என்றது :உவமப்போலி ஏனோர் கூறுமிடத்து அவ்வந் நிலத்துக் கருப்பொருள்களேயன்றிப் பிறநிலத்துக் கருப்பொருள் பற்றியும் அமைந்து வரும் என்றவாறு "எல்லாம்’’ என்பது முழுது என்னும் பொருள்பட வந்த உரிச்சொல். |
எ - டு: | பெருவரை மிசையது நெடுவெள் ளருவி |
| முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பி |
| சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப ! |
| நோத கன்றே காமம் யாவதும் |
| நன்றென உணரார் மாட்டும் |
| சென்றே நிற்கும் பெரும்பேதை மைத்தே |
(குறு-78) |
என்னும் பாங்கன் கூற்றினுள் உயர்ந்த மலையிற்றோன்றிய அருவி, தாழ்ந்த பக்கமலையாகிய சிலம்பின்கண் இழிதரும் என்றது உயர்குலத்திற் பிறந்த தலைவனது உள்ளம் தாழ்ந்த குலத்தினளாகிய வேட்டுவமகள்பாற் சென்றது என்னும் உள்ளுறை பிறப்புப்பற்றித் தோன்றியவாறும், அஃது அக் குறிஞ்சிக்குரிய கருப்பொருளே பற்றி நிற்குமாறும் கண்டு கொள்க. |
ஏனை நிலத்துக் கருப்பொருள் கலந்து வருவனவும் பாகன், பாணன் முதலானோர் கூறும் உவமப்போலியும் வந்தவழிக் கண்டு கொள்க. |
‘எம்வெங்காமம் இயைவதாயின்’ என்னும் செய்யுட்கண், |
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத் |
துய்த்த வாய துகள்நிலம் பரக்கக் |
கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி |
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்" |
(அக-15) |
எனவரும் செவிலி கூற்றினுள் செய்யுளின் திணையாகிய பாலைக்குரிய கருப்பொருளன்றி முல்லைக்குரிய பொருள்பற்றி உள்ளுறை தோன்றியவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன. |