தலைவி உரைமொழியாற் புலப்படுத்தாத வழி அவளது வேட்கையைத் தலைவன் உணருங்கொல்? கூற்றினாற் புலப்படுத்துமாயின் நாணும் மடனும் வரையிறவாது நிற்குங்கொல்? என ஐயம் நிகழுமன்றே? அது நோக்கி ஆண்டுத்தலைவி கூற்று இவ்வாறு நிகழும் என்பாராய்க் "காமஞ் சொல்லா நாட்ட மின்மையின்" என்றார். நாணும் மடனுமாகிய பெண்மைக் குணங்கள் தலைவற்கு இன்பஞ் செய்யும் என்பார். "ஏமுற இரண்டும் உள" என்றார். இஃது அகப்பொருள் நூலோர்க்கு ஒப்ப முடிந்த கருத்தென்பார் "என மொழிப" என்றார். |