உரையாசிரியன்மார் ஏனை என்னும் இடைச்சொல்லினை ஒருமைக்குரியதாகக் கருதி இச்சூத்திரம் பொருள்வயிற் பிரிவுக்குக் கூறியதாகக் கொண்டு தூது, துணை, காவல் ஆகியவற்றை மேலைச் சூத்திரத்துள் அடக்குவர். தூதும், காவலும், துணையும் வேந்தரல்லாதார்க்கும் உரியவாகலின் அதன்கண் அடக்குதல் மயங்க வைத்தலாய் முடியும். ஏனை என்னும் இடைச்சொல் ஏனையது, ஏனையவை, ஏனையவன், ஏனையவள், ஏனையவர் என ஐம்பாற்கும்முதனிலையாக வருதலின் அஃது முதனிலையளவாய்ப் பொதுப்பட நிற்கும் எனக் கோடலே நேரிதாகும். |