சூ. 188 :

கிழவி நிலையே வினையிடத் துரையார்

வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்

(45)
 

க - து : 

இது வாயில்களின் கூற்றுப்பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்  வினைவயிற்பிரிந்து சென்று வினை நிகழ்த்தும்
அவ்விடத்தின்கண்  சென்று  வாயிலார் தலைவியது நிலையினை உரைத்தல்
செய்யார். அவன்  அவ்வினையை  முடித்த வென்றிக்காலத்து அவர் கூற்று
விளக்கமுறத் தோன்றும்.
 

வினையிடத்துச்  சென்றுரைப்பின்    அஃதவற்கு   இடையூறாமாதலின்
‘உரையார்’ என்றும்  வினைமுடித்த பின் அவ்வென்றிக்  களிப்பால் அவன்
உள்ளம் விழா முதலியவற்றின் மேற்செல்ல வொட்டாமல் எடுத்துரைத்தலின்
விளங்கித் தோன்றும் என்றும் கூறினார். இதற்கு உரையாசிரியன்மார் கூறும்
உரை விளக்கம் பாசறைப் புலம்பலின் பாற்படுமென்க.