சூ. 202 :

உயிரும் நாணும் மடனும் என்றிவை

செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய

(6)
 

க - து :மேற்கூறிய  நால்வரும்  அங்ஙனம்  பால்கெழு  கிளவியாகக்
கூற்று  நிகழ்த்தற்கு  ஏதுக்கூறுகின்றது.  அஃதாவது  ‘நோயும்  இன்பமும்’
என்னும் சூத்திரத்து  நெஞ்சொடு  புணர்த்தும் அஃறிணைப்  பொருளொடு
அடக்கியும்  உரைக்குமிடத்து  அறிவும்  புலனும்  வேறுபட்டவழிச் சூழ்ந்து
நிற்கும் குணங்கள் இவையாகலின் அங்ஙனம் பால்கெழு கிளவி கிளத்தற்குக்
காரணம் இக்குணங்களே என்கின்றது.
 

பொருள் :நோயும் இன்பமுமாகிய  நிலைமைகட்குரிய காமமிகுதிக்கண்
புலனுணர்வும், துணிதற்  காற்றாத  நாணமும், அறிவு  செயற்படாத மடமும்
குற்றந்தீர்ந்த  சிறப்பினையுடைய  தலைவன்,  தலைவி,   செவிலி,  நற்றாய்
என்னும் நால்வர்க்கும் உரியவாகும்.
 

‘உயிர்’  என்றது  ஐம்புலக்கிளர்ச்சியான்  எய்தும் உணர்வினை.  அஃது
உயிரைப்பற்றி நிற்றலின் ‘உயிர்’ என்றார். அது பிறந்தவழிக் கூறல் என்னும்
ஆகுபெயர்.  இதற்கு  இதுவே  பொருளாதலை   மேல்வரும்,   “உடம்பும்
உயிரும் வாடியக் காலும்” (சூ-8) என்பதனான் அறிக.
 

ஈண்டு ‘நாண்’ என்றது  பெண்மைக்குரிய குணமாகக் களவியலுள் கூறிய
நாண் அன்று. இஃது வினை பற்றி

வருவதோர் பண்பு. இதனைக்,
 

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற

(குறள்-1011)
 

என்னும்   பொய்யா   மொழியான்  அறிக. அவ்வாறே  மடம்  என்பதும்
அறியாமையாகிய  பண்பினைச்   சுட்டி  நின்றது.  கொளுத்தக்  கொண்டு
கொண்டது விடாமையாகிய  பெண்மைக் குணமாகிய ‘மடம்’ வேறு. இதுவே
றென அறிக. இதனை,
 

உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு

(குறள்-89)
 

எனவும்,
 

நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

(குறள்-1297)
 

எனவும்
 

வருவனவற்றான்  அறிக.   இச்சூத்திரத்திற்கு  உரையாசியன்மார்   கூறும்
உரையும்  விளக்கமும்  இயைபின்றியும்  கூறியது   கூறலாயும்  உள்ளமை
அறிக.