சூ. 93 :

இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணுங் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே
 

க - து :

களவென்னும்       கைகோள்     அகத்திணை      ஏழனுள்
நடுவணைந்   திணைகளின்    கூறு    எனவும்    அதன்கண்
நிகழும்      கூட்டம்      எண்வகை      மன்றலுள்யாழோர்
மணம்  எனவும்   கூறுகின்றது.
 

பொருள் :உயர்திணையாய  மாந்தர் மேற்கொண்டொழுகும், இன்பம்,
பொருள்,   அறம்    என்று      சொல்லப்பட்ட     அம்மூவகையாகிய
முதற்பொருளிடத்தே     இன்பத்திற்குரிய    அன்பொடு     பொருந்திய
அகனைந்திணை    ஒழுகலாற்றின்கண் அதன்  பகுதியாகிய  களவென்னும்
கைகோளிடத்து       நிகழும்     காமக்கூட்டத்தினது     இயல்பினைத்
தேர்ந்துணர்ந்துணருங்கால் அது   தமிழ்   மாமறையோர் இன்ப நூலிடத்து
வகுத்துக்    கூறிய     எண்வகை மன்றற் புணர்ச்சியுள் பாடுதுறையமைந்த
நல்யாழினையுடைய துணைமையோரது இயல்பினதாகும்.
 

இன்பம்     பொருள்  அறன் என்னும் மும்முதற் பொருளுள் அறம்
உயர்திணையாகிய     மக்கட்கே     சிறந்துரிமை   பெற்ற நெறியாகலின்
செய்யுளியலுள் ‘அந்நிலை மருங்கின்’      அறமுத    லாகிய,  மும்முதற் பொருட்கும் உரிய என்ப” (செய் - 102)    என   அறத்தை முற்கூறுவார்,
ஈண்டு இன்பத்தை முற்கூறினார் மன்பதைக்கெல்லாம் உரித்தாதல்  பற்றியும் காம     உணர்வு     இயற்கையாதல்     பற்றியும்    அகத்திணைக்கண்
தலைமைப்பாடுறுதல் பற்றியும் என்க.
 

கைக்கிளையும்   பெருந்திணையும்    வேட்கையொடு பொருந்துதலன்றி
அன்பொடு      பொருந்துதல்     வேண்டப்படுவதின்று       என்பதும்
அகனைந்திணையாயின் இன்றியமையாதென்பதும்   விளங்க    "அன்பொடு
புணர்ந்த ஐந்திணை" என்றார். அகத்திணையியலுள்    "மக்கள்    நுதலிய
அகனைந் திணையும்" என விதந்து கூறப்பட்டமையின்   ஈண்டு    வாளா
“ஐந்திணை"    என்றார்.      ‘காமக் கூட்டம்’     என்றது     ஈண்டுக்
களவொழுக்கத்தினை உணர்த்தி நின்றது.
 

‘உயர்ந்த    பால    தாணையான்’ (கள-2) ஒத்த கிழவனும் கிழத்தியும்
எதிர்ப்பட்டுத் தாமே தம் நெஞ்சங்கலந்த   வழி     அவ்வுள்ளப்புணர்ச்சி
அளவானே அமைந்து வரைந்து     கொண்டு    கற்பின் ஆக்கத்தின்கண்
செல்லாமல் ஒரோவழி வேட்கை மிகுதியான்    ஆற்றாமை      மேலிட்டு
மெய்யுற்றுப் புணர்தலும், எதிர்ப்பட்ட வழி    உள்ளப் புணர்ச்சியளவானே
பிரிந்து  மற்றை நாள்  இடந்தலைப்பட்டுப் புணர்தலும், பின்னர்ப் பாங்கன்
வாயிலாக    இடந்தலைப்பட்டுக்   கூடுதலும்,     தோழி மதியுடம்பட்டுக்
கூட்டுவிக்கக்  கூடுதலும், களவு நீட்டித்தவிடத்துக் குறிவழிச்சேறலும், அல்ல
குறிப்படுதலும், தமர் வரைவுஉடன்படாதவழிக் கொண்டுதலைக்    கழிதலும்
ஆகிய     ஒழுகலாறுகள்      அறக்கழிவுடையன வல்ல அவை தெய்வப்
புணர்ச்சியாய், அறத்தொடுபட்ட சால்பினவே எனத் தெளிதல்    வேண்டிக்
"காணுங்காலை" என்றார்.
 

"மறையோர்"     என்றது    அறம்    பொருள் இன்பம் வீடு என்னும்
நாற்பொருளைப்  பற்றிய உண்மைகளை நுண்மையொடு வகுத்தோதிய தமிழ்
நான்மறை    நூலோரை. இதனை "மறையென மொழிதல் மறையோ ராறே"
என்னும்   செய்யுளியற்    சூத்திரத்தான் அறிக. தேஎம் என்றது அம்மறை
மொழிகளைக்      கூறற்கிடமாக  அமைந்த நூலினை, தேஎம் ஆகுபெயர்.
‘மன்றல்’    என்றது   மணத்தினை. மணமாவது, கிழவனும் கிழத்தியுமாகிய
இருவர் கூடி ஒழுகும் இன்ப ஒழுக்கமாம். மன்றல் எனினும் மணம் எனினும்
கூட்டம் எனினும் ஒக்கும். துறையமையாழ்    எனவும்    நல்யாழ் எனவும்
கூட்டிப் பொருள் கொள்க. துறையாவது எழுவகைப் பண்களையும்    நிறந்
தோன்ற வகுத்தமைக்கும் பாலைத்திறங்களாம்.  துணைமையோரது    யாழ்
இன்பமே பற்றி இசைத்தலின் நல்யாழ் எனப்பட்டது.
 

துணைமையோராவார்   எஞ்ஞான்றும்  பிரிவின்றி     இரட்டையராய்
இணைந்துறையும்     ஒருசார் தெய்வப்பகுதியினர். அவர்எஞ்ஞான்றும்    யாழொடு       திகழ்தலான்     அவரை      யாழோர்       என்றும்
அவர்தம்    புணர்ப்பினை     யாழோர்    கூட்டம் என்றும் வழங்குதல்
தொன்னூலார்    மரபு. வடநூலார் அவரைக் கந்தருவர் என்றும் அவர்தம்
கூட்டத்தைக்      காந்தருவம்     என்றும்  மொழிபெயர்த்து வழங்குவர்,
"யாழோரியல்பு" என்றது உரியோர் கொடுப்பக் கொள்ளாமல் ஊழ்வயத்தான்
இணைந்து எஞ்ஞான்றும் பிரிவின்றி என்றுமோர்   இயல்பினராய்  ஒழுகும்
தன்மையையாகும். அவரை உவமங் கூறினார்,
 

உவமப் பொருளின் உற்ற துணரும்

தெளிமருங் குளவே திறத்திய லான

(உவம-20)
 

என்னும்    இலக்கணத்தான்    ஈண்டு  ஓதப்பெறும் கிழவனும், கிழத்தியும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாராய் இறப்பும்   பிணியும்   மூப்புமின்றி
எக்காலத்தும்      ஒருதன்மையராய்த்       திகழ்வோராவார்   என்னும்
நாடகவழக்கினை உணர்த்துதற்கென்க. மறையோர் தேஎத்து        மன்றல்
எட்டாவன :
 

1.

கரணமொடுபுணரக்     கொடைக்குரி       மரபினோர்   கொடுப்பக்
கொளற்குரி       மரபின்   கிழவன்  கிழத்தியை வரைந்து கொள்ளும்
திருமணமன்றல் (கற்-1)
 

2.

கொடுப்போரின்றிக்    கரணமொடு      கிழவன்     கிழத்தியைத்தன்
மனைக்கண் வரைந்து கொள்ளும் நறுமணமன்றல் (கற் - 2)
 

3.

கொண்டுதலைக்கழித்தவிடத்து     இடைச்சுரத்துக்  கற்பொடு புணர்ந்த
கௌவையான் நிகழும் கடிமணமன்றல் (களவு - 50)
 

4.

குலவழக்கும் குடிமரபும் பற்றிப் பிறப்புரிமையான் வரைந்து  கொள்ளும்
முறைமணமன்றல் (கற் - 32)
 

5.

பாலது   ஆணையான்  நிகழும் தெய்வமண மன்றல் (களவு - 1) ஏனை
மணங்கட்கும்  பாலதாணை காரணமாயினும் ஏனையவற்றிற்குத் துணைக்
காரணமும்     நிமித்த      காரணமும்   உளவாகலான் அவை பற்றி
அவற்றிற்குப்   பெயர்      கொடுத்துத்       தெய்வமணம் ஊழாகிய
முதற்காரணத்தளவே பற்றி   நிகழ்தலின்      சிறப்புப்பெயர்த்தாயிற்று.
அதனான் அஃது யாழோர்  கூட்டம் எனச் சிறப்பிக்கப்பட்டது.
 

6.

ஏறுதழுவல்   முதலாய வீறுபற்றிக் கிழத்தியைப்     பரிசிலாகப் பெற்று
வரையும் அருமணமன்றல் [முல்லைக்கலி - 4]
 

7.

புறத்திணை  ஒழுகலாற்றின்கண் பகைவரைவென்று அவர் தம் மகளிரை
உரிமைபூண்டு வரையும் பெருமணமன்றல்

(புறத் - 19)   ஈண்டுப்   பெருமணம் என்றதைப் பெருந்திணை என்பது
போலக்கொள்க.
 

8.

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்    கரணமின்றி   நிகழும்
சிறுமணமன்றல் (கலி - 112)
 

மேற்கூறப்பெற்ற   எண்வகை மணங்களும் தமிழ் நான்மறையுள் இன்பம்
பற்றிய மறைநூல்கள்     மறைந்தமையான்    எடுத்துக்காட்டி     நிறுவும்
வாய்ப்பில்லாத     நிலையில்      இந்நூலானும்   கலித்தொகை முதலிய
சங்கச்செய்யுட்களானும்      உய்த்துணர்ந்து         கூறப்பெற்றனவாகும்.
மாணாக்கர்மேலும் ஆய்ந்து கொள்வாராக.
 

மேற்கூறியவற்றுள்     அருமணமும்    சிறுமணமும்   கைக்கிளையின்
பாற்படுவதற்கும்    பெருமணம்  பெருந்திணையின் பாற்படுதற்கும் ஏனைய
ஐந்திணையின்   பாற்படுதற்கும்  ஏற்பனவாம். அவற்றுள் பாலதாணையான்
நிகழும் தெய்வமணமே ஈண்டுக் கூறிய காமக்கூட்டமெனக் கொள்க.
 

இனித் தமிழ்ப் பண்பாட்டினையும் தொல்லோர் நூல் நெறியையும் ஓராது
குறை நூல் செய்த இறையனார் அகப்பொருளாசிரியரும்    அதன்  வித்தக
உரையாசிரியரும், இளம்பூரணருள்ளிட்ட    தொல்காப்பிய   உரையாளரும்
நம்பியகப் பொருள் விளக்கம் முதலாய இடைக்கால    நூலாசிரியன்மாரும்
மறை - மறையோர் என்பவற்றிற்கு முறையே     ஆரியர்க்குரிய     நால்
வேதங்களையும், அவற்றைப் பயின்ற    அவ்வேதியரையும்   பொருளாக்கி
மன்றல் எட்டு என்றதற்குப் பிரமம்   பிரசாபத்தியம்     ஆரிடம் தெய்வம்
காந்தருவம் ஆசுரம் இராக்கதம் பைசாசம் என விளக்கங் கூறிச் சென்றனர்.
 

நச்சினார்க்கினியர்     நான்மறை   முற்றிய அதங்கோட்டாசான் என்ற
பாயிரத்தொடருக்குப் பொருள் கூறுமிடத்து நான்மறையாவன இருக்கு, யசுர்,
சாமம்,    அதர்வணம்    என்றல்    ஒவ்வாது    இவ்வகுப்பு வியாசரால்
செய்யப்பட்டது. வியாசருக்குக் காலத்தான் முற்பட்டவர்   திரணதூமாக்கினி
என்னும் தொல்காப்பியர் எனச்       செவிவழிச்   செய்தியாக   அறிந்து
கூறியுள்ளமையான் "மறையோர் தேஎம்"   என்பதற்கு    ‘மறை ஓரிடத்துக்
கூறிய’ எனப் பொருள் கூறினார்.   காரணம்  சுருதி எனப்படும் வேதத்துள்
பிரமம் முதலாய மணங்கள்    குறிப்பிடப்பெறாமல்  மிருதி என்னும் சார்பு
நூல்களுள்   கூறப்பெற்றுள்ளமையே   யாகும். எனினும் பாயிரத்துள் தாம்
கூறியதை   மறந்து      மன்றல்  எட்டென்பதற்குப் பிரமம் பிரசாபத்தியம்
முதலியவற்றையே பொருளாகக் கூறிச் சென்றார்.
 

உரையாளர்   கூறும்   அவ் எண்வகையுள் இராக்கதம் என்பது அஞ்சி
விலகும் வஞ்சியை வலிதிற் பற்றிப் புணர்தல் என்பார். அது     தீயகாமக்
கொடுஞ்செயலாவதன்றி மணமெனற்கு    ஒவ்வாதென்பது    வெளிப்படை.
பேய்நிலை என்பது அறிவு திரிந்து பித்தேறி யுழல்வாரையும் உணர்வின்றித்
துஞ்சிக்     கிடந்தாரையும்     மயங்கிக்    கிடந்தாரையும் உயிர் நீங்கிக்
கிடந்தாரையும் புணர்தல்   என்பார்.   அஃதோர் கயமைச் செயலாவதன்றி
மணமென நினைதற்கும்    ஏலாமை    தெரியலாம். இவற்றை மணமெனக்
கூறுதல் நல்லோர்க்கு நாணுத்   தருவதாகும். எனவே உரையாளர் ஆயாது
கூறிய பிரமம் முதலியவற்றை   உரையாகக்    கொள்ளுதல்    ஒவ்வாமை
புலனாகும்.