சூ. 297 :

உவமப் பொருளை உணருங் காலை

மரீஇய மரபின் வழக்கொடு படுமே

(21)
 

க - து :

உவமப் பொருளை உணர்தற்குரியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :மேலைச் சூத்திரத்துக் கூறியாங்கு உவமத்தான் பொருளுக்கு
உற்றதெல்லாம்   தெளியுமிடத்து  உவமத் தன்மையும்  பிறவும் நூலின்கண்
மருவி வந்த வழக்கொடு பொருந்தித் தோன்றும்.
 

அஃதாவது     உவமத்தின்கண்    உள்ள   பல்வேறு    நிலைகளுள்
உவமிக்கப்படும் பொருளொடு  பொருந்துவனவற்றையே  தேர்ந்து தெளிதல்
வேண்டும்   என்றவாறாம்  "குன்றி  யேய்க்கும்  உடுக்கை"  என்ற  வழிக்
குன்றியைப் போல    அகத்தே    கருமை     பொருந்தியிருக்கும் எனக்
கொள்ளாமல் உடையின் சிறப்புத் தோன்ற  அதன்    செம்மை     நிறம்
ஒன்றையே கொள்ளுதலாம்.
 

"புறங்குன்றிக் கண்டனையரேனும்" என்புழி அவ் இரு  நிறங்களையன்றி
அவ்இருதிறத்தினையும்   கோடலாம்.  "மதி   போலும்  முகம்" என்ற வழி
அதன்கண் உள்ள  மாசினைக்  கருதாமல்  அதன்   ஒளியையும்    வட்ட
வடிவையும்    கோடலாம். "தாமரை   போலும்   முகம்" என்ற வழி அது
பகலில் விரிந்தும் இரவிற் குவிந்தும் நிற்கும் தொழிலைக்       கருதாமல் 
அதன் மலர்ச்சியையும்        செவ்வியையும்           கொள்ளுதலாம்.
"பாவையன்ன  பைந்தொடி" என்றவழிப்   பாவையின்   உயிரின்மையையும்
இயக்கமின்மையையும் கருதாமல்  அதன்    எழுச்சிமிக்க  கவினை மட்டும்
கோடலாம்.
 

இவ்வாறே வினை பயன் மெய்  உரு   என்னும்   உவமத்   தோற்றம்
நான்கற்கும் உரிய தன்மைகளையும் பொருள் விளக்கத்திற்குத் துணைபுரியும்
கூறுகளையும் விரித்துணர்ந்து கொள்க.