சூ. 311 : | ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே |
(35) |
க - து : | உவமத்தை மறுத்துரைத்தலும் உவமவிலக்கண வழக்கு என்கின்றது. |
பொருள் :உவமம் வேறுபட வருதலேயன்றி உவமத்தைப் பொருளொடு பொருந்தாதென உவமத்தன்மையை நீக்கிக் கூறலும் மேற்றொட்டு மரபாக மருவிய இலக்கணமேயாம். |
என்றது : ஒப்புடைய பொருளை உவமமாக எடுத்துக்கொண்டு அதன் உவமத்தன்மையை ஒவ்வாதென மறுத்து நீக்கிக் கூறலும் உவமத்தோற்றமேயாம் என்றவாறு. |
எ - டு : | தவள முத்தங் குறுவாள் செங்கண் |
| குவளை யல்ல கொடிய கொடிய |
(சிலம்பு-கானல்வரி) |
| புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் |
| வெள்வே லல்ல வெய்ய வெய்ய |
(சிலம்பு-கானல்வரி) |
எனவரும். இவற்றுள் கண்களுக்கு மேற்கோளாக எடுத்துக் கொள்ளப்பட்ட குவளையும், வேலும் முறையே, அவள் கண்கள் கொண்டு நிற்கும் கொடுமையையும் வெப்பத்தையும் பெறாமையான் ஒரீஇக் கூறியமையும், கொடுமையையும் வெப்பத்தையும் அவள் கண்கள் நீக்கியவிடத்து அவை உவமமாக மருவுதற்கு ஒக்குமெனக் கொள்ளவைத்தமையும் கண்டு கொள்க. |
| காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் |
| மாணிழை கண்ணொவ்வே மென்று |
(குறள்-114) |
| மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் |
| பலர்காணத் தோன்றல் மதி |
(குறள்-1119) |
என வருவனவும் அதன்பாற்பாடும். பிறவும் இவ்வாறு வருவனவற்றை ஓர்ந்தமைத்துக் கொள்க. |