சூ. 121 :

காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின்

தாமே தூதுவர் ஆதலும் உரித்தே

(29)
 
க - து :

களவுக் காலத்துத் தலைவன் தலைவிக்காவதோர் இயல்பு
கூறுகின்றது.
 

பொருள் : களவின்கண் தலைவனும்   தலைவியும்   கூடும்  கூட்டம்
தனிமையாற்   பொலிவுறுதலான்   பாங்காவார்  இன்றித்ஒருவர்க்கொருவர்
தாமே தூதுவராக அமைதலும் உரித்தாகும்.
 

பாங்கர் ஏதுவாகாவழித் தலைவனது   பெருமையும் தலைவியது நாணும்
சிறப்புறுதலின் அந்நிலை   பொலிவுடையதாயிற்று.   ஆண்டுத் தூதுமொழி
களஞ்சுட்டுதலும் குறிசெய்துணர்த்துதலுமாகும்.
 

எனவே  பாங்கனால்    இடந்தலைப்படலும்      பாங்கி இடை நின்று
கூட்டுதலுமாகிய பாங்கர்கூட்டம் நிகழாமலேயே இடந்தலைப்  பாட்டின்பின்
வரைந்து கோடலும் உண்டென்பது இதனாற் புலப்படும்.