சூ. 119 :

கிழவோ னறியா அறிவினள் இவளென

மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிளவி அறிதலும் உரித்தே

(27)
 

க - து : 

இதுவும்  தாயர்க்குரியதொரு  கிளவியாமாறு  கூறுகின்றது.  இது
சான்றோரைவினவி அமைதிகொள்ளும்  நிலைமைத்    தாகலின்
பிரித்துக் கூறப்பட்டது.
  

பொருள் : குடிமை  முதலாயவற்றான் இவன் தனக்குத் தக்கான் எனத்
தேர்ந்து  கொள்ளற்கு  நிரம்பாத  அறிவினை  உடையள்    எனக்கருதிக்
குற்றந்தீர்ந்த   சிறப்பினையுடைய   அந்தணர்   முதலாய சான்றோரிடத்து
இவள் வாழ்க்கை   எந்நிலைமைத்  தாகும்   என ஐயுற்று வினவிக் கூறும்
கிளவியானே   தலைவியது  நிலையை   அறிந்து   கோடலும் மேற்கூறிய
தாயர்க்குரித்தாகும்.
 

அஃது   உடன்    போய   தலைவியைத்   தேடிச்சென்ற    செவிலி
முக்கோற்பகவரை   வினவியாங்கு (கலி-8)         வினவிக்     கலக்கம்
நீங்குதலாகவரும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க.