏற்பவை மேலே கூறப்பட்டன. |
|