சூ. 298 : | இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே | (22) |
|
க - து : | ஒருவகை உவமம் பற்றியதொரு இலக்கணம் கூறுகின்றது. |
பொருள் :இரட்டையாக வரும் உவமம் உவமிக்கப்படும் பொருள் இரட்டையாக வருமிடத்தேயாம். என்றது; இரண்டு பொருளை இணைத்து விளக்க நேர்ந்த விடத்து உவமமும் இரட்டையாக வருதல் வேண்டுமென்றவாறாம். |
எ - டு : | விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் |
| கற்றாரோ டேனை யவர் |
(குறள்-410) |
இதன்கண் கற்றாரையும் கல்லாரையும் ஒருங்கு எடுத்து ஓருவமத்தான் விளக்க விலங்கொடு மக்களை இணைத்து உவமித்தவாறு கண்டு கொள்க. இது பிறழ்ந்து வந்த நிரனிறை. "பொன்னொடி ரும்பனையார் நின்னொடு பிறரே" என்பதுமது. |
இன்றியமையாத நுண்மையான இவ்உவம இலக்கணத்தின் பாங்கினை ஓராமல் அடையடுத்த உவமங்களை இரட்டைக்கிளவி எனக்கருதிப் பேராசிரியர் மயக்கவுரை வரைந்தமையொடு ‘’இரட்டைக்கிளவியும்" என உம்மையைக் கூட்டிப்பாடங் கொண்டார். |
"பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" என்பதன்கண், கடுத்தல் கட்டளைக் கல்லிற்கும் மார்பிற்கும் உரியதாதலன்றிப் பொன்னுக்கும் சுண்ணத்திற்கும் உரியதாகாமையறிக. இங்ஙனம் வருதல் அடையடுத்த உவமாமென்க. "வேங்கை வீயுறு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றும்" என்பதுமது. |
உவமபோலி என்னும் உள்ளுறை உவமம் : |
இதுகாறும் ஏனையுவமத்திற்குரிய இலக்கணங்களை ஒருவாறு தொகுத்துக்கூறி இனி உள்ளுறையாக வரும் உவமப்போலி பற்றிய இலக்கண மரபுகளைக் கூறத் தொடங்குகின்றார். |
உவமப்போலி என்பதற்கு உவமத்தை ஒத்தது என்பது பொருளாகும். ஒப்பாவது ஒருபுடை பொருந்தி நிற்றல் என்பது மேலே விளக்கப்பட்டது. போலி - போல்வது. |
உள்ளுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக் |
கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே |
(பொருள்-46) |
என்னும் சூத்திரத்திற் கூறிய உள்ளுறை வகை ஐந்தனுள், உவமம் என்பதே ஈண்டுக் கூறப்படும் உவமப் போலியாகும். ‘உள்ளுறை’ என்னும் குறியீடு அவ் ஐந்தற்கும் உரிய பொதுக்குறியீடாகும். உவமம் பற்றி வரும் உள்ளுறையை உள்ளுறையுவமம் என வழங்குதல் மரபு. என்னை? ஏனையுவமத்திற்கு இனமாக நிற்பது அதுவே யாகாலான். உள்ளுறை எனத் தனித்துக் கூறும் வழிப் பெரும்பான்மையும் அஃது இறைச்சியையே குறித்து நிற்கும் என்பது அச்சூத்திர உரையுள் விளக்கப்பட்டது. |
மற்று, உள்ளுறை உவமத்தை உவமப்போலி என்றது என்னையெனின்? அஃது ஏனையுவமம் போலப் பொருள் இது உவமம் இது என வேறு வேறாக விரிந்து நில்லாமல் பொருளைச் சிறப்பித்து அடையாக நிற்கும் சொற்களே கூறுவோரது குறிப்பான் உவமமாக அமைந்து அதுவே (உவமேயத்தையும்) பொருளையும் தோற்றுவித்து உவமத்திற்குரிய இலக்கணங்களைப் பெற்றுப் பொருள் புலப்பாடு செய்தலின் என்க. |
அஃது ஏனையுவமம்போல வெளிப்படையாக அமையாமல் குறித்துக் கொள்ளப்படுதலை நோக்கிப் போலி எனப்பட்ட தென்க. அஃதாவது |
கரும்புநடு பாத்தியிற் கலித்த தாமரை |
கரும்புபசி களையும் பெருபுன லூர! |
புதல்வன் ஈன்றவெம் முயங்கல்! |
அதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே |
(ஐங்-65) |
என்ற இச் செய்யுளின்கண் புதல்வனை ஈன்ற எம்மை முயங்கல்! என்றதனான் தலைவி இல்லறக் கிழமை பூண்டுள்ளவள் என்பதும், அவள் புலவியுற்றுள்ளாள் என்பதும் புலனாயினவே தவிரத் தலைவியின் நிலையும் அவள் புலத்தற்குக் காரணமும் வெளிப்படையாக இல்லை. ஆயினும் தலைவனை விளிக்குமிடத்துக் ‘கரும்பு நடு பாத்தியிற் கலித்த தாமரை கரும்பு பசிகளையும் பெரும்புனல் ஊர்’ என வருணித்து விளிக்கிறாள், அவ்வருணனை வெற்றெனத் தொடுத்தலாகாது. அவ்வருணனையை ஆழ்ந்துநோக்கின் தலைவியின் உள்ளக்கிடக்கையை அஃது உள்ளடக்கி நிற்றலை அறியலாம். |
"கரும்பு நடுபாத்தியிற் கலித்த தாமரை கரும்பு பசிகளையும் பெரும்புனல் ஊர்" என்பதனுள் உள்ள கருப்பாருள்களான் அது மருதத்திணை என்பதும் அத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று வரும் உரிப்பொருள் ஊடல் என்பதும் விளங்கும். |
இனி, நோக்குடைய கரும்பு நடுதற்குரிய பாத்தியுள் நோக்கில்லாத தாமரை விரிந்து, உண்ணவரும் கரும்பினது பசியைக் களையும் என்னும் வருணனை (கரும்பு போன்ற) காமக்கிழத்தியர்க்குரித்தாக அமைத்த இப்பேரில்லத்தில் (தாமரை போன்ற) யான் இல்லறக் கிழமை பூண்டு (தாமரை கலித்தலைப் போன்று) மகனைப் பெற்று (சுரும்பு போன்று) விருத்தாக வரும் விருந்தினரை ஓம்புகின்றனென், என்னும் கருத்தினை உள்ளுறுத்து நிற்றலை உணரலாம். |
இங்ஙனம் அவ்வுள்ளுறையைத் தோற்றுவிக்கும் "கரும்பு நடுபாத்தியிற்........ புனலூர" என்னும் கருப்பொருள் புனைவு நேரே உவமமாகாமல் உவமம் போல அமைந்து பொருளை விளக்கி நிற்றலின் உவமப்போலியாயிற்றென்க. |
வினையுவமம், பயனுவமம் என்புழி அவ்வுவமம் வினையும், பயனுமாகிய பொருளின் தன்மையை விளக்கி நிற்றலைப் போல இஃது உள்ளமைந்து கிடக்கும் பொருளையும் அதன் தன்மையையும் விளக்கி நிற்றலின் உவமப்போலி, உள்ளுறையுவமம் எனலாயிற்றென்பது தெளிவாம். |
அவ்வாற்றான் உவமப்போலி என்னுமிடத்து அஃது உவம இலக்கணம் பற்றிய குறியீடு என்பதும் உள்ளுறையுவமம் என்னுமிடத்து அஃது அதன் செயன்மை பற்றிய இலக்கணக் குறியீடு என்பதும் விளங்கும். |
உள்ளுறையுவமத்தான் எய்தும் பொருட்பயனை "இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் உவம மருங்கிற் றோன்று மென்ப" (உவம-30) என மேற்கூறுவாராதலின், ‘’கரும்பு நடுபாத்தியிற் ....................புனலூர்" என்பது துனியுறு கிளவியின்பாற் படுமென்க. |