சூ. 177 : | எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார் |
(34) |
க - து : | பகைவயிற் பிரிவின்கண் தலைவர்கட் காவதோரிலக்கணம் கூறுகின்றது. |
பொருள் :பகைவயிற் பிரிந்த தலைமக்கள் மற்றாரை வெல்லுமாறுபற்றி எண்ணும் அரிய பாசறையிடத்துத் தலைவியொடு சென்று பொருந்தியிரார். |
உம்மையான் பின்முறையாக்கிய மனைவியொடும் தொன் முறை மனைவியொடும் சென்று பொருந்தியிரார் எனக்கொள்க. ‘புறத்தோர் ஆங்கட் புணர்வதாகும்’ எனமேல் வருதலின் ஈண்டுப் பெண் என்றது தலைவியை என்பது தெளிவாம். எண்ணுதலாவது தானைத்தலைவரொடும் ஒற்றர் முதலாயினரொடும் சூழ்தல். |
ஒருகை பள்ளி யொற்றி ஒருகை |
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து |
பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல் |
நகைதாழ் கண்ணி நன்வலந் திருத்தி |
அரசிருந்து பணிக்கும் முரசுமுழங்கு பாசறை |
(முல்.74-78) |
எனவருவனவற்றான் எண்ணுமாறறிக. |