சூ. 290 :

எள்ள விழையப் புல்லப் பொருவக்

கள்ள மதிப்ப வெல்ல வீழ

என்றாங் கெட்டே பயனிலை உவமம்

(14)
 

க - து :

பயன் உவமத்திற்கு ஏற்கும் உவமச்சொல் இவை என்கின்றது.
 

பொருள் :எள்ள  முதலிய  எட்டும்  பயனுவமத்திற்கு ஏற்கும் உவமச்
சொற்களாம்.
 

எ-டு:

1.எழிலிவானம் எள்ளினன் வரூஉம் கவிகை
வண்மைக் கடுமான் றோன்றல் 
(இளம்-மேற்)

 

2.மழைவிழை தடக்கை வாய்வாளெவ்வி(")

 

3.புத்தேளுலகிற் பொன்மரம் புல்ல(")
4.விண்பொருபுகழ் விறல் வஞ்சி(புறம்-11)
5.கார்கள்ள வுற்ற பேரிசையுதவி(இளம்-மேற்)
6.இருநிதிமதிக்கும் பெருவள்ளீகை(")
7.வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய்
கூந்தல் மாஅயோளே
(ஐங்-324)
8.விரிபுனற் பேர்யாறு வீழயாவதும்
வரையாதுசுரக்கும் உரைசால் தோன்றல்(இளம்-மேற்)
 

எனவரும்.
 

இவை பயனுவமத்தின் பாலாதற்குக் காரணம் வருமாறு :
 

என்ளுதல் என்பது  இழிவு செய்தலாகலானும், விழைதல்  என்பது  மிக
விரும்புதலாகலானும்  புல்லுதல்   என்பது   புன்மையாதல்   ஆகலானும்
(தழுவுதல்  என்னும் பொருளில் வரும்  புல்லுதல்  வேறு; இது வேறு  என
அறிக) பொருவுதல் என்பது மாறுகொள்ளுதலாகலானும் கள்ளுதல்  என்பது
மயங்குதலாகலானும்    மதித்தல்  என்பது  வியத்தற்  பொருட்டாகலானும்
வெல்லுதல்  மேற்படுதலாகலானும் (வாகையுள்  இதனை  முல்லை என்பார்
சிலர்)  வீழ்தல் என்பது   தாழ்வுறுதலாகலானும்   (விரும்புதல்   என்னும்
பொருள்படும்   வீழ்தல் வேறு;  இது   வேறு) யாவும்   அவ்வச்செயலான்
வரும்   பயனை     வெளிப்படுத்தலின்      இவை    பயனுவமத்திற்குச் சிறந்துரிமையாயின.