சூ. 158 :

உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்

புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய 

(15)
 

க - து :

தலைவற்கு ஊடல் நிகழும் இடமாமாறு கூறுகின்றது.
 

பொருள் : தன்பால்  பரத்தைமை  கற்பித்துப்   புலத்தலும்  ஊடலும்
உற்ற   தலைவியைப்  பணிமொழி   கூறித்   தேற்றும்  வழித்  தேறாமல்
அவ்வூடலும்    புலத்தலும்   எல்லை    மிகுமிடத்தும்,  தான்   செய்யும்
குறிப்பினைச்  செவ்விதிற்  கொள்ளாமல்   பிழைபடக்  கொள்ளுமிடத்தும்
புலத்தலும் ஊடலும் தலைவற்கும் உரியவாகும்.
 

கிழவோற்கும் என்னும் உம்மை விகாரத்தாற் றொக்கது.
 

எ - டு :

எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்று

இனைமதி வாழியோ நெஞ்சே மனைமரத்து

எல்லுறு மௌவல் நாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே

(குறு-19)
 

இஃது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் புலந்து கூறியது.
 

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்

யாருள்ளி நோக்கினீர் என்று

(குறள்-1320)
 

இது   தன்  குறிப்பினைப்   பிழைபட  உணர்ந்தமை  நோக்கித் தலைவன்
புலந்து கூறியது.
 

செய்குறி   பிழைப்பினும்   என்பதற்குக்  களவின்கண்  தலைவி  தான்
செய்த  குறியைப்  பிழைப்பினும்  என்பார் நச்சினார்க்கினியர். களவின்கண்
தலைவி   குறிபிழைத்தல்,   இற்செறிப்புறுதல்,  தாய்  துஞ்சாமை  முதலிய
முட்டுப்பாடுறுதல் ஆகியவை  காரணமாகக் குறிபிழைத்தலன்றித்  தலைவி
தானே பிழையாளாதலானும், ஆண்டு அல்ல குறிப்பட்ட தலைவன் வருந்திக்
கூறல் ஊடலாகாமையானும் அவர் கருத்து நூல் நெறிக் கேலாமையறிக.