|
சூ. 223 : | ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் | | வருவகை தாமே வழக்கென மொழிப | (27) | க - து : | இசை திரிந்திசைக்கும் ஒருசார் கிளவிகள் பற்றிய மரபு கூறுகின்றது. | பொருள் :இருதிணை ஐம்பாலுள் ஒருபால் மேல்வைத்துக் கூறப்பெறும் ஒருசார் பொருள்கள் மற்றைய பால்களிடத்தும் பொருந்தி வரும்முறைமை சான்றோர் வழக்கெனக் கூறுவர் புலவர். | என்றது : ஈவோன் புகழ் பெறுவான் என்றவழி ஈவோள் புகழ் பெறுவாள், ஈவோர் புகழ் பெறுவார் என அப்பொருள் உயர்திணை மூன்றுபாற்கும், நஞ்சுண்டான் சாவான் என்றவழி நஞ்சுண்டாள் சாவாள், நஞ்சுண்டார் சாவார், நஞ்சுண்டது சாகும், நஞ்சுண்டன சாகும் என இருதிணை ஐம்பாற்கும் பொருந்தி வரும் என்றவாறு. |
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி | எல்லா உயிரும் தொழும்" | (குறள்-260) | "நிலத்தறைந்தான் கைபிழையா தற்று"
| (குறள்-307) | என வருபவை இசை திரிந்திசைப்பினும் அசைதிரியாமையைக் கண்டு கொள்க. | இஃது ஆகுபெயர் முதலாய குறிப்புமொழிகளுள் அடங்காமையானும் இலக்கணவழக்குப் போலப் பயின்று வருதலானும் அகமும் புறமும் பற்றி ஓதப்பெற்ற இலக்கணங்களுள் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், வேந்தன், அகத்தோன், புறத்தோன் முதலானோரை ஒருமையாற் கூறியிருப்பினும் அவ்வொழுகலாற்றினை மேற்கொள்வார் யாவர்க்கும் அவ்விலக்கணங்கள் உரியவாம் என உரைத்தல் வேண்டுதலானும் சொல்லமைவும் பொருளமைவும் பற்றி ஒருங்கு கூறும் இவ்வியலின்கண் வைத்துக் கூறப்பெற்றதென்க. | இதற்கு உரையாசிரியன்மார் கூறும் பொருள் குன்றக்கூறலாக உள்ளமையும் இன்றியமையாத இவ் இலக்கணவிதி அதனாற் பெறப்படாமையும் காண்க. | ஏனை என்பது தத்தங் குறிப்பின் பொருள் தருவதோர் இடைச் சொல்லாகும் என்பதும் அஃது பால் வரைந்துணர்த்தாது என்பதும் ஏனது, ஏனைய என்பவை அச்சொல்லடியாகப் பிறந்த பெயர்ச்சொற்கள் என்பதும் எழுத்ததிகார உரையுள் கண்டு கொள்க. |
|