சூ. 306 :இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்

 

உவம மருங்கிற் றோன்று மென்ப
(30)
 

க -து: 
 

தெய்வந்தவிர்ந்த    ஏனைய   கருப்பொருள்களை    நிலனாகக்
கொண்டு      வரும்      உவமப்போலியின்கண்    அமையும்
உள்ளுறைகளுள்   திணை   யுணர்த்தற்குரியவாகத்  தோன்றும்
பொருள்கள்   இவை என்கின்றது.
 

பொருள் :இனிதுறுதலாகிய  பொருளும்  துனியுறுதலாகிய  பொருளும்
மேற்கூறிய       உவமப்போலியான்      புலனாகும்        உள்ளுறை
யுவமத்தின்பாற்றோன்றும் எனக் கூறுவர் புலவர். கிளவி என்றது பொருளை.
 

இனிதுறு    கிளவியாவது :     இன்புறுதற்குரியவாய      வரைதலும்,
கூடுதலுறுதலுமாம். துனியுறு   கிளவியாவது :  துன்புறுதற்குரியவாய பிரிவும்
ஊடுதற்குக்  காரணமாகிய பரத்தையுமாம். அகத்திணை  ஒழுகலாறு என்பது
கூடலும்,  ஊடலுமாகிய  இருவகையே  பற்றி   நிகழுமாதலின்    இனிதுறு
கிளவியும் துனியுறு கிளவியும் என இரண்டாக வகுத்து ஓதினார் என்க.
 

அவ்வாறாயின் கூடலும் ஊடலும் தோன்று மென்னாது இங்ஙனம் பண்பு
பற்றிக்  கூறியது  என்னையெனின்? பாங்கன், செவிலி முதலானோர் கூறும்
உள்ளுறைப் பொருளான்  தோன்றுவன  இன்பமும்  துன்பமும் ஆதலன்றி
அவர்க்குக் கூடலும்  ஊடலும்   ஆகாமையான்   இங்ஙனம்  பொதுப்படக்
கூறித் தலைமக்களுக்கு உரியவாகுங்கால்  கூடலும் ஊடலும்  பற்றி நிகழும்
என உய்த்துணர வைத்தார் என்க.
 

"மருங்கின்"   என்றதனான்  உவமப்போலியேயன்றி ஏனைய உடனுறை
(இறைச்சி)  சுட்டு,  நகை,   சிறப்பு    என்பவற்றிற்கும்    இவ்விலக்கணம் ஒக்குமெனக் கொள்க.