சூ. 110 :

காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்

நாணும் மடனும் பெண்மைய வாகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா தவள்வயி னான

(18)
 

க - து :

இது    முதலாக     மூன்று    சூத்திரங்களான்   களவின்கண்
தலைவிக்குரிய     சிறப்பியல்புகள்    ஆமாறு       கூறுவார்.
இச்சூத்திரத்தான்  தலைவனொடு தலைவி நேர்முகமாகக்   கூற்று
நிகழ்த்தாமைக்குக்     காரணம்      கூறும்        முகத்தான்
தலைவிக்காவதோரியல்பு கூறுகின்றார்.
 

அஃதாவது   இயற்கைப்   புணர்ச்சியின்கண் தலைவன் இடம் பெற்றுத்
தழாஅல்,    இடையூறுகிளத்தல்    முதலாகத்    தனது   நிலைமையைக்
கிளத்துமிடத்தும், தோழியிற் கூட்டத்தின்கண் ஊரும்  பேரும்   கெடுதியும்
பிறவும் நீரிற்   குறிப்பின்   நிரம்பக்  கூறுமிடத்தும், தலைவி  நேர்க்கூற்று
நிகழ்த்தாமைக்குக்  காரணம்   அவள்   மாட்டமைந்துள்ள    பெண்மைக்
குணங்களா மென்றவாறு.
 

அவ்வாறாயின்   இதனை    "இருவகைக்குறி பிழைப்பாகிய விடத்தும்"
என்னும்  சூத்திரத்தின்  முன்னர்  வைத்துக்  கூறாதது  என்னையெனின்?
தோழியிற்  புணர்வு  அதிகாரப்பட்டு  நின்றமையான் தோழியிற் கூட்டத்து
நிகழும்    தலைவிக்குரிய    கிளவிகளை    இடையீடின்றிக்    கூறுதல்
முறைமையாதலின் அங்ஙனங் கூறினார்.
 

பொருள்:களவொழுக்கத்தின்கண்   நிலை  பெற்றுவரும்    நாணும்,
மடனும்   பெண்மைக்   குரியவையாகலின்,   குறிப்பானும் ஆண்டுநிகழும்
சூழலானுமல்லது   தலைவியது   உள்ளத்து   வேட்கை கூற்று மொழியாகி
நெறிப்பட அவளிடத்து நிகழாது.
 

"அன்பொடு    புணர்ந்த   ஐந்திணை   மருங்கின்   காமக்  கூட்டம்"
என்றதனான்   ஈண்டுக்   களவொழுக்கத்தினைக்  "காமத்திணை" என்றார்.
திணை = ஒழுக்கம்.
 

வேட்கைமிக்க   வழியும்   உண்மை    புலப்பாடாகிய வழியும் அச்சம்
நீங்குமாதலின்,  அதனைத்   தவிர்த்து   எஞ்ஞான்றும்  உயிர் உணர்வாக
இலங்கும் "நாணும்  மடனும்  பெண்மைய"  என்றார். குறிப்பினான் தலைவி
தன் வேட்கையைப் புலப்படுத்தும் என்பதைத்,
 

தன்னுறு வேட்கைக் கிழவன்முற் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை

பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப என்பதனான் அறிக.

ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியும்

கரும நிகழ்ச்சி இடனென மொழிப

(செய்-193)
 

என்பதனான். இடம் என்றது கரும நிகழ்ச்சியை என்க.
 

இனி  வேட்கை  மீதூர்ந்த  வழி நாணும் மடனும்  நீங்காவோ? எனின்,
அதற்கு விளக்கம் வரும் சூத்திரத்தாற் கூறுப.
 

"வேட்கை  நெறிப்பட  வாராது" என்பதே பாடம் என்பதனை "வேட்கை
புலப்பட  நிகழாது"  என்னும்  இளம்பூரணர் உரையான் தெளிக. இங்ஙனம்
உரையை   ஊன்றி   நோக்காமல்,   இளம்பூரணர்  உரைப்பதிப்புள்  பல
இடங்களில்   பாடப்  பிழைகள்  களையப்படாமல் உள. நச்சினார்க்கினியர்
கொண்ட பாடம் "வாரா" என்பது.
 

எ - டு :

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்திற்

செம்பாகம் அன்று பெரிது.

(குறள்-1092)
 

கண்ணிறைந்த காரிகை காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

(குறள்-1272)
 

இவை போல்வன குறிப்பினான் வேட்கை புலப்படுத்துவனவாம்.
 

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்

(குறள் - 1093)
 

இவ்வாறு வருவன இடத்தினாற் புலப்படுத்துவனவாம்.