சூ. 284 :உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் 
(8)
 

க - து : 

சுட்டிக்   கூறாத  வழித் தொக்கு நிற்கும் உவமத் தன்மையைப்
பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளல் என்ற விதியைச்,
சுட்டிக்கூறப்பெறும் உவமைக்கும் எய்துவிக்கின்றது.
 

பொருள் :ஒரு   பொருளைப்   பற்றி  உவமங்  கூறுமிடத்து உவமத்
தன்மையும்  உவம உருபும்  உவமிக்கப்படும்  பொருளொடு  ஒத்தனவாதல்
வேண்டும்.
 

உவமையும் என எண்ணின்கண் நின்ற உம்மையை  எச்சமாக்கி உவமச்
சொல்லும் ஒத்தல்  வேண்டுமெனவும் கொள்க. என்னை? அவை அவ்வாறு
பாகுபடுத்து ஓதப்பெறுதலான் என்க.
 

ஒன்றனை உவமமாக்கிக் கூறுங்கால் அப்பொருளின் உவமத் தன்மையை
உலகத்தார்   இஃது   ஒத்தது   என  உளங்கொள்ளுமாறு தேர்ந்து கூறல்
வேண்டுமென்பது இதன் கருத்தாகும்.
 

வரலாறு : ‘மயிற்றோகை   போலும்   கூந்தல்’  என்பதன்றிக் ‘காக்கை
சிறுகன்ன கூந்தல்’ எனக் கூறின் அவ்வுவமை   உளங்கொளப்படாதென்பது.
என்னை?    செறிவும்   நெடுமையும்   கொண்டு   விளங்குங்  கூந்தலை
அவையில்லாத   காக்கைச்  சிறகொடு  ஒப்பித்துக் கூறல்  நிரம்பாமையான்
என்க. காக்கைச் சிறகன்ன கருமயிர் என அதன் நிறம் பற்றிக் கூறின் உளங்
கொள்ளப்படும் என்க.
 

இனி,   ஒத்தல்   வேண்டுமென்பதற்கு  வினைபயன்  மெய் உருவாகிய
வகையேயன்றித்  தகவான்   ஒத்தல்   வேண்டும்  என்பதும் பொருளாகக் கொள்க.   அஃதாவது   ‘வேத்தற்கு   வேங்கை   போல்வார்  வீரர்பலர்’
என்பதன்றி ‘மன்னவற்கு நாய்போல் வயவர் பலர்’ எனல் தகவாகாமையறிக.
 

இனி, உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் எனப்பாடங்   கொண்டு
உவமம்    இரட்டைக்கிளவியாயினும்     நிரல்நிறுத்தமைந்த   நிரல்நிறை
சுண்ணமாயினும்    பொருளும்   அவ்வாறே வருதல்    வேண்டும்  என உரைகூறுவார் இளம்பூரணர்.   அப்பாடத்திற்கு    அவ்வுரை  பொருந்தும்.
எனினும் ஆசிரியர் இரட்டைக்கிளவி பற்றியும் நிரல்நிறை பற்றியும்  மேலே
விதந்து  கூறலின்   அது   கூறியது   கூறலாகும். அவ்வுரையான் உவமை
பொருளொடு  ஒத்தல்  வேண்டும்  என்னும்  இன்றியமையாத விதி எய்தா
தொழிதலின் அப்பாடம் பொருந்தாமையறியலாம்.