சூ. 218 :

உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே

(22)
 

க - து :

களவியல்  கற்பியல்களுள்   ஓதப்பெற்ற    இலக்கணங்களொடு
உயர்ந்தோரான்   வழங்கப்பெறும்  உலகியல்  வழக்கும் களவும்
கற்பும்   பற்றி வரும் செய்யுட்குரியவாகும் என்கின்றது. இம்மரபு
பொருளியல்   பற்றியதாகலின்    இதனைச்     செய்யுளியலுள்
வையாமல் ஈண்டு வைத்தார் என்க.
 

பொருள் :அகப்பொருள் மாந்தர்தம் கூற்றிற்குரியவாக உயர்ந்தோரான்
கிளக்கப்படும்  கிளவிகள்  உலகியல்  வழக்காகப்  பொருந்தி  வருதலான்
அவ்வழக்கினது  நெறியிலே  நடத்தல் செய்யுட்குக் கடப்பாடாகும்.
 

என்றது :  அவவக்காலத்தின்கண்  சான்றோரான்   வழங்கப்   பெறும்
சொற்கள் தொன்று  தொட்டன  அல்லவெனக்  கருதாமல்  மேற்கொள்ளல்
வேண்டுமெனச்   சொல்லதிகாரத்துள்  ‘’கடிசொல்   லில்லைக்   காலத்துப்
படினே’’   (எச்-56)   என  விதித்தாங்கு  இப்பொருளதிகாரத்துள்   களவு
கற்பிற்கு  அவ்வவ்வியல்களுள்   ஓதிய   விதிகளேயன்றி  அவ்வக்காலத்து
உயர்ந்தோர்     வழக்காகி      வந்து   பொருந்துவனவும்   கடியப்படா
என்றவாறு.
 

அவையாவன முல்லைக் கலியுள் ஏறுதழுவுதல்  பற்றிவரும் கிளவிகளும்
கூற்றுகளும்   அகப்பொருட்கோவை   நூலார்   வகுத்துக்கூறும்  ஒருசார்
கூற்றுக்களும் பிறவுமாம்.