சூ. 205 :

ஒருசிறை நெஞ்சமொ டுசாவுங் காலை

உரிய தாகலும் உண்டென மொழிப

(9)
 

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் :ஒருமருங்கு தலைவி தன் நெஞ்சத்தொடு வினவி உரைக்குங்
காலத்து,  மேல்,  இல்லை  எனப்பட்ட கிழவோன் உறையுமிடஞ் சேர்தல்
உரியதாகலும் உண்டு என்று கூறுவர் புலவர்.
 

ஒரு   சிறை   = ஒரு   கூறு.  என்றது  செயற்படுதலின்றிக் கூற்றாக
நிகழுமிடத்து என்றவாறு.
 

எ - டு :

கோடீர் இலங்குவளை நெகிழ நாளும்

பாடில கலுழும் கண்ணொடு புலம்பி

ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே

எழுஇனி வாழியென் நெஞ்சே முனாது

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்

வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே

(குறு-11)
 

"ஒருசிறை  நெஞ்சமொடு"   எனவே,  மற்று   ஒருசிறை  தோழியொடு
உசாவுங்காலை உரியதாகலும் உண்டெனக் கொள்க.
 

எ - டு :

அருங்கடி யன்னை காவல் நீவி

பெருங்கடை யிறந்து மன்றம் போகி

பகலே பலருங் காண வாய்விட்டு

அகல்வயற் படப்பை அவன்ஊர் வினவி

சென்மோ வாழி தோழி" ..... .....

(நற்-365)
 
எனவரும்.