சூ. 239 :

உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி

ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே

(43)
 

க - து :

தலைவன் தலைவியர் கூற்றுப் பற்றியதோரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :புலனெறி வழக்கின்கண் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கூறும்
கிளவி தலைவற்கும் தலைவிக்கும்  ஒப்ப உறழ்ந்து  வரும். ஐயுற்றுக் கூறும்
கிளவி தலைவிக்கு ஆகாது தலைவற்கே உரித்தாக வரும்.
 

உறழ்தல்  =  நியதியின்றி  மாறி  வருதல். தலைவி  ஐயுறின் அதனைக்
களைதற்குரிய  கருவியாகிய உரனுடைமை  தலைவிக்கு ஓதப்பெறாமையான்,
அச்சமே  மிகும். அவ்  அச்சத்தாற்  காமக்குறிப்பு அழியுமாதலின் தலைவி
ஐயுறுதல் புலனெறி வழக்கன்று என்க.
 

ஐயக்கிளவியை  வரையறை செய்வாராய் உயர்மொழிக் கிளவியை உடன்
ஓதினார்    என்க.   பின்னர்த்   தோழிக்கும்   உயர்மொழிக்  கிளவியை
எய்துவித்தற் பொருட்டென அறிக.
 

நச்சினார்க்கினியர்  உறழும்  கிளவி என்பதற்கு  எதிர்மறுத்துக்  கூறும்
கிளவி என உரை கூறுவார். அஃது  அவரவர்க்கு ஓதப்பட்ட  கிளவிகளுள்
அடங்குமாதலின்  பயனில்  கூற்றாய்  முடியுமென்க. எ - டு : களவியலுள்
கண்டு கொள்க.