சூ. 279 : | உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை |
(3) |
க - து : | உவமத்திற்குரியதொரு மரபு கூறுகின்றது |
பொருள் : உவமத்தின் மரபினைக் கருதுங்கால் அஃது உயர்ந்த பொருளின் மேலதாகும் என்று கூறுவர் புலவர். அஃதாவது; உவமிக்கப்படும் பொருளினும் (உவமேயத்தினும்) உவமப் பொருளின்கண் உவமத் தன்மை உயர்ந்துள்ளதாக வேண்டும் என்றவாறு. |
எ-டு : அரிமாவன்ன அணங்குடைத்துப்பின் திருமாவளவன்" எனவும் "மாரியன்ன வண்கைத் தேர்வேளாய்" எனவும் "முழவுறழ் பணைத்தோள்" எனவும் "தாமரை புரையுங் காமர் சேவடி" எனவும் வரும். இவற்றுள் பொருளினும் உவமத்தின்கண் உவமத்தன்மை மிக்கு நிற்குமாறு கண்டுகொள்க. இனிக், |
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது |
போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ |
ஊர்தர வந்த பொருநனொடு |
ஆர்புனை தெரியல் நெடுந்தகை யோரே |
[புற-82] |
என இழிந்த பொருள் உவமமாக வந்ததால் எனின்? அன்று. போழ்தூண்டு ஊசியின் விரைவு மற்றைய பொருளின் விரைவினும் மிக்கதாகலின் உவமத் தன்மை உயர்ந்ததன் மேற்றேயாமென்க. |
"உள்ளுங்காலை" என்றதனான் உவமத்திற்கு வேண்டுவன கற்பித்து உயர்ந்ததாக்கிக் கோடலுமாமென்க. |
எ - டு : | மாக விசும்பிற் றிலகமொடு பதித்த |
| திங்களன்ன நின்முகம் |
[அகம்-253] |
எனவரும். |