சூ. 296 :

உவமப் பொருளின் உற்ற துணரும்

தெளிமருங் குளவே திறத்திய லான

(20)
 

க - து :

உவமத்தின்      திறப்பாடு    நோக்கிப்    பொருளுணர்ந்து
கொள்ளுமாறு கூறுகின்றது.
 

பொருள் :உவமஞ் செய்யும்  பொருளான் உவமிக்கப்படும் பொருளின்
தன்மையை அறிதலேயன்றி உணருந்  திறப்பட்டானே பொருளுக்குற்ற  பிற
நிலையெல்லாம் தெளிந்து கொள்ளும் இடமும் உளவாம்.
 

என்றது   உவமத்தின்  திறலான்  பொருளின் பல்வேறு நிலைகளையும்
அறிந்து கொள்ளலாகும் என்றவாறு.
 

எல்லா   உவமங்களும்  அவ்  ஆற்றலுடையனவாக அமையா; சிலவே
அங்ஙனம் அமைந்து   வரும்   என்பது   தோன்ற "தெளிமருங்  குளவே"
என்றும் தெளிந்துணர்தல் நுண்ணறிவுடையார்க்கே     இயலும்    என்பார்
"உணருந் திறத்தியலான" என்றும் கூறினார்.
 

எ - டு :

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

(குறள்-396)
 

என்ற   வழி,   மணற்கேணி   ஊறிப்  பெருகுதலாகிய தொழிற்றன்மையை
விளக்குதலொடு மணற்கேணி  தோண்டுதற்கு  எளிதாதல்   போலக் கல்வி,
அறிவு பெறுதற்கு எளிய வழி என்பதும்  மணற்கேணியின் ஊற்றுப்  பரந்து
பட்டு  ஒரு  சீராக  ஊறிப்  பெருகுதல் போல  அறிவு பல கோணங்களிற்
பரந்து பெருகி நிரம்பும் என்பதும்   மணற்கேணியின்  ஊற்றுநீர் தெளிவும்
தூய்மையும்  உடையதாதல்  போலக் கல்வியான்  வரும் அறிவு  தெளிவும்
தூய்மையும்  உடையதாக  விளங்கும்  என்பதும்  மணற்கேணியின்  ஊறிய
நீரைப்  பயன்கொள்ளாவழி  ஊற்றுத்  தடையுற்று  மேலே  பெருகாதவாறு
போலக்   கல்வியைப்    பயிலப்    பயிலப்    பெருகிய    அறிவினைச்
சிந்தையிலேற்றுத் தனதாக்கிப்  பயன்  கொள்ளாத  வழி  மேலும்  மேலும்
கருத்துக்கள்   தோன்றா   என்பதும் பிறவும்   அவ்வுவமத்தின்  தெரிந்து
தெளிந்து கோடலாம்.
 

"வேனிற்   புனலன்ன   நுந்தையை  நோவார்  யார்" (கலி-) என்றவழி,
வேனிற்காலத்து நீர்வேட்கைப்  பலர்க்கும் இயல்பாதலின்  வேனிற்புனலைப்
பலரும் அருந்திப் பயன் கொள்ளுதல்போல விழவுக்காலத்துத் தலைவனைத்
தொடர்புடையார் பலரும் விரும்பிப் பயன்கோடல்  இயல்பென்னும் உவமத்
தன்மையை   விளக்குதலொடு,   வேனிற்புனல்  அளவாற்   சிறியதாயினும்
அருந்துவோர்க்குப் பெரிதும் இன்பம்  பயப்பது  போலக்  காமக்கிழத்தியர்
தலைவனைத்  தழுவிக்கோடல்  சிறு பொழுதாயினும்  அவர்க்கது அவர்தம்
சோர்வு    நீக்கிப்    பெருமகிழ்வளிக்கும்   என்பதும்   வேனிற்புனலைத்
தன்னலத்தான் ஒருவரே உரிமை   கொண்டு  அருந்துதல்  உலகியலுக்கும்
ஒப்புரவிற்கும்  ஒவ்வாமை போல நாடாளும் கடமை  பூண்டுள்ள தலைவன்
தன்னாற்    புரக்கப்பெறும்  ஆடல்,  பாடல்   முதலிய   கலைநலத்தான்
மகிழ்வூட்டும்       பரத்தையர்க்கும்     அருள்    செய்தலை  மறுத்தல் ஒப்புரவாகாதென்பதும் பிறவும்  தலைவி கருதித்  துனியுறாமல்  உள்ளத்தே
ஊடல் கொண்டாளாதல் அவ்வுவமத்தான் தெளிதலாம்.
 

இனித்,  "திறத்தியலான"    என்றதனான்   உவமத்தன்மை  வெளிப்பட
நில்லாமல்  குறிப்பாக   நிற்குமிடத்தும்   உவமத்திற்கு   ஏற்ப   நில்லாது
பொருளடை  குறைந்து வருவழியும்  அவற்றை  உய்த்துணர்ந்து தெளிதலும்
பிறவும் கொள்க.
 

எ - டு :"உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து" (குறள்-667)
என்றவழி அச்சாணி என்னும் உவமத்தான் பொருளாகிய அரசன் நாடாளும்
பாரத்தைச் சுமத்தலும், வடிவாற் சிறியனாயினும்   வலியாற்  பெரியனாதலும்
உருள் தன்னிடமாக  அமைந்து  இயங்குதல்  போல ஆட்சி  தன்னிடமாக
அமைந்து  நடைபெறுதலும் பிறவும் தெளியப்படும். "மருந்துகொள் மரத்தின்
வாள்வடு மயங்கி" (புறம்-180) என்பதும் அவ்வாறு தெளியப்படும்.
 

"சாறுதலைக்  கொண்டென,  பெண்ணீற்  றுற்றென"  (புறம்-82) என்னும்
செய்யுட்கண் உவமமாகிய   போழ்துண்டூசிக்குப்   பல   அடை    கூறிப்
பொருளுக்கு   அடை   கூறாவிடினும்   அவ்வுவமத்தான் போர்த்தொழில்,
உண்டாட்டும், கொடையும்,   உரனொடு   நோக்கி   மறுத்தல்  முதலாகிய
உள்ளக்   கருத்தும்   ஒரு  கணத்துள்ளே வேந்தர்    பலரை    ஒருங்கு
வெல்லுதற்கு விரைகின்ற நிலையும்  உடைத்தாதல்   புலனாதலைக்  கண்டு
கொள்க. பிறவும் அன்ன.