சூ. 208 : | எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல் |
| கூறுத லுசாதல் ஏதீடு தலைப்பாடு |
| உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ |
| அவ்எழு வகைய என்மனார் புலவர் |
(12) |
க - து : | தோழி அறத்தொடு நிற்கும் நிலைமை ஏழுவகையாக அமையும் என்கின்றது. |
|
பொருள் : (1) பெருமையும் உரனுமுடையவனாகிய தலைவன், தலைவி மாட்டுப் பணிந்தொழுகும் இயல்பினன் என அவனை எளியவனாகக் கூறுதலும். (2) செல்வம் முதலியவற்றான் பிறரினும் மிக்கோன் என அவனை உயர்த்திக்கூறலும் (3) தலைவனும் தலைவியும் ஒருவர் ஒருவர்பால் கொண்டுள்ள தணியா விருப்பத்தைக் கிளந்து கூறுதலும் (4) வெளியாட்டு முதலியவை நிகழுமிடத்துச் செப்பும் வினாவுமாகக் களவொழுக்கத்தைக் குறிப்பாற்கூறலும் (5) களவு நிகழ்ந்தமைக்குச் சில காரணங்களை எடுத்துக்காட்டிக் கூறலும் (6) உயர்ந்த பாலது ஆணையான் அவர்தாமே தலைப்பட்டனர் எனக்கூறலும் (7) அங்ஙனம் புனைந்துரை வகையாற் கூறலேயன்றிப் பட்டாங்குக் கூறலும் என்பதொடு கூடித் தோழி அறத்தொடு நிற்றல் அவ் ஏழுவகையின எனக் கூறுவர் நூலோர். |
உண்மை செப்புங்கிளவி பட்டாங்குக் கூறல் ஆகலின் பிரித்தோதினார். அதனான் ஏனையவை குறிப்பாற் கூறப்படுபவை என்பது புலப்படும். |
எ - டு : | ‘அன்னை யறியினும் அறிக’ என்னும் அகப்பாட்டினுள் |
(110) |
| சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும் |
| வருந்திய வருத்தம் தீர யாம்சிறிது |
| இருந்தன மாக எய்த வந்து |
| தடமென் பணைத்தோள் மடநல் லீரே |
| எல்லும் எல்லின்று அசைவுமிக உடையேன் |
| மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டு யானும்இக் |
| கல்லென் சிறுகுடி தங்கின் மற்றெவனோ |
| எனமொழிந் தனனே" |
என்பது எளித்தல் பற்றி வந்தது. |
| ‘அன்னாய் வாழி வேண்டன்னை’ | (48) |
| என்னும் அகப்பாட்டினுள் | |
| நின்மகள் உண்கண் பண்மாண் நோக்கிச் | |
| சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே | |
| பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து | |
| அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் | |
| மகனே தோழி என்றனள் | |
| அதனளவு உண்டுகோள் மதிவல் லோர்க்கே | |
என்பது ஏத்தல் பற்றி வந்தது. |
| காமர் கடும்புனல் என்னும் குறிஞ்சிக்கலியுள் | (39) |
| "பூணாகம் உறத்தழீஇப் போத்தந்தான் அகனகலம் | |
| வருமுலை புணர்ந்தன என்பதனான் என்தோழி | |
| அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே" |
என்பது வேட்கையுரைத்தல் பற்றி வந்தது. |
| முருகயர்ந்து வந்த முதுவாய் வேல |
| சினவல் ஓம்புமதி வினவுத லுடையேன் |
| பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு |
| சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி |
| வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய |
| விண்டோய் மாமலைச் சிலம்பன் |
| ஒண்டா ரகலமும் உண்ணுமோ பலியே |
(குறு-362) |
என்பது கூறுதற்கண் உசாதல் பற்றி வந்தது. |
| அன்னாய் வாழிவேண் டன்னை என்னை |
| தானும் மலைந்தான் எமக்குந்தழை யாயின |
| பொன்வீ மணியரும்பினவே |
| என்ன மரங்கொலவர் சார லவ்வே |
(ஐங்-201) |
என்பது தழை தந்தான் என்னும் ஏதீடு பற்றி வந்தது. |
| சுள்ளி சுனைநீலம் சோபாலிகை செயலை |
| அள்ளிஅலகத்தின் மேலாய்ந்து - தெள்ளி |
| இதணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை |
| உதணாற் கடிந்தான் உளன் |
(திணை-நூற்-2) |
என்பது களிற்றினான் வந்த ஏதங் காத்தான் என்னும் ஏதீடு பற்றி வந்தது. |
| அவரை அருந்த மந்தி பகர்வர் |
| பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் |
| பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன் |
| தொல்கேள் ஆகலின் நல்குமல் இவட்கே |
(ஐங்-271) |
என்பது பாலதாணையான் தலைப்பட்டமை பற்றி வந்தது. |
| கன்மழை பொழிந்த அதன்கண் அருவி |
| ஆடுகழை யடுக்கத்து இழிதரும் நாடன் |
| பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு |
| முயங்காது கழிந்த நாள்இவள் |
| மயங்கிதழ் உண்கண் கலுழும் அன்னாய் |
(ஐங்-220) |
என்பது உண்மை செப்பல் பற்றி வந்தது. |
அறத்தொடு நிற்றற்கண் இவ்வகைமை ஏழும் தனித்தனியேயும் தம்முள் கலந்தும் வருமெனக் கொள்க. |