சூ. 224 :

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்

(28)
 

க - து :

அகப்பொருளின்கண்   இன்பம்      என்பது      இதுவெனப்
பொருள்மரபு கூறுகின்றது.
 

பொருள் :இன்பமும்   அறனும்   பொருளுமென்   றாங்கு   (கள-1)
எனப்பட்டவற்றுள்  இன்பம்  என்னும்  நுகர்ச்சிதான்  உடம்பும் உணர்வும்
உடைய   எல்லா  உயிர்கட்கும்  ஒன்றனொடுஒன்று  பொருந்தி   நிகழும்
பெருநசையினை உடையதாகும்.
 

என்றது : ஈதல்   முதலிய  அறங்களானும்  கல்வி,   கேள்வி,   தவம்,
நோன்பு  முதலிய  பொருள்களானும் எய்துவதும்  இன்பமேயாயினும்  அவ்
இன்பம்   மக்கட்    பிறப்பினர்க்கன்றி    ஏனைய     உயிர்கட்கெல்லாம்
பொதுவாகாமையான்   ஈண்டு   இன்பம்  என்றது   உணர்வான்   ஒன்றி
மெய்யுற்று   நுகரும்   இன்பமே   என்றவாறு.  இதனான்  அகப்பொருள்
ஒழுகலாற்றின் பொருளியல்பு உணர்த்தப்பட்டது.