சூ. 243 :

உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே

(47)
 

க - து :

அகத்திணை மாந்தர் தாம்  கூறும்  கூற்றுக்களுள்  மறைத்துப்
பேசும்   உள்ளுறை   மொழிகளின்   வகையும்   தொகையும்
கூறுகின்றது.
 

பொருள் : இருவகைக்   கைகோளும்  பற்றி   ஒழுகும்  அகத்திணை
மாந்தர்தாம்    கருதும்    கருத்தினை    வெளிப்படையாகக்    கூறாமல்
ஒன்றனைச் சார்த்தி  மறைத்து  உள்ளுறையாகக் கூறுமிடத்து அவர் கருதிய
பொருளைத்  திரிபின்றித்  தோற்றுவிக்கும்  மரபினையுடைய  உள்ளுறைக்
கிளவிகள் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐந்தாகும். 

உவமப்போலி பற்றிப் பின்னர் உவமவியலுள் 

"முன்ன மரபிற் கூறுங் காலைத்
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே"
 

(உவ-23)
 
எனக் கூறுவார்.

அவ்வாறன்றி  இவை  திரிபின்றிப்  பொருளைப்  புலப்படுத்துமென்பார்
"கெடலரு  மரபின்  உள்ளுறை"  என்றார்.  என   என்னும்  இடைச்சொல்
எண்ணுப் பொருளில் வந்தது. ஏகாரம் தேற்றம்.
 

1) உடனுறையாவது :  இறைச்சியிற்   பிறக்கும்   பொருளுமாருளவே
(பொரு-34) என ஓதிய  இறைச்சியிற்  பிறக்கும்  உள்ளுறைப்  பொருளாம்.
இவ்  உள்ளுறை  கருப்பொருளின்  பண்பும்  செயலுமாகிய இறைச்சியொடு
ஒருங்குறைதலின்  உடனுறை எனப்பட்டது. உடனுறை எனினும் இறைச்சியிற்
பொருள்   எனினும்   ஒக்கும்.   இதன்   ஒண்பொருளை   நெகிழவிட்ட
உரையாசிரியன்மார்  இறைச்சியிற்  பொருளை  இறைச்சிப்பொருள் எனவும்
இறைச்சி  எனவும்  வழங்கினமையின்  இறைச்சி என்பதே இதன் குறியீடாக
நிலைத்து விட்டது.
 

எ-டு :

மேற்காட்டப்பெற்றன.

 

2) உவமமாவது :உவமப்போலி   எனப்    பின்னர்   உவமவியலுள்
விரித்தோதப்பெறும் உள்ளுறை  உவமமாகும்.  உவமமாகத்  தாம்  கருதிய
கருப்பொருள்களின் வண்ணனை உவமம்  போல  நின்று  (உவமேயமாகிய)
பொருளைத்   திரிபின்றி   விளக்குதலின்   அவ்   உள்ளுறை,   உவமம்
எனப்பட்டது.   உவம  உள்ளுறை  என்பதே  உள்ளுறை  உவமம்   என
இலக்கணக்  குறியீடாக   அமைந்து   உரையாசிரியன்மார்  வழக்காற்றான்
உள்ளுறை எனக்கடைக் குறையாக வழங்கப்படுகின்றது. பிற விளக்கங்களும்
எடுத்துக்காட்டுக்களும் உவமவியலுரையுட் கண்டு கொள்க.

3) சுட்டாவது :இறைச்சியிற்       பொருளாகிய       உடனுறையும்
உள்ளுறையுவமமும் போலாமல் வெளிப்படையாக ஒருவர் கூறும் கூற்றினுள்
கூறுவோர்   கருதும்    குறிப்புப்பொருள்    உள்ளுறையாக    அமைந்து
நிகழ்வதாகும். [சுட்டுதல் = கருதுதல்]
 

எ-டு :

பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
கோடுலக்கை யாகநற் சேம்பின் இலைசுளகா
ஆடுகழை நெல்லை அறையுரலுட் பெய்துஇருவாம்
பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று"

(குறிஞ்சிக்கலி-5)
 

இதன்கண்  வளியசைத்தலான்  தானே   உதிர்ந்தநெல்  (ஆடுகழை  நெல்)
என்றது   இயற்கைப்   புணர்ச்சியானது   ஒன்றியுயர்ந்த  பாலதாணையான்
நிகழ்ந்தது   என்னும்   கருத்தையும்   ‘அறையுரல்’  என்றது  தலைவனே
நம்பால் வந்தாலன்றி நாம் அவன் உறைவிடத்துச் செல்லுதல் குடிமையாகாது
என்னும் கருத்தையும்  "வயக்களிற்றுக்  கோடு  உலக்கையாகக்  குற்றுவாம்"
என்றது தோலாத சொற்களான்  வரைவு  கடாதலைச்  செய்தல்  வேண்டும்
என்னும்  கருத்தையும்  ‘சேம்பின்  இலைசுளகா’  என்றது  நீ  செவிலிக்கு
அறத்தொடு நிற்றல் வேண்டும் என்னும்  கருத்தையும்  தலைவி  தோழிக்கு
உணர்த்தக் கருதினாளாக அமைந்திருத்தலை ஓர்ந்துணரலாம்.
 

இத்தலைவி  கூற்றுச்  சுட்டாக  அமைந்து  மேற்கூறிய உள்ளுறையைப்
புலப்படுத்தலை.
 

"இடியுமிழ்பு இரங்கிய விரவுப்பெயல் நடுநாள்
கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்து
...... ........ ........ ........ ........ ....... ........ ......... ..

பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப்
பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று" 

என்பதன்கண்  அமைந்துள்ள  உள்ளுறை  உவமத்தின்  பொருட் சார்பான்
தெரிந்து கொள்க. 

இங்ஙனம்  தலைவி  கூறியவழி  அதனைக்  கேட்டதோழி  தலைவனை
இயற்பழித்து   அவன்   கொடுமை   கூற    நினைவாளாதலின்   தோழி
இயற்பழித்துக் கூறாமுன் தானே 

"இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை" 
என்றாள் என்க.

இத்தாழிசைப்  பகுதியும் சுட்டு என்னும் உள்ளுறைப்பொருள்  அமைந்த
கூற்றேயாகும். இதன்கண் அமைந்துள்ள கருத்தாவது :

பிரிவாற்றாமையான் தலைவன்  சூள்பொய்த்தான்  எனக்  கூறியதல்லது
அவன் அறநெறிசான்ற பொருமையனே எனத் தோழிக்கு  உணர்த்துதலாம்.
இதுவே  தலைவி  கருத்து  என்பனைத்  தோழி  உணர்ந்து  கொண்டாள்
என்பதைப், 

"பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ
அஞ்சலோம்பு என்றாரைப் பொய்த்தற் குரியனோ
குன்றகல் நன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின்
திங்களுள் தீத்தோன் றியற்று"
என்றும்
"வாரா தமைவானோ - நீருள் குவளை வெந்தற்று"என்றும்
"துறக்குவன் அல்லன் - இருள் தோன்றியற்று"என்றும்   

தோழி தலைவனை  ஏத்திக்  கூறியதனான்  அறிந்து  கொள்க.  பின்னர்த்
தோழியின்  முயற்சியான்   வரைவு   நேர்ந்தமையையும்   அச்செய்யுளின்
சுரிதகத்தான் தெரிந்து கொள்க. 

இவ் உள்ளுறை, கருப்பொருள்களின் செயலே  பற்றிப்  பிறவாமையான்
உடனுறையாகாமையும்    பொருளெதிர்    புணர்த்து    உவமங்கோடற்கு
ஏலாமையான் உள்ளுறைஉவமம் ஆகாமையும் கண்டு கொள்க.
 

‘சுட்டு’  என்னும்   இவ்   உள்ளுறையின்  நுண்மையை  ஓராமையான்
இங்ஙனம் வருவனவற்றையெல்லாம்  இறைச்சி  எனக்  கொண்டு  விளக்கம்
செய்து  போந்தனர்.   பின்னுரையாளர்   பலரும்   அப்   புணைவழியே
செல்வாராயினர்.   

4) நகையாவது :எள்ளல்  பற்றி  நகையாட்டாகப்  பேசும்  கூற்றினுள்
புலப்பாடாகும்   உள்ளுறைப்   பொருளாகும்.   ‘’பொருளொடு புணர்ந்த
நகைமொழி’’ (செய்-166)  எனச்  செய்யுளியலுள்  ஓதப்பெறும்  நகைமொழி
பெரும்பான்மையும் புறத்திணை  ஒழுகலாறு  பற்றியும்  அடிவரையறையற்ற
செய்யுள் வகையுள்ளும் உரைநடை வழக்காக நிகழும். உள்ளுறையாக வரும்
இந் நகைமொழி பாட்டு என்னும் செய்யுள் நடையுள் அமைந்து அகத்திணை
ஒழுகலாறு பற்றி வரும் என்க. எண்வகை மெய்ப்பாடுகளுள்  நகை என்னும்
மெய்ப்பாட்டிற்குரிய பொருள் நான்கனுள் பேச்சுப்பற்றி  நிகழ்வது ‘எள்ளல்’
எனப்படும்.  ஒரு   கூறேயாதலின்  அதன்  வாயிலாகத்  தோன்றும்  இவ்
வுள்ளுறை ‘நகை’ எனப்பட்டதென்க.
 

எ - டு :

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே

(குறு-8)
 

எனவரும். 

இதன்கண் தலைவி தானே தலைமை செய்து  கொண்டு  ஒழுகுகின்றாள்
எனத் தலைவியை இகழும்  முகத்தான்  தலைவன்  ஆடிப்பாவை  போலப்
புதல்வன்   தாய்க்கு  மேவன  செய்வானாயினன்   எனக்   காதற்பரத்தை
நகையாடிக்  கூறுகின்றாள்.  அக்  கூற்றினுள்  எம்மில்  பெருமொழி  கூறி
என்றதனான் புதல்வன் தாய்க்கு மேவன செய்து  நிற்றலும்  பொய்ம்மையே
என்பதும் ஏனைய இற்பரத்தையரும் அவன்மாட்டுக் காமுறுதலாற் பயனின்று
என்பதும்   உள்ளுறையாகத்   தோன்றி   நிற்பதைக்    "கழனி  மாஅத்து
விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்"  என்னும்  உள்ளுறை
உவமத்தின் சார்பானே அறிக. என்னை? 

பழனவாளை  மாவினது  பழத்தைக்  கதுவிற்றேனும்  அதனாற்  பயன்
கோடல் அதற்கு முழுமையாக வாயாமையான் என்க.

"திருந்திழாய்" என்னும் குறிஞ்சிக்கலிப் (29)  பகுதியுள்  நகை  என்னும்
உள்ளுறை தோன்றி நிற்குமாறு அறிக. என்னை? நகையாட்டாகப் படைத்துக்
கொண்டு கூறும் தோழி. 

"இன்சாயல்  மார்பன்  குறிநின்றேன்   யானாக"  என்றதனான்  இரவுக்
குறிக்கண்  சேறல்   அரிது   என்பதும்    "கண்டே  கடிதரற்றிப்   பூசல்
தொடங்கினன்" என்றதனான் ஊரலர் தோன்றும்  என்பதும் உள்ளுறையாக
நிற்றலைக் கண்டு கொள்க. 

இதற்கு  விளையாட்டாயமொடு    (நற்-172)    என்னும்   செய்யுளை
எடுத்துக்காட்டி "அம்ம  நாணுதும்  நும்மொடு நகையே"  என  நகையாடிப்
பகற்குறி கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு  காண்க
என்பார் நச்சினார்க்கினியர். ஆண்டு நகை  என்னும் சொல்  புணர்ச்சியைக்
குறிப்பான் உணர்த்தி நின்றதல்லது. அது நகைமொழி யாகாமையறிக. மற்றும்
நகையாடற் பொருட்டாய  தொடர்மொழிக்கண்  இவ்வுள்ளுறை  தோன்றும்
என்பது இதன் இலக்கணமாதலன்றி நகைத்தலாகிய  வினையே  உள்ளுறைப்
பொருள்  தருமென்பது  பொருளன்று.  நகையே   உள்ளுறைப்  பொருள்
தருமெனின்  ஏனைய  அழுகை, வெகுளி முதலாயினவும் அக்குறிப்பினைத்
தருதலான் அவற்றையெல்லாம் கூறாமல் நகை ஒன்றனை மட்டுமே  கூறுதல்
குன்றக்கூறலாய்   முடியுமென்க.  இதற்கு  இளம்பூரணர்  கூறும்  விளக்கம்
சிறிதும் ஒவ்வாமை வெளிப்படை. 

5) சிறப்பாவது :உடனுறை  முதலாய  நான்கினும்  வேறாகக்,  கூற்று
நிகழ்த்தும்  மாந்தர்   முன்னிலையாக  இருந்து  கேட்போரை  யாதானும்
ஒருவகையிற் சிறப்பித்துக் கூறுதற்கண் அமைந்து வருவதாகும். 

அங்ஙனம்   முன்னிற்பவரைச்    சிறப்பித்துக்    கூறும்    அச்சிறப்பு
மொழிகள் இயற்கையாகவன்றிச் செயற்கையாக  வலிந்து  கூறப்படுவனவாகப்
புலப்படுமிடத்து  இவ்வுள்ளுறை  தோன்றும்.  இது  மேற்கூறிய  உடனுறை
முதலாய நான்கனுள்   அடங்காமல்   அவற்றின்   வேறுபட்டுச்   சிறப்புக்
கூற்றின்கண் வருதலின் சிறப்பென்னும் குறியீடு பெற்றதென்க.
 

எ - டு : 

        

 

சன்மதி, சிறக்கநின் உள்ளம், நின்மலை
ஆரம் நீவிய அம்பகட்டு மார்பினை
சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ
முருகுமுரண் கொள்ளும் உருவக் கண்ணியை
எரிதின் கொல்லை இறைஞ்சிய ஏனல்
எவ்வங் கூறிய வைகலும் வருவோய்
கனிமுதிர் அடுக்கத்துஎம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை, நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடிஇருங் குன்றத்து
இட்டாறு இரங்கும் விட்டொளிர் அருவி
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட் டற்றே துகளறக்
கொந்தோடு உதிர்ந்த கதுப்பின்
அந்தீங் கிளவித் தந்தை காப்பே

(அக-288)
 

எனவரும். இது பகற்குறிக்கண் தோழி செறிப்பறிவுறீஇத்  தலைவற்கு வரைவு
கூறியது. இதன்கண் தன் எவ்வங் கூறுதற்காக வரும் தலைவன் என்றதனான்
தோழி  அவன்  மனநிலையை  நன்குணர்ந்திருந்தும்,  அவனது இளி வந்த
நிலையை எண்ணாமல்   

"நின்மலை ஆரம்  நீவிய  அம்பகட்டு  மார்பினை,  சாரல்  வேங்கைப்
படுசினைப் புதுப்பூ முருகு முரண் கொள்ளும்  உருவக்  கண்ணியை" எனச்
சிறப்பித்தலும், புனத்தை எரியூட்டிப் பண்படுத்தி ஏனல்  விளைவு  செய்யும்
இயல்பானதொரு  செயலை, "எரிதின்  கொல்லை இறைஞ்சிய ஏனல்" எனச்
சிறப்பித்தலும்   வலிந்து   கூறப்பட்டனவாதல்   தெரியலாம்.   அதனான்,
அவற்றான் தலைவற்குச் சில உணர்த்துதல் தோழி கருத்தாதலை அறியலாம்.
அக்கருத்துக்களாவன :- 

"நின்மலை ஆரம் நீவிய அம்பகட்கு மார்பினை"  என்றது : தலைவியை
வரைந்தெய்தி அவள்  நலத்தினைத் துய்த்தல்  நின்  தலைமைக்குத் தக்கது
என்பதும், "சாரல் வேங்கைப் படுசினைப் புதுப்பூ முருகு முரண் கொள்ளும்
உருவக்  கண்ணியை"  என்றது :  நொதுமலர்  வரைவு  வேண்டி  வருதல்
கூடுமாதலின் நீ அவரின் முற்பட்டு நின்தமரை  வரைவுவேண்டி  உய்த்தல்
தகவதாகும் என்பதும். "எரிதின் கொல்லை  இறைஞ்சிய  ஏனல்"  என்றது :
தந்தையின்  காவல்   காரணமாக  ஊர்  அலர்  எழாது  தேய்ந்தமையான்
இற்செறிப்புற்றுள்ள   தலைவி   நின்  வரைவினை  எதிர்நோக்கி  ஒடுங்கி
இருக்கின்றாள் என்பதும் தோழி  உணர்த்தக்  கருதிய  உள்ளுறைகளாகும்.
இவ்வுள்ளுறை   செய்யுட்களுள்    அருகியே    வரும்.   இச்செய்யுளுள்
"கொடியோர் குறுகும் ... .... அடுக்கத்து" என்பது உள்ளுறை உவமமாகும்.

நச்சினார்க்கினியர்  உள்ளுறை  உவமங்கோடற்கு  உரியவாக   நிகழும்
ஏனை  உவமங்களைக்  காட்டிச்  சிறப்பு  என்னும்  உள்ளுறை  என்பார்.
அஃதாவது  உள்ளுறை  உவமத்திற்குச்   சிறப்புக்  கொடுத்து   நிற்றலான்
சிறப்பாயிற்று என்பார். அஃது  ஆசிரியர்கருத்தாயின்  ‘சிறப்பு’  என்பதை
உள்ளுறையின் ஒரு வகையாக ஓதுதலும் ‘ஐந்தே’ எனத்  தொகை  கூறலும்
பிழையாதலொடு ஏனையுவமமும் உள்ளுறைப் பொருளைத்தரும் எனப்பட்டு
மயக்கஞ் செய்யுமென்க. 

இவ்  ஐவகை  உள்ளுறைகளுக்கும்  உள்ள  ஒற்றுமை,  வேற்றுமைகள் வருமாறு: 

ஒற்றுமை :இவை   ஐந்தும்  அகத்திணை  மாந்தர்க்குரிய  கூற்றாகச்
செய்யுட்கண் அமைந்து வரும். 

வேற்றுமை :1) உடனுறை :  கருப்பொருள்களின்     பண்பினையும்
செயல்களையும்  அடிப்படையாகக்   கொண்டு   உவமமும்  பொருளுமாக
இயைத்துக்  கூறுதற்கு  ஏலாமல்  திறத்தியல்  மருங்கின்  தெரியுமோர்க்கே
புலப்பட்டு வரும். 

2) உள்ளுறையுவமம் :உவமும்  பொருளுமாக  ஒப்பிட்டுக்  கூறுதற்கு
ஏற்புடைத்தாகித் தெய்வ  மொழிந்த  கருப்பொருள்களின்  அடிப்படையில்
வினை,  பயன்,  மெய்,  உரு,  பிறப்பு  என்னும்  வகைப்பாடு  தோன்றத்
தெற்றெனப் புலப்பட்டு வரும். 

3) சுட்டு :இறைச்சிப் பொருள் போலச் சொற்றொடரொடு உடனுறைவு
ஆகாமல்  வரையறையின்றி  யாதானும்  ஒரு  பொருள்   பற்றிக்  கூறும்
கூற்றினுள்  கூறுவோர்   தம்   கருத்தாகக்   கொள்ளுமாறு  நுண்ணிதாக
அமைந்து வரும். 

4) நகை :முதற்பொருள்,  கருப்பொருள்  என்னும்   அடிப்படையைக்
கருதாமல் எள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு  நகையாட்டாக  நிகழும்
கூற்றினுள் குறிப்பாக அமைந்து வரும். 

5) சிறப்பு : கருப்பொருளை  அடிப்டையாகக்   கருதாமல்  ஒருவரைச்
செயற்கையாகச்   சிறப்பித்துப்  பாராட்டிக்  கூறும்  கூற்றினுள்  நுட்பமாக
அமைந்து வரும். 

சுட்டு,   நகை,   சிறப்பு   என்னும்   இவ்வுள்ளுறைகளை   இலக்கிய
உரையாசிரியன்மார்   பலரும்   செய்யுளுள்  அமைந்த  நயமாகக்  கருதி
விளக்கம் கூறிச் சென்றமையான் இவ் இலக்கணக்  கூறுகள்  புலப்படாமலும்
வழக்கிழந்தும் போயின.  இக்காலத்  திறனாய்வாளர் பலர்  இவற்றை நுண்
பொருளாக விளக்கிக் கூறுவர்.